வியாழன், 15 ஆகஸ்ட், 2024

Woman doctor rape case/பெண் டாக்டர் கும்பல் பலாத்கார வழக்கு மேற்கு வங்கம்

தினத்தந்தி :  கொல்கத்தா ஐகோர்ட்டில் பெண் டாக்டரின் பெற்றோர் அதிர்ச்சி தகவல்
பெண் டாக்டர் பலாத்கார வழக்கில், கும்பல் பலாத்காரம் மற்றும் கொலை நடந்ததற்கான அடையாளங்கள் தெளிவாக உள்ளன என அவருடைய பெற்றோர் மனுவில் தெரிவித்து உள்ளனர்.
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் கொல்கத்தா நகரின் வடபகுதியில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த 9-ந்தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்டு உள்ளார்.
அரை நிர்வாண கோலத்தில் உயிரிழந்த நிலையில் அவருடைய உடல் கண்டெடுக்கப்பட்டது.

இதுபற்றிய 4 பக்க பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது உறுதியாகி இருந்தது. அவரின் அந்தரங்க உறுப்புகள், வாய் உள்ளிட்ட பகுதிகளில் ரத்தம் வடிந்துள்ளது என்றும் பல்வேறு பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டு உள்ளன என்பதும் தெரிய வந்துள்ளது.

இதனால், அவர் கொடூர முறையில் பலாத்காரம் மற்றும் கொலை செய்யப்பட்டது உறுதியாகி உள்ளது. இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர், 23-ந்தேதி வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.

இந்நிலையில், கொல்கத்தா ஐகோர்ட்டில் பெண் டாக்டரின் பெற்றோர் அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளனர். அவர்கள் அளித்துள்ள மனுவில், பிரேத பரிசோதனை அறிக்கையானது, கழுத்து நெரிக்கப்பட்டதில் டாக்டர் உயிரிழந்து உள்ளார் என சந்தேகத்திற்கு இடமின்றி தெரிவிக்கின்றது. பாலியல் தாக்குதலுக்கான அடையாளங்களும் தெளிவாக உள்ளன.

டாக்டரின் உடல் பல்வேறு காயங்களை தாங்கியிருக்கின்றன. இதனால், கொடூர மற்றும் வன்முறையான தாக்குதல் நடந்துள்ளது என அடையாளம் காட்டப்பட்டு உள்ளது.

அவரின் தலையில் பல்வேறு பகுதிகளில் காயம் ஏற்பட்டதற்கான அறிகுறிகளும் உள்ளன. இரண்டு காதுகளிலும் உள்ள காயங்கள், கடுமையான போராட்டம் நடந்துள்ளது என தெரிவிக்கின்றது. அவருடைய உதடுகள் காயமடைந்து இருப்பது, தாக்குதலின்போது அவரை அமைதிப்படுத்த அல்லது சத்தம் போட விடாமல் தடுக்கப்பட்டது தெரிகிறது.

அவரின் கழுத்தில் கடித்ததற்கான அடையாளங்கள் உள்ளன. தாக்குதலின் கடுமையை இது காட்டுகிறது. டாக்டரின் உடலில் 150 மி.கிராம் விந்து நீர் இருந்துள்ளது என பிரேத பரிசோதனை தெரிவிக்கின்றது. ஒரு நபருக்கும் கூடுதலாக இந்த செயலில் ஈடுபட்டு உள்ளனர் என இது காட்டுகிறது. கும்பல் பலாத்காரத்திற்கான சந்தேகமும் எழுகிறது.

இந்த சான்றுகள் தெளிவாக, கும்பல் பலாத்காரம் மற்றும் கொலை நடந்ததற்கான அடையாளங்களை காட்டும்போது, வேறு குற்றவாளிகள் யாரையும் கைது செய்ய எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த குற்றங்களை தனியொரு நபரால் செய்திருக்க முடியாது என அந்த மனு தெரிவிக்கின்றது.

டாக்ரின் பாதுகாப்புக்கு பொறுப்பான கல்லூரியின் முதல்வர் மற்றும் மற்றவர்களும் இன்னும் கைது செய்யப்படாமல் உள்ளனர் என்றும் அவர்கள் மனுவில் சுட்டி காட்டியுள்ளனர்.

பெண் டாக்டர் கொலையில் 3 நபர்கள் ஈடுபட்டுள்ளனர் என்பதற்கான நம்பத்தக்க சான்றுகள் உள்ளன என்றும் உடலில் குறிப்பிடத்தக்க அளவிலான விந்து நீர் இருப்பது பல நபர்களுக்கு இதில் தொடர்புள்ளது என காட்டுகிறது என்றும் அவர்கள் கோர்ட்டில் தெரிவித்து உள்ளனர். இதனால், சி.பி.ஐ. விசாரணையில் இதுபற்றிய விரிவான விவரங்கள் தெரிய வரும். அந்த அமைப்பின் ஒரு குழு, டாக்டரின் உடல் கிடந்த கருத்தரங்கு கூடத்திற்கு செல்லும்.

குற்றவாளியை காவலில் எடுப்பதற்கான பணியை மற்றொரு குழுவும், கொல்கத்தா போலீசாருடன் இணைந்து விசாரிப்பதில் சி.பி.ஐ. அமைப்பின் 3-வது குழுவும் ஈடுபடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக