ஞாயிறு, 22 செப்டம்பர், 2024

லெபனான் பேஜார் வெடிப்புக்கு பின்னணியில் கேரளா வயநாட்டுக்காரர்

 மின்னம்பலம் - Kumaresan M :  லெபனான் பேஜார்  வெடிப்புக்கு பின்னணியில் கேரளா வயநாட்டுக்காரர்? அதிர வைக்கும் தகவல்கள்!
லெபனான் நாட்டில் கடந்த செப்டம்பர் 17 அன்று பேஜர்கள் வெடித்ததில் 12 பேர் பலியாகினர். 2,500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். ஹிஸ்புல்லா அமைப்பினர் வைத்திருந்த பேஜர்கள் மட்டுமல்ல, பொதுமக்கள் வைத்திருந்த பேஜர்களும் வெடித்துள்ளன.
பேஜர்கள் வெடித்த அதிர்ச்சி அடங்குவதற்குள், செப்டம்பர் 18 ஆம் தேதி வாக்கி டாக்கிகளும்  வெடித்து சிதறின. இதில் 30-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர், 3ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.  இதனால், ஹிஸ்புல்லா அமைப்பினர் மட்டுமல்லாமல், பொதுமக்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் உயிரிழந்தும் காயமடைந்துமுள்ளனர்.



இந்த பேஜர்கள் அனைத்தும் தைவான் நாட்டின் ‘கோல்ட் அப்பொலோ” நிறுவனத்தின் லோகோவைக் கொண்டிருந்தன. இதனால், தைவானில் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்று முதலில் கருதப்பட்டது. ஆனால்,  தைவான் நிறுவனம் தங்களுக்கும், பேஜர் வெடிப்புக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று மறுப்பு தெரிவித்து விட்டது.

தற்போது, இந்த பேஜர்கள் பல்கேரியாவிலுள்ள  நோர்ட்டா குளோபல் என்ற நிறுவனம் விநியோகம் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.   இந்த நிறுவனத்தின் உரிமையாளர் இந்தியாவை சேர்ந்தவர். நார்வே குடியுரிமை பெற்றவர் என்பதும் தெரிய வந்துள்ளது. அதாவது, ஹங்கேரியை சேர்ந்த பி.எஸ்.சி கன்சல்டன்ட் நிறுவனம் கோல்ட் அப்பல்லோ லோகோவை பயன்படுத்தி தயாரித்த பேஜர்களை நோர்ட்டா குளோபல் நிறுவனம் வாங்கி விநியோகித்துள்ளது.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மானந்தவாடியை சேர்ந்த ரென்சன் ஜோஸ் என்பவரால் நோர்ட்டா குளோபல் நிறுவனம் நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த 2013 ஆம் ஆண்டு இவர் சொந்த ஊரான மானந்தவாடிக்கு வந்து சென்றுள்ளார். எனினும், இஸ்ரேலிய உளவு அமைப்புகள் இவரது நிறுவனத்தின் பேஜர் தயாரிப்புகளில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குண்டுகளை வைத்ததை ரென்சஸ் ஜோஸ் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்று டெய்லி மெயில் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதே வேளையில் பேஜர் குண்டுவெடிப்புக்கு பிறகு ரென்சன் ஜோஸ் மாயமாகி விட்டதும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது. பல்கேரிய மற்றும் ஹங்கேரி போலீசார் ரென்சன் ஜோசை தேடி வருகின்றனர். அவர் கைது செய்யப்பட்டால் மட்டுமே உண்மை நிலவரம் தெரிய வரும் என்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

–எம்.குமரேசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக