சனி, 14 செப்டம்பர், 2024

நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்க வேண்டும்: ஆர்ப்பாட்டம் அறிவித்த காங்கிரஸ்!

 minnambalm -Kavi  :  “அன்னபூர்ணா சீனிவாசனை அச்சுறுத்தி அடக்குமுறையை ஏவுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
கோவையின் பிரபல அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் ஜிஎஸ்டி குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பேசியது இணையத்தில் வைரலான நிலையில், அவர் நிர்மலா சீதாராமனை சந்தித்து விளக்கமளித்து மன்னிப்பு கோரிய வீடியோ அதைவிட வேகமாக பரவி வருகிறது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில்,  “ஒரே மாவு ஒரே சமையலறை ஒரே மாஸ்டர்… ஆனால் வரி மட்டும் ரெண்டு. இதைக் கேட்டால் மன்னிப்பு கேட்க வேண்டுமா?” என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.



அதோடு நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி போராட்டம் நடத்தவிருப்பதாக செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாளை(14.09.2024) சனிக்கிழமை மாலை 3.00 மணியளவில் கோயம்புத்தூர் காந்தி பூங்கா, ஆர்.எஸ்.புரம், அன்னபூர்ணா ஓட்டல் எதிரில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை பாதுகாக்க வேண்டியும், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும் கோயம்புத்தூர் வடக்கு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மனோகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்,  “நியாயமான கோரிக்கையை முன்வைத்ததற்காக ஒன்றிய நிதியமைச்சர் கேள்வி கேட்பவரை அச்சுறுத்தி அடக்குமுறையை ஏவுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

மக்களை சந்திக்காமலேயே, வாக்குகளை பெறாமலேயே மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு பெற்று ஒன்றிய அமைச்சராக நீண்டகாலமாக நீடித்து வருகிற நிர்மலா சீதாராமனின் ஆணவப் போக்கிற்கு தமிழக மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் அதற்குரிய விலையை கொடுப்பதிலிருந்து அவர் தப்ப முடியாது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

பிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக