திங்கள், 16 செப்டம்பர், 2024

Dehlhi Cm முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறேன்” : கெஜ்ரிவால் அறிவிப்பு!

 minnambalam.com - christopher  சிறையில் இருந்து வெளியே வந்த கெஜ்ரிவால், டெல்லி முதல்வர் பதவியை அடுத்த 2 நாட்களில் ராஜினாமா செய்வதாக இன்று (செப்டம்பர் 15) அறிவித்துள்ளார்
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் சிபிஐ கைது செய்திருந்த நிலையில் கடந்த 13ஆம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது.
அதனையடுத்து திகார் சிறையில் இருந்து வெளிவந்த அவருக்கு ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சி தலைமை அலுவலகத்திற்கு இன்று முதன்முறையாக வந்த கெஜ்ரிவால், அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட தனது அதிரடி முடிவை வெளியிட்டுள்ளார்.

அவர் பேசுகையில், ” பாஜக நாட்டில் புதிய பார்முலாவை உருவாக்கியுள்ளது. அவர்கள் எங்கு தோற்றாலும், அம்மாநில முதல்வரை சிறைக்கு அனுப்புகிறார்கள். பின்னர் அங்கு தங்கள் அரசாங்கத்தை அமைக்கிறார்கள்.

அதேபோல் தான் ஆம் ஆத்மி கட்சியை உடைத்து டெல்லியில் பாஜக அதன் அரசாங்கத்தை அமைக்க முயற்சித்தது.

அதற்காக எனது தைரியத்தையும் மன உறுதியையும் உடைக்க வேண்டும் என நினைத்தனர். ஆம் ஆத்மி கட்சியை உடைக்கும் நோக்கத்துடன், தலைவர்களை சிறைக்கு அனுப்பி, எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி டெல்லியில் கெஜ்ரிவாலின்  பார்முலாவை அகற்ற வேண்டும் என நினைத்தனர். ஆனால் அதில் தோல்வியடைந்தனர்.

அவர்களால் எங்கள் கட்சியை உடைக்க முடியவில்லை. எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க முடியவில்லை.  தொண்டர்களிடம் இருந்து கட்சியை அவர்களால் பிரிக்க முடியவில்லை” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து அவர், ”நான் எனது முதல்வர் பதவியை அடுத்த இரண்டு நாட்களில் ராஜினாமா செய்ய இருக்கிறேன். நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக நான் ராஜினாமா செய்யவில்லை. நான் பாஜகவின் ஃபார்முலாவை தோல்வியடையச் செய்ய விரும்புகிறேன்.

ஒரு அரசாங்கத்தை ஏன் சிறையில் இருந்து நடத்த முடியாது என்று மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. ஒரு அரசாங்கத்தை சிறையில் இருந்து நடத்த முடியும் என்பதை உச்சநீதிமன்றம்  நிரூபித்துள்ளது.

இன்னும் சில மாதங்களில் டெல்லி தேர்தலை சந்திக்க இருக்கும் நிலையில் இந்த முடிவை எடுத்துள்ளேன். மக்கள் தீர்ப்பை அறிவிக்கும் வரை, முதல்வர் நாற்காலியில் அமர மாட்டேன். என்னைப் பொறுத்தவரை, நான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகுதான் முதல்வர் நாற்காலியில் அமருவேன்.

அடுத்த 2-3 நாட்களில் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தப்பட்டு, அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து முடிவு செய்யப்படும்”  என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக