வெள்ளி, 18 அக்டோபர், 2024

‘ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டார்’: இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு

BBC Tamil  :  கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழு நடத்திய தாக்குதலின் மூளையாகச் செயல்பட்டவர் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார். அந்தத் தாக்குதலைத் தொடர்ந்து அவர் தலைமறைவான நிலையில் இஸ்ரேலிய படையினர் ஓராண்டுக்கும் மேலாக அவரைத் தேடி வந்தனர்.
ஹமாஸ் தலைவரான, 61 வயதான சின்வார், காஸா முனையில் பூமிக்கு அடியில் அமைந்துள்ள சுரங்கப்பாதைகளில் மெய்க்காப்பாளர்கள் மற்றும் இஸ்ரேலில் இருந்து பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டவர்களை “மனிதக் கேடயங்களாக” பயன்படுத்தி பெருமளவு காலத்தைக் கழித்ததாகக் கூறப்படுகிறது.



இந்நிலையில், தெற்கு காஸாவில் இஸ்ரேல் படையினர் ரோந்து மேற்கொண்டபோது அவர் கொல்லப்பட்டார். அப்போது குறைவான காப்பாளர்களே அங்கிருந்தனர். அங்கு பணயக் கைதிகள் யாரும் இல்லை.

அவர் கொல்லப்பட்டது குறித்த மேலதிக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. சின்வார் கொல்லப்பட்டது குறித்து நாங்கள் இதுவரை அறிந்த தகவல்களை இங்கு தொகுத்துள்ளோம்.

கடந்த புதன்கிழமையன்று ரஃபா நகரில் அமைந்துள்ள தல்-அல்-சுல்தான் பகுதியில் 828வது பிஸ்லாமக் (Bislamach) படையணியினர் ரோந்து மேற்கொண்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

அப்பகுதியில் ஹமாஸ் ஆயுதக்குழுவை சேர்ந்த மூவரின் இருப்பிடம் அடையாளம் காணப்பட்டு, அவர்களுடன் இஸ்ரேல் துருப்புகள் சண்டையிட்டுள்ளன. இதில், அவர்கள் மூவரும் கொல்லப்பட்டனர்.

அந்த நேரம் வரை குறிப்பிடத்தக்க மோதலாக இது கருதப்படவில்லை. மேலும், வியாழக்கிழமை காலை வரை இஸ்ரேலிய படையினர் அந்தப் பகுதிக்கு மீண்டும் செல்லவில்லை.

இந்தச் சண்டையில் இறந்தவர்கள் குறித்து பரிசோதனை செய்யும் போதுதான், அங்கிருந்த ஒரு சடலம், நம்ப முடியாத வகையில் ஹமாஸ் தலைவரின் தோற்றத்தை ஒத்திருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது.

திடீர் தாக்குதல் நிகழலாம் என்ற சந்தேகத்தால், அச்சடலம் அங்கேயே விடப்பட்டு, விரல் மட்டும் அகற்றப்பட்டு பரிசோதனைக்காக இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டது.

பின்னர் அப்பகுதி பாதுகாப்பானது எனத் தெரிய வந்ததை அடுத்து, அங்கிருந்து அந்தச் சடலம் இஸ்ரேலுக்கு கொண்டு செல்லப்பட்டது.

இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி, “அவர் (யாஹ்யா சின்வார்) அங்கிருப்பார் என்பது எங்கள் படைகளுக்குத் தெரியாது, ஆனாலும் நாங்கள் தாக்குதலைத் தொடர்ந்தோம்” என்றார்.

அந்தப் பகுதியில் மூன்று நபர்கள் அங்கும் இங்கும் ஓடியதாகவும், தங்கள் படைகள் அவர்களைக் கண்டறிந்து தாக்குதலில் ஈடுபட்ட நிலையில், அவர்கள் மூவரும் பிரிந்து சென்றதாகவும் கூறினார்.

சின்வார் என அடையாளம் காணப்பட்ட நபர், “தனியாக ஒரு கட்டடத்திற்குள் ஓடினார்” என்றும் ட்ரோன் மூலம் அவரது இருப்பிடம் அடையாளம் காணப்பட்டு அவர் கொல்லப்பட்டதாகவும் டேனியல் ஹகாரி தெரிவித்தார்.

கடந்த செப்டம்பர் மாதம், ரஃபாவின் தெருக்களில் ரோந்து சென்றுகொண்டிருந்த இஸ்ரேலிய துருப்புகள்

சின்வார் மனித கேடயமாகப் பயன்படுத்தியிருக்கலாம் என நம்பப்பட்ட பணயக் கைதிகள் யாரும் அப்பகுதியில் இல்லை.

ஒருவேளை யாரும் அறியாதவண்ணம் அவர் அங்கிருந்து இடம்பெயரும் முயற்சியில் இருந்திருக்கலாம்.

அல்லது, அவரது பாதுகாப்புக்காக இருந்த வீரர்களில் பலரை அவர் இழந்திருக்கக்கூடும் என்பதையே அவருடன் இருந்த மிகச் சிறிய அளவிலான பாதுகாவலர்கள் குழு உணர்த்துகிறது.

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் கூறுகையில், “சின்வார் ஓடும்போது அவர் அடித்து, தாக்கப்பட்டதில் உயிரிழந்தார். அவர் ஒரு படைத் தலைவராக இறக்கவில்லை, தன்னுடைய நலனை மட்டுமே சிந்தித்த ஒருவராகவே அவர் இறந்தார். எங்களுடைய அனைத்து எதிரிகளுக்கும் இது ஒரு செய்தி” என்று தெரிவித்தார்.

இஸ்ரேல் ராணுவத்தால் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட ட்ரோன் காட்சியில், சின்வார் கொல்லப்படுவதற்கு முன்பு நிகழ்ந்த கடைசி தருணங்கள் காட்டப்பட்டன.

பெருமளவு அழிக்கப்பட்ட கட்டடத்திற்குள் ட்ரோன் மூலம் அந்த வீடியோ எடுக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இடிபாடுகள் நிறைந்த கட்டடத்தின் முதல்தளத்தில் தலை மூடப்பட்டு, நாற்காலியில் அமர்ந்திருக்கும் ஒருவரை நோக்கி அந்த ட்ரோன் செல்கிறது.

காயமடைந்திருப்பதாகத் தோன்றும் அந்த நபர் கம்பு போன்ற ஒரு பொருளை ட்ரோன் மீது வீசியதைப் பார்க்க முடிகிறது. அத்துடன் அந்த வீடியோ முடிவடைந்தது.

சின்வார் கொல்லப்பட்டதை உறுதி செய்த இஸ்ரேல்

காஸாவில் வியாழக்கிழமை மதிய நேரத்தில் யாஹ்யா சின்வார் உயிரிழந்தாரா என்பதற்கான “சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாக” இஸ்ரேல் முதலில் அறிவித்தது.

அந்த அறிவிப்பு வந்த சில நிமிடங்களிலேயே, ஹமாஸ் தலைவருடன் ஒத்த அம்சங்களைக் கொண்ட நபரின் சடலம் தொடர்பான படங்கள், சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டன. அதில் அந்நபருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டிருந்தது. பிரசுரிக்க முடியாத நிலையில் கோரமாக அந்தப் படங்கள் உள்ளன.

இருப்பினும், உயிரிழந்த மூன்று பேரின் அடையாளத்தை “இந்தக் கட்டத்தில்” உறுதிப்படுத்த முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, சிறிது நேரத்திலேயே யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதாக, “தாங்கள் அதிகம் நம்புவதாக” இஸ்ரேல் அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

எனினும், அவருடைய இறப்பை உறுதி செய்வதற்கு முன்பாக அனைத்து அவசியமான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.

அந்தப் பரிசோதனைகளை மேற்கொள்ள அதிக நேரமாகவில்லை. வியாழக்கிழமை மாலையே, பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சின்வார் “கொல்லப்பட்டதாக” இஸ்ரேல் அறிவித்தது.

இதைத்தொடர்ந்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “தீயசக்திக்குப் பெரும் அடி” என்றும், “ஆனாலும், காஸாவில் நடைபெற்று வரும் போர் முடிவுறவில்லை” எனவும் எச்சரித்துள்ளார்.

இஸ்ரேல் ராணுவம் சின்வாரை சுற்றி வளைத்தது எப்படி?

திட்டமிடப்பட்ட தாக்குதலின்போது சின்வார் கொல்லப்படவில்லை என்றாலும், அவர் எங்கிருக்கலாம் என்பது குறித்து உளவுத்துறை தகவல் அளித்த பகுதிகளில் பல வாரங்களாகத் தாங்கள் செயல்பட்டு வந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

தெற்கு காஸாவில் உள்ள ரஃபாவில் மிகவும் உள்ளே சென்று, அவருடைய இருப்பிடத்தைக் கண்டறிந்து, அப்பகுதிக்கு மெதுவாக முன்னேறியுள்ளனர்.

ஓராண்டுக்கும் மேலாக சின்வார் தலைமறைவாக இருந்தார். முகமது டைஃப், இஸ்மாயில் ஹனியே போன்ற மற்ற ஹமாஸ் தலைவர்கள் கொல்லப்பட்டது, அக்டோபர் 7 தாக்குதலை மேற்கொள்ள அவர் பயன்படுத்திய கட்டமைப்பை அழித்தது, ஆகியவற்றின் விளைவாக இஸ்ரேலின் அழுத்தத்தை சின்வார் நிச்சயமாக உணர்ந்திருப்பார்.

இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் வெளியிட்ட அறிக்கையில், தெற்கு பகுதியில் தங்களின் சமீபத்திய நடவடிக்கைகள் மூலம் தங்கள் படைகள் “சின்வாரை பின்தொடர்ந்ததால், அவருடைய நகர்வுகள் சுருக்கப்பட்டு, பெரும்பாலும் தடை செய்யப்பட்டது, இதையடுத்து அவர் கொல்லப்பட்டார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘இதுவே போரின் முடிவு இல்லை’

அக்டோபர் 7 தாக்குதல் நடந்தது முதலே, சின்வாரை கொல்வது இஸ்ரேலின் முக்கிய இலக்காக இருந்தது. ஆனால், அவரது முடிவு மட்டுமே காஸா போரின் முடிவை உறுதி செய்துவிடவில்லை.

நெதன்யாகு, தான் ‘பழிதீர்த்துவிட்டதாக” கூறினாலும், குறைந்தபட்சம் ஹமாஸ் பிடியில் இருக்கும் 101 பணயக் கைதிகளை மீட்கும் வரையிலாவது இந்தப் போர் தொடரும் என்று வலியுறுத்தியுள்ளார்.

“பணயக் கைதிகளின் குடும்பங்களுக்கு நான் ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். போரில் இதுவொரு முக்கியமான தருணம். நமது அன்புக்குரியவர்கள், அனைவரும் வீட்டிற்குத் திரும்பும் வரை நாங்கள் முழு பலத்துடன் தொடர்ந்து போரிடுவோம்,” என்று நெதன்யாகு கூறியுள்ளார்.

ஆனால், தற்போதைய சூழலில், பணயக் கைதிகளை திருப்பிக் கொண்டுவர ஏதுவான ஒரு போர் நிறுத்தம் கொண்டுவரப்படும் என்று கருதியதாக இஸ்ரேலில் உள்ள பணயக் கைதிகளின் குடும்பங்கள் தெரிவித்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக