புதன், 2 அக்டோபர், 2024

ஈரான் இஸ்ரேல் அதிரடி தாக்குதல் ஈரானின் இத்தனை நாள் அமைதிக்கு காரணம் இதுதான்!

 tamil.oneindia.com  -Halley Karthik :  ஒரே இரவில் தலைகீழாய் மாறிய மத்திய கிழக்கு! ஈரானின் இத்தனை நாள் அமைதிக்கு காரணம் இதுதான்!
பெய்ரூட்: ஹமாஸை அழிப்பதாக கூறி, பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதல்களை வேடிக்கை பார்த்து வந்த ஈரான், தற்போது அதிரடியாக பதிலடி கொடுத்திருக்கிறது. இருப்பினும் ஈரான் அரசு நேரடியாக இன்னும் போரில் இறங்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அன்று அக்.7ம் தேதி 2023ம் வருடம். அதிகாலையில் யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் முழுவதும் அலாரம் ஒலித்தது. பொழுது விடிந்து, செய்தி சேனலை பார்த்த உலக மக்களுக்கு ஒரே அதிர்ச்சி. 'இஸ்ரேல் தலைநகர் மீது தீவிரவாதிகள் தாக்குதல். குழந்தைகள், பெண்கள் கடத்தல்' என்று ஒவ்வொரு செய்தி ஊடகங்களும் அவர்களுக்கே உரித்தான டோனில், ஹமாஸ் தாக்குதலை விவரித்தன.


israel lebanon iran

இந்த தாக்குதலில் 1000க்கும் அதிகமான இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் உயிரிழந்தவர்களின் சடலங்களின் புகைப்படங்கள் எந்த செய்தி ஊடகத்திலும் வெளியாகவில்லை.

எங்களை தாக்கிய ஹமாஸை முற்றிலுமாக ஒழிப்போம் என்று கூறி, பாலஸ்தீனம் மீது போரை தொடங்கிய இஸ்ரேல் ஏறத்தாழ ஓராண்டாக இதை சாத்தியப்படுத்த முடியாமல் தவித்து வருகிறது. மறுபுறம் பாலஸ்தீன பொதுமக்கள் பல ஆயிரம் கணக்கில் உயிரிழந்துள்ளனர். இதுவரை 42 ஆயிரம் சடலங்களுக்கு அந்நாட்டு மக்கள் இறுதி சடங்கு செய்துள்ளனர். போரை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று, அதன் நட்பு நாடான அமெரிக்காவில் மக்கள் போராட்டங்கள் வெடித்தன.

இருப்பினும் போர், உயிரிழப்பு, பசி, தொற்று நோய், உயரும் பலி எண்ணிக்கை என காட்சிகள் மாறாமல் இருந்தன. ஹமாஸ் படையினருக்கு ஹிஸ்புல்லா அமைப்பு வெளியிலிருந்து உதவி வந்தது. இந்த படைகள் அவ்வப்போது இஸ்ரேல் படைகள் மீது தாக்குதல் நடத்தி வந்தன. ஒரு கட்டம் வரை பொறுத்த பார்த்த இஸ்ரேல், ஹிஸ்புல்லா மீது தாக்குதலை தீவிரப்படுத்தியது. அதன் சுப்ரீம் தலைவர் உட்பட, பல முக்கிய தளபதிகளை வெறும் 2 நாட்களில் அழித்தொழித்தது.

மட்டுமல்லாது, லெபனான்தான் எல்லாத்துக்கும் காரணம் என்று கூறி, அந்நாட்டில் தாக்குதலை தொடங்கியது. இன்று அல்லது நாளை தரைவழியாக ஊடுருவ இருப்பதாகவும் அறிவித்தது இஸ்ரேல்.

இதுதான் உண்மையான போருக்கான தொடக்கப்புள்ளி. ஹமாஸ் என்பது ஒரு சிறிய படை. ஆனால், இஸ்ரேல் இப்போது கால் வைத்திருப்பது ஹிஸ்புல்லா மண்ணில். ஹிஸ்புல்லா, ஈரான் ஆதரவு படையாகும். இதுதான் லெபனானுக்கு சுதந்திரத்தை வாங்கி கொடுத்தது. ஏற்கெனவே பாலஸ்தீனத்தை மண்ணோடு புதைத்தது மட்டுமல்லாமல் இப்போது லெபனான் எல்லையில் நுழைந்திருப்பது சர்வதேச போர் விதிகளை மீறும் செயலாகும். ஆக லெபனானுக்கு ஆதரவாக ஈரான் களத்தில் குதித்திருக்கிறது.

பாலஸ்தீன படுகொலைகளுக்கும், ஹாமஸ் தலைவர் படுகொலைக்கும் பதிலடி கொடுக்காமல் ஈரான் மௌனமாக இருந்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அங்காளி, பங்காளியை வெளியில் இருந்து ஒருவன் போட்டு தள்ளிக்கொண்டிருக்கிறான், அதை பார்த்துக்கொண்டு சும்மா இருப்பதா? என ஈரான் மக்களே ஆதங்கப்பட்டனர்.

ஆனால் ஈரானின் கணக்கு வேறு ஒன்றாக இருந்தது. அதாவது, பிரிக்ஸ் (BRICS) மாநாடு முடியும் வரை எந்த ராணுவ நடவடிக்கையிலும் இறங்குவதில்லை என்பதுதான் ஈரானின் நிலைப்பாடு. காரணம் இன்னும் சில நாட்களில் நடக்க உள்ள இந்த மாநாட்டில் துருக்கி பிரிக்ஸில் இணைய இருக்கிறது. இந்த சமயத்தில் ஈரான் முழுவேகத்தில் பதிலடி நடத்தினால், அதற்கு சப்போர்ட் செய்ய ரஷ்யாவும் களமிறங்க வேண்டி இருக்கும். இது கொஞ்சம் தர்ம சங்கடமான நிலை.

அதே நேரம் ஈரானுக்கு கைகொடுக்கவில்லையெனில், துருக்கி உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவை நம்பாது. இது பிரிக்ஸ்-ஐ வளர்ச்சியை முடக்கிவிடும். எனவேதான், மாநாடு முடியும் வரை ஈரான் அமைதியாக இருந்து வந்தது. நேற்று இரவு நடந்த தாக்குதல் கூட, ஈரான் அரசின் முழு ஒத்துழைப்பில் நடக்கவில்லை. ஈரானின் புரட்சிப்படையும், ஈரான் சுப்ரீம் தலைவரும் சேர்ந்துதான் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். ஈரான் அதிபர் இதில் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

பிரிக்ஸில் இணைந்து, சர்வதேச நாடுகளுடனான ஒத்துழைப்பை மேம்படுத்துவது, மேலும் சில நாடுகளை இணைத்து பிரிக்ஸை வலிமைப்படுத்துவதை நோக்கிதான் ஈரானும், ரஷ்யாவும் நகர்ந்து வருகின்றன. இதனை சீர்குலைத்து, வான்டடாக போருக்கு இஸ்ரேல் அழைப்பதாக ஈரான் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

எது எப்படி இருந்தாலும், அடுத்த நாள் காலையில் கண் விழிக்கும் போது, இங்கே குண்டு விழுந்து, இவ்வளவு மக்கள் பலி என்கிற செய்தியை கேட்காத நாளே, உலக மக்களுக்கு நிம்மதியான நாளாக இருக்க முடியும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக