வியாழன், 5 செப்டம்பர், 2024

பெண் டிஎஸ்பி மீது தாக்குதல்! காளீஸ்வரனின் கையில் மாவுக் கட்டு!

 tamil.oneindia.com - Rajkumar R :   விருதுநகர் அருகே கொலை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட நபர்களை அப்புறப்படுத்த முயன்ற பெண் டிஎஸ்பியை போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் சூழ்ந்து கொண்டு தாக்கியதோடு அவரது தலை முடியை பிடித்து இழுத்து ரகளை செய்த வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் பெண் போலீஸ் அதிகாரி தலைமுடியை இழுத்த காளீஸ்வரன், தப்பி ஓட முயன்ற போது கீழே விழுந்ததால் கை உடைந்ததாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
அருப்புக்கோட்டையில் காளி குமார் என்பவரை கொலை செய்த நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அவரது உறவினர்கள் திருச்சுழி அருப்புக்கோட்டை சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

virudhunagar police crime

இதனையடுத்து அங்கு வந்த அருப்புக்கோட்டை டிஎஸ்பி காயத்ரி போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது திடீரென அங்கிருந்த இளைஞர் ஒருவர் டிஎஸ்பி காயத்ரியை தகாத வார்த்தைகளை பேசி தகராறில் ஈடுபட்டார்.

இதையடுத்து அந்த நபரை அப்புறப்படுத்த முயன்ற போது திடீரென அவர் பெண் டிஎஸ்பிஐ தாக்கினார். தொடர்ந்து டிஎஸ்பி உடன் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அந்த நபரை சூழ்ந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் திடீரென போலீசாரையும் பெண் டிஎஸ்பியையும் சூழ்ந்து கொண்டு தாக்க தொடங்கினர்.

சிலர் டிஎஸ்பி காயத்ரியின் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்குதல் நடத்தினர். இதனால் போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனால் பதட்டமான சூழல் ஏற்பட்ட நிலையில் சூழ்ந்து கொண்ட காவலர்கள் அவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். இருந்தும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து அவர்களை தாக்க தொடங்கினர். பெண் டிஎஸ்பி மீது தாக்குதல் நடத்திய காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

அருப்புக்கோட்டை பெண் டிஎஸ்பி மீது தாக்குதல்! தலைமுடியை பிடித்து இழுத்து ரகளை..4 பேரை தூக்கிய போலீஸ்

இந்த சம்பவத்துக்கு தமிழக எதிர்க் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பில்லை எனவும் யார் யாரை வேண்டுமானாலும் தாக்கலாம் என்ற நிலையில் இருப்பதாக விமர்சித்திருந்தனர். இந்நிலையில் தாக்குதல் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் நெல்லிக்குளம் பாலமுருகன், காளிமுத்து, ஜெயராம் குமார், சஞ்சய் குமார், பாலாஜி, பொன் முருகன், சூர்யா ஆகிய ஏழு பேரை கைது செய்தனர்.

மேலும் பெண் டிஎஸ்பிஐ தாக்கிய விவகாரத்தில் எட்டு பேர் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், காவல்துறை அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தது, தாக்குதல், கூட்டு சதி உள்ளிட்ட ஒன்பது பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பெண் டிஎஸ்பிஐ தலைமுடியை பிடித்து இழுத்த காளீஸ்வரனை போலீசார் கைது செய்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட 116 பேர் மீதும் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே காளீஸ்வரனை கைது செய்ய போலீசார் சென்றபோது அவர்களிடமிருந்து தப்பி ஓட காளீஸ்வரன் முயன்றதாகவும், அப்போது அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்த போலீசார், மாவுக்கட்டு போட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

1 கருத்து:

  1. மனிதாபிமானமற்ற செயல்
    வன்மையாக கண்டிக்கிறேன்
    உங்கள் பையனா இருந்தா இப்படி செய்வீர்களா?

    பதிலளிநீக்கு