தேசம் நெட் -arulmolivarman : உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலும், பயங்கரவாதி சஹ்ரான் தொடர்பிலும், அப்போதைய குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்னவுக்கு 2019 ஜனவரி மாதம் முதல் 2019 ஏப்ரல் 21ஆம் திகதி வரை 13 புலனாய்வு தகவல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கைகைளை வெளியிடும் இன்றைய விசேட ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இந்த 13 புலனாய்வு தகவல்களும் அப்போதைய குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்னவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர் தற்போதைய அரசாங்கத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருக்கின்றார்.
உயிர்த்த ஞாயிறுதாக்குதல்கள் தொடர்பான அனைத்து விபரங்களும் ரவி செனவிரத்னவிற்கு முன்கூட்டியே தெரிந்திருந்தது.
கிடைக்கப்பெற்ற தேசிய மற்றும் சர்வதேச புலனாய்வு தகவல்களுக்கமைய ரவி செனவிரத்ன செயற்பட்டிருந்தால் மிலேட்சத்தனமான குண்டுத்தாக்குதலை தடுத்திருக்கலாம்.
நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட குழு வழங்கிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களையே நான் தற்போது முன்வைக்கின்றேன்.
இந்த விசாரணை அறிக்கையானது, ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ஐ.இமாம் மூலம் தயார் செய்யப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் பிரித்தானியாவின் சனல் 4 ஊடகம் முன்வைத்துள்ள 25 குற்றச்சாட்டுக்களின் உண்மைத் தன்மையை அறியும் வகையில், சனல் 4இன் குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.
இதன்படி, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் போது பொலிஸார் மற்றும் புலனாய்வுத் துறையினர் ஆகியோர் ஏதேனும் தவறிழைத்துள்ளார்களா என்பதை ஆராயும் வகையில் இந்த அறிக்கை அமைந்துள்ளது.
இந்த அறிக்கையின் 40வது பக்கத்தில் ரவி செனவிரத்னவுக்கு, 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 09ஆம் திகதி தவ்ஹித்ஜமாத் என்ற அமைப்பு கத்தோலிக்கர்களை இலக்கு வைத்து தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தப் போவதாக வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக