சனி, 5 அக்டோபர், 2024

நடிகர் ரஜினிகாந்த்திற்கு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சைகள் என்ன?

 tamil.news18.com -Paventhan P :   உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.  இந்நிலையில் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தன் மீது அக்கறைகொண்டு உடல் நலம் குறித்து விசாரித்த பிரதமர் மோடிக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.  தமிழக ஆளுநர் ஆர்.என், ரவிக்கும் நன்றி கூறியுள்ள ரஜினி, முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.


தாம் மருத்துவமனையில் இருக்கும்போது, நலன் விசாரித்ததுடன் குணமடையவும் முதலமைச்சர் வாழ்த்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.  தாம் நலம் பெற வாழ்த்திய அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் ரஜினி நன்றி கூறியுள்ளார்.


வேட்டையன், கூலி என அடுத்தடுத்து வெளியாக உள்ள ரஜினிகாந்தின் திரைப்படங்களுக்காக எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் நிகழ்வு கடந்த 30 ஆம் தேதி நடந்தது. இரவு 8 மணிக்கு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டார் ரஜினிகாந்த்.

என்னதான் 73 வயதானாலும் தற்போதும் வசீகரம் குறையாத ரஜினிகாந்த், நெஞ்சு வலி காரணமாக இதயவியல் பிரிவின் கீழ் அனுமதிக்கப்பட்ட செய்தி ரசிகர்களை கலக்கத்தில் ஆழ்த்தியது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படப்பிடிப்பில் கடந்த வாரம் பிசியாக இருந்த நடிகர் ரஜினிகாந்துக்கு அடிவயிற்றில் எரிச்சலுடன் கூடிய வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து மருத்துவ ஆலோசனையை பெற்றுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

பரிசோதனையில் இதயத்திலிருந்து பிரிந்து செல்லும் பெருந்தமனி என்கின்ற அரோட்டா ரத்தக் குழாயில் சிறிய வீக்கம் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து மருத்துவரின் ஆலோசனையின் படி கடந்த 30 ஆம் தேதி இரவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அக்டோபர் 1-ம் தேதி காலையிலேயே மருத்துவமனையில் பல்வேறு உடல் பரிசோதனைக்கு ரஜினிகாந்த் உட்படுத்தப்பட்டார்.

தொடர்ச்சியாக கேத் லேப் என்று அழைக்கப்படும் ரத்தக்குழாய் சீரமைப்பு அரங்கிற்கு அவர் மாற்றப்பட்டார். அங்கு அறுவை சிகிச்சை அல்லாத டிரான்ஸ்கேதீட்டர் முறை மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. மூத்த இருதயநோய் நிபுணரான மருத்துவர் சாய் சதீஷ், எண்டோவாஸ்குலர் ரிப்பேர் என்ற முறையில் ஸ்டென்டை வைத்து ரத்தக்குழாயை வீக்கத்தை சீர் செய்தார்.

எண்டோவாஸ்குலர் சிகிச்சை முறையில் இடுப்புப் பகுதியில் ஒரு சிறிய கீறல் மூலம் நெகிழ்வு தன்மை கொண்ட ஒரு சிறிய குழாய் தமனிக்குள் செருகப்படும். தமனியை குழாய் அடைந்தவுடன் அதன் மூலம் மெல்லிய உலோகத்தால் ஆன ஸ்டென்ட் கிராஃப்ட் பொறுத்தப்பட்டு பெருந்தமனியின் ரத்த ஓட்டம் சீராக்கப்படும்.
இதன் மூலம் அனீரிசிம் சிதைவு தடுக்கப்பட்டு வீக்கம் குறைக்கப்படுகிறது.

சுமார் 2 மணி நேரம் அதாவது 9.30 மணி வாக்கில் இந்த சிகிச்சை முடிவடைந்த நிலையில், 2 மணி நேர தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த். உடல்நிலை சீரானதை தொடர்ந்து நண்பகல் 12 மணியளவில் ரஜினி தனி அறைக்கு மாற்றப்பட்டார். இதைத்தொடர்ந்து மாலை 4:40 மணிக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் இதய வால்வில் ஸ்டென்ட் வைக்கும் பணி வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனையில் அறிக்கை வெளியிடப்பட்டது.

ரஜினிகாந்த் இரண்டு நாள் ஓய்வில் இருக்க வேண்டும் என்றும்
ஓய்வுக்குப் பிறகு வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை தரப்பில் சொல்லப்பட்டது. அதன்படி, இரண்டு நாள் மருத்துவ கண்காணிப்பில் இருந்த நடிகர் ரஜினிகாந்த் மூன்றாம் தேதி நள்ளிரவு வீடு திரும்பினார்.

அறுவை சிகிச்சை செய்யாமல் நுண்துளை மூலமாக செய்யப்பட்ட சிகிச்சை என்பதால் பத்து நாள் ஓய்வுக்கு பிறகு வழக்கம்போல் தனது பணிகளில் நடிகர் ரஜினிகாந்த் ஈடுபடலாம் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அதே போன்று விரைவில் கூலி படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பிலும் அவர் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக