வியாழன், 12 செப்டம்பர், 2024

செவ்வணக்கம் தோழர்!” சீதாராம் யெச்சூரி மறைவுக்கு ஸ்டாலின், ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!

 tamil.oneindia.com  Vignesh Selvaraj :   சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தோழர் சீதாராம் யெச்சூரிக்கு செவ்வணக்கம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சீதாராம் யெச்சூரி மறைவுக்கு தேசிய அளவில் அரசியல் தலைவர்கள் பலரும் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் எம்.பி-யான சீதாராம் யெச்சூரி உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.
நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த சீதாராம் யெச்சூரி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.



மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகக் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் சீதாராம் யெச்சூரி செயல்பட்டு வந்தார். 72 வயதான சீதாராம் யெச்சூரி மூன்றாவது முறையாக அந்தப் பொறுப்பைக் கவனித்து வந்த நிலையில், தற்போது மறைந்துள்ளார். அவரது உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி இரங்கல்: சீதாராம் யெச்சூரி மறைவை அடுத்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் முன்னணி தலைவருமான ராகுல் காந்தி எம்.பி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சீதாராம் யெச்சூரி எனது நண்பர். நம் நாட்டைப் பற்றி ஆழமான புரிதல் கொண்டவர் மற்றும் இந்தியா என்ற சிந்தனையின் பாதுகாவலர். எங்களின் நீண்ட விவாதங்களை இனி மிஸ் செய்வேன். இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் இரங்கல்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "இடதுசாரி இயக்கத்தின் தலைவரும் இந்திய அரசியலில் தலைசிறந்த ஆளுமையுமான தோழர் சீதாராம் யெச்சூரியின் மறைவு ஆழ்ந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
சிகிச்சை பெற்ற மருத்துவமனையிலேயே பாடம் ஆகும் சீதாராம் யெச்சூரி.. உடலை தானம் செய்த குடும்பத்தினர்!

தோழர் சீதாராம் யெச்சூரி ஒரு அச்சமற்ற தலைவராக இருந்தார், அவர் ஒரு மாணவத் தலைவராக தைரியமாக எமர்ஜென்சிக்கு எதிராக போராடியதால், சிறு வயதிலிருந்தே நீதிக்கான அர்ப்பணிப்பு வெளிப்பட்டது. தொழிலாளி வர்க்கம், மதச்சார்பின்மை, சமூக நீதி, சமத்துவம் மற்றும் முற்போக்கான விழுமியங்கள் ஆகியவற்றிற்கான அவரது அர்ப்பணிப்பு எதிர்கால சந்ததியினருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும்.

அவருடன் நான் கொண்டிருந்த ஆழமான உரையாடல்களை நான் எப்போதும் போற்றுவேன். இந்த இக்கட்டான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். செவ்வணக்கம், தோழர்!" எனத் தெரிவித்துள்ளார்.

ராமதாஸ் இரங்கல்: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல்நலக் குறைவால் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியுன், மிகுந்த வேதனையும் அடைந்தேன்.

சென்னையில் பிறந்த சீதாராம் யெச்சூரி இளம் வயதிலிருந்தே பொதுவுடைமை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தவர். பதின் வயதிலேயே தெலுங்கானா போராட்டத்தில் தீவிரம் காட்டிய யெச்சூரி, நெருக்கடி நிலை காலத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்தியாவின் மிகச் சிறந்த மாணவர் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த சீதாராம் யெச்சூரி சமூகநீதியிலும் அக்கறை கொண்டவர்.

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு கொண்டு வருவதற்கான எனது போராட்டத்திற்கு சீதாராம் யெச்சூரி துணை நின்றது எனது மனதில் இப்போது நிழலாடுகிறது. 2006 ஆம் ஆண்டு மே மாதம் டெல்லியில் நடைபெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கூட்டத்தில் ஓபிசி இட ஒதுக்கீட்டை உடனடியாக வழங்குவது சாத்தியமில்லை என்று கூறப்பட்ட நிலையில், உடனடியாக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நான் குரல் கொடுத்தேன்.

அதைத் தொடர்ந்து கூட்டம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், கூட்டணியில் உள்ள அனைத்து தலைவர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டினேன். பின்னர் மாலையில் தொடங்கி இரவு வரை நடைபெற்ற கூட்டத்தில் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற எனது கோரிக்கைக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் அன்றைய பொதுச்செயலாளர் ஹர்கிஷன்சிங் சுர்ஜித் அவர்களும், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீதாராம் யெச்சூரி அவர்களும் நிபந்தனையற்ற ஆதரவு அளித்தனர்.

அதேபோல் மற்ற தலைவர்களும் எனக்கு ஆதரவாக இருந்ததால் தான் 27% இட ஒதுக்கீடு சாத்தியமானது. சமூகநீதிக்காக என்னுடன் தோள்நின்ற தோழர் சீதாராம் யெச்சூரி அவர்களின் மறைவு எனக்கு தனிப்பட்ட முறையில் இழப்பாகும். யெச்சூரி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட அனைத்து பொதுவுடைமை இயக்கத்தினருக்கும் இரங்கல்களையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.

மம்தா பானர்ஜி இரங்கல்: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "சீதாராம் யெச்சூரி உயிரிழந்த செய்தியை அறிந்து வருந்துகிறேன். மூத்த நாடாளுமன்ற உறுப்பினராக அவரைத் தெரியும். அவரின் மறைவு தேசிய அரசியலுக்கு பேரிழப்பு. அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி இரங்கல்: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சீதாராம் யெச்சூரி அவர்கள் காலமானார் என்ற செய்திகேட்டு துயருற்றேன்.

மாணவர் பருவம் முதலே கம்யூனிச, மார்க்சிஸக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, முதலாளித்துவ கொடுமைகளை எதிர்த்து தொழிலாளர்களின் நல்வாழ்வுக்காக பாடுபட்டவர். இந்திய அரசியல் தலைவர்களின் நன்மதிப்பைப் பெற்ற சீதாராம் யெச்சூரி அவர்கள் மறைவு நாட்டிற்கும், தொழிலாளர் வர்க்கத்திற்கும் பேரிழப்பாகும்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை என் சார்பிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் தெரிவித்துக்கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

திருமாவளவன் இரங்கல்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் தோழர் சீதாராம் யெச்சூரி அவர்களின் மறைவு பேரதிர்ச்சி அளிக்கிறது. வகுப்புவாத சக்திகளை எதிர்த்து சமரசமின்றிப் போராடிய போராளி ஒருவரை நாடு இழந்துவிட்டது. தோழர் யெச்சூரி அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம்.

1974 ஆம் ஆண்டு துவங்கிய அவரது கம்யூனிசப் பயணம் அரை நூற்றாண்டு கால வரலாறு கொண்டது. மாணவப் பருவத்திலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு இந்திய மாணவர் சங்கத்தில் இணைந்து செயல்பட்டார். அவசரநிலைக் காலத்தில் தலைமறைவாக இருந்து பல போராட்டங்களை ஒருங்கிணைத்தவர். அதனால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

முதலில் மாணவர் இயக்கத்திலும் பின்னர் கட்சியிலும் இணைந்து செயல்பட்டார். 1996 ஆம் ஆண்டு ஐக்கிய முன்னணி அரசு உருவானபோது அதற்கான குறைந்தபட்ச பொது வேலைத் திட்டத்தைத் தயாரித்ததில் சீரிய பங்களிப்புச் செய்தார்.

2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இடதுசாரிக் கட்சிகள் 60 மக்களவை இடங்களை வென்ற போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பல நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்படுவதற்கு அவரது அழுத்தம் காரணமாக இருந்தது.12 ஆண்டுகள் மாநிலங்களவை உறுப்பினராக இருந்து மக்கள் பிரச்சனைகள் பலவற்றை அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றார்.

2015 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றதற்குப் பிறகு பாஜக அரசின் வகுப்புவாத செயல் திட்டங்களை சமரசம் இல்லாமல் எதிர்த்துப் போராடினார். ஆர் எஸ் எஸ் அமைப்பின் பாசிச தாக்குதலை எதிர்த்தவர்கள் எல்லாம் யுஏபிஏ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நேரத்திலும் அச்சமின்றி மோடி அரசின் அடக்கு முறையைத் துணிச்சலாக எதிர்த்துப் பேசியவர். இந்தியா கூட்டணி உருவாகப் பாடுபட்டவர்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திருச்சியில் ஒருங்கிணைத்த 'வெல்லும் சனநாயகம் மாநாட்டில்' பங்கேற்று இறுதிவரை இருந்து உரை நிகழ்த்தினார். அங்கு திரண்டிருந்த இலட்சக்கணக்கான மக்களைப் பார்த்து மிகுந்த உத்வேகம் கொண்டார். "இலட்சக் கணக்கான இளைஞர்களை வகுப்புவாத அரசியலை எதிர்த்து இப்படித் திரட்டுவது மிகப் பெரிய சாதனை" என எங்களைப் பாராட்டினார். "விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஒரு இடதுசாரிக் கட்சிதான். நாம் இணைந்து செயல்படுவோம்" என்று எங்களை ஊக்கப்படுத்தினார்.

தோழர் யெச்சூரியின் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உள்ள உழைக்கும் மக்களுக்குப் பேரிழப்பாகும். அவருக்கு எமது நெஞ்சார்ந்த செவ்வணக்கங்களைச் செலுத்துகிறோம். தோழர் யெச்சூரியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக