ஞாயிறு, 27 அக்டோபர், 2024

ரூ. 70 ஆயிரம் மதிப்புள்ள பொருளை இறக்க 25 ஆயிரம்... கேரளா நோக்கு கூலியால் நாக்கு தள்ளிய காண்டிரக்டர்


மின்னம்பலம் -Kumaresan M :  கேரளாவில் ஒருவர் தனக்கு சொந்தமான சரக்குகளை அவரது பணியாளர்களைக் கொண்டு ஏற்றி, இறக்கிவிட முடியாது.
இதற்கு சுமை தூக்கும் தொழிலாளர்களைத்தான் பயன்படுத்த வேண்டும் என எழுதப்படாத சட்டம் உள்ளது. அப்படி தொழிலாளர்களை பயன்படுத்தாதவர்களிடம் ‘நோக்கு கூலி’ என்ற பெயரில் கட்டாயமாகவும் கூலி வசூலிப்பார்கள்.
மற்றவர்கள் வேலை செய்வதை பார்த்து கொண்டு இருந்து விட்டு சுமை தூக்கும் தொழிலாளர்கள் கூலி வாங்கிச் செல்வதே நோக்குகூலி. அவர்களைக்கொண்டே அந்தப் பணியைச் செய்தால் எவ்வளவு கூலி வாங்குவார்களோ, அதைவிடக் கூடுதலாக நோக்குக் கூலி வாங்குவதும், தராதவர்களைத் தாக்குவதும் கேரளாவில் வாடிக்கை.



காலங் காலமாக இந்த கொடுமை கேரளாவில் நடந்து கொண்டிருக்கிறது. கேரள அரசு இதை தடுக்க சட்டம் இயற்றியும் சிறைத்தண்டனை கொடுத்தும் தீர்ந்தபாடில்லை. இந்த நிலையில், லாரியில் இருந்து  70 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை இறக்க நோக்கு கூலியாக 25 ஆயிரம் கேட்ட சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது.

திருவனந்தபுரம் சென்ட்ரல் ஸ்டேடியம் அருகே சிறு கட்டடம் எழுப்புவதற்காக காண்டிரக்டர் ஒருவர் லாரியில் 70 ஆயிரம் மதிப்புள்ள கட்டுமான பொருள்களை இறக்கியுள்ளார். அப்போது, 10 சுமை தூக்கும் தொழிலாளர்கள் அங்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். நோக்கு கூலியாக 25 ஆயிரம் கேட்டுள்ளனர். காண்டிராக்டர் 10 ஆயிரம் தருவதாக கூறியுள்ளார்.

ஆனால், சுமை தூக்கும் தொழிலாளர்கள் 25 ஆயிரத்துக்கு 10 பைசா குறையாது என்று கறார் காட்டினர்.  இதையடுத்து, பாதிக்கப்பட்ட காண்டிரக்டர் கேரள தொழிலாளர்துறை அமைச்சர் சிவன்குட்டியிடம் புகார் அளித்துள்ளார். உடனடியாக, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சுமை தூக்கும் தொழிலாளர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த 10 பேரும் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அடுத்த உத்தரவு வரும் வரை, பணியில் ஈடுபடவும் தடை விதித்துள்ளார் அமைச்சர் சிவன்குட்டி.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

–எம்.குமரேசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக