ஞாயிறு, 1 செப்டம்பர், 2024

ஒரே பேட்டிக்காகவா சவுக்கு சங்கர் மீது 15 எஃப்.ஐ.ஆர்?" - உச்சநீதிமன்றம் கேள்வி!

 மின்னம்பலம் - Selvam :   யூடியூபர் சவுக்கு சங்கர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள 15 வழக்குகளையும் ஒரே வழக்காக இணைத்து விசாரிக்க முடியுமா என்று தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெண் போலீசாரை இழிவுபடுத்தும் வகையில் பேசிய யூடியூபர்  சவுக்கு சங்கர் சென்னை காவல் ஆணையர் உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதை எதிர்த்து சவுக்கு சங்கரின் தாயார் கமலா , உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி உத்தரவு பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்றம், சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது.



இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா, சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய உத்தரவு பிறப்பித்தார்.

இந்தநிலையில் தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள 15 வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் நேற்று (ஆகஸ்ட் 30) விசாரணைக்கு வந்தது.

அப்போது, “ஒரே பேட்டிக்காகவா சவுக்கு சங்கர் மீது 15 எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

சவுக்கு சங்கர் தரப்பில் வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன் ஆஜராகி, “ஒரே நேர்காணல் தொடர்பாக தான் 15 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. சவுக்கு சங்கர் தடுப்பு காவலில் அடைக்கப்பட்டு காவல்துறையால் துன்புறுத்தப்படுகிறார்.

குண்டர் சட்டத்தை தமிழக அரசு தவறாக பயன்படுத்துகிறது. இந்தியா முழுவதும் 51 சதவிகித தடுப்புக்காவல் உத்தரவுகள் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் இருந்து தான் பதிவு செய்யப்படுகிறது.

மாநிலம் முழுவதும் சவுக்கு சங்கரை ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு அலைக்கழிப்பதற்காக தான் 15 எஃப்ஐஆர்-கள் போடப்பட்டுள்ளது” என்ற வாதத்தை முன்வைத்தார்.

தமிழக அரசு தரப்பில்  மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹத்கி மற்றும் சித்தார்த் லுத்ரா ஆஜராகி,

“நீதிபதிகளுக்கு எதிராக சவுக்கு சங்கர் அவதூறான கருத்துக்களை பதிவிட்டிருக்கிறார். நீதிபதிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு தீர்ப்பு வழங்குகிறார்கள் என்றும் பேசியிருக்கிறார். இந்த வழக்கு குறித்து முழுமையாக ஆய்வு செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும்” என்ற வாதத்தை முன்வைத்தனர்.

இதனையடுத்து நீதிபதிகள்,  சவுக்கு சங்கரை இரண்டாவது முறையாக குண்டர் சட்டத்தில் அடைத்தது குறித்தும், அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள 15 எஃப்ஐஆர்-களையும் ஒரே வழக்காக இணைத்து விசாரிக்க முடியுமா என்பது  குறித்தும் தமிழக அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக