திங்கள், 12 ஆகஸ்ட், 2024

ஸ்வஸ்திக் தமிழரின் எழுத்து! - மஞ்சை வசந்தன்

No photo description available.

ஸ்வஸ்திக் தமிழரின் எழுத்து! - மஞ்சை வசந்தன்
[கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூர் அய்யன் ஏரியில் அகழ்வின்போது  எழுதப்பட்ட பானை ஓடு கிடைத்தது பற்றி, 02.08.2017 ‘தமிழ்’ இந்து நாளிதழில் வந்த செய்தியை ஒட்டி எழுதப்பட்ட கட்டுரை]
 ‘ஸ்வஸ்திக்’ உலகில் பலப் பகுதிகளில் பலரால் பயன்படுத்தப்பட்டாலும் அதன் உரிமையாளர் தமிழர் என்ற ஆணித்தரமான உண்மை பெரும்பாலோர் அறியாதது என்பது மட்டுமல்ல, இதை அறியும்போது அவர்கள் வியப்பும் அடைவர்.
 இந்தக் குறியீடு “ஸ்வஸ்திக்” என்று பின்னாளில் அழைக்கப்பட்டாலும், இது இரு தமிழ் எழுத்துக்களின் கூட்டெழுத்து. தமிழில் கூட்டெழுத்து எழுதுவது 40 ஆண்டுகளுக்கு முன்புகூட வழக்கில் இருந்தது. வயதானவர்கள் இன்றைக்குக்கூட கூட்டெழுத்தில் எழுதுவதைக் காணலாம். க்+கு இரண்டையும் சேர்த்து ஒரே எழுத்தால் எழுதுவது வழக்கில் உள்ளது.
அதுபோல, ஓ+ம் என்ற இரு எழுத்துகளைச் சேர்த்து எழுத  இந்த வரி வடிவ எழுத்தைப் பயன்படுத்தினர்.



“ஓமன்” என்ற தமிழ் மன்னனின் பெயரை + அன் என்று எழுதிய சான்றுகள் கிடைத்துள்ளன.

முருகு+அன் முருகன் என்று எழுதுவதுபோல, ஓம்+அன்=ஓமன் என்று எழுதப்பட்டது.

“ஓம்” என்பதற்கு காத்தல், பேணுதல் என்று பொருள். நாட்டை, நாட்டு மக்களைப் பாதுகாப்பவன் என்பதால் ஓமன் என்று அழைக்கப்பட்டான்.
முருகு என்றால் அழகு. அழகு உடையவன் முருகன் என்று சொல்லப்பட்டதுபோல், காக்கக் கூடியவன் என்பதால் (ஓம்பக்கூடியவன்) என்பதால் ஓம்+அன்=ஓமன் என்று அழைக்கப்பட்டான்.

“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்” என்பதில் உள்ள “ஓம்” என்பது காத்தல், பேணுதல் என்னும் பொருளில் வருவதை ஈண்டு ஒப்புநோக்கின் உண்மைத் துலங்கும்.

ஓம் என்ற இரு எழுத்துகளின் கூட்டெழுத்தின் (வரி)வடிவமான    இக்குறியீடு, சிந்து சமவெளியின் அகழ்வாய்வின்போது கிடைத்தது. ஆங்கிலேயர் ஆட்சியின்போது அது லண்டன் கொண்டுசெல்லப்பட்டு அங்கு அரண்மனை காட்சியகத்தில் (மியூசியம்) வைக்கப்பட்டுள்ளது.

தமிழர்கள் உலகில் எங்கெல்லாம் வாழ்ந்தார்களோ அங்கெல்லாம் இது () கிடைத்துள்ளது. சிந்து சமவெளி நாகரிகம் தமிழர் நாகரிகம் என்பதால் அங்கும் கிடைத்தது. தமிழகத்திலும் பலப் பகுதிகளில் அகழ்வாய்வின்போதும் கிடைத்துள்ளது.

வடலூர் ஏரியில் கிடைத்த   குறியீடு:

அண்மையில், கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூர் அய்யன் ஏரியில் தூர் வாரப்பட்டபோது, அதில் கருப்பு-சிவப்பு நிற மண்பாண்ட ஓடுகள்; வழுவழுப்பான கருப்பு மற்றும் செங்காவி நிற ஓடுகள் கிடைத்துள்ளன.
இவற்றை ஆய்வு செய்த சேலம் ஆத்தூர், “அறிஞர் அண்ணா அரசுக் கலைக்கல்லூரி”யின் உதவிப் பேராசிரியர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன் அவர்கள், “இங்கு கிடைத்த கருப்பு - சிவப்பு நிறத்திலான பானை ஓடுகளின் மேல்பகுதியில், மட்பாண்டங்களை சுடப்பட்ட பிறகு கீறப்பட்ட கீறல் குறியீடுகள் உள்ளன. இங்கு கிடைத்திருக்கும், ஸ்வஸ்திக் குறியீடுகள் கொண்ட செங்காவி பூசப்பட்ட பானை ஓடு மிக முக்கியமான தடயம் ஆகும். சிந்துசமவெளி நாகரிகத்து மக்கள் பயன்படுத்திய முத்திரைகளில் ஸ்வஸ்திக் குறியீடுகள் இருந்தன. அதே குறியீடு இங்கு கிடைத்திருக்கும் பானை ஓட்டிலும் இருப்பது முக்கியத்துவம் பெறுகிறது என்றார்.

தொன்மையான குறியீடுகள்

ஸ்வஸ்திக் குறியீட்டை ஆய்வு செய்த தமிழக தொல்லியல் துறையின் துணை கண்காணிப்பாளர்(ஓய்வு) கி.ஸ்ரீதரன், சிவகங்கை அரசு கலைக் கல்லூரியின் வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் சு.கண்ணன் ஆகியோர் கூறுகையில், “1965-69-ம் ஆண்டுகளில் உறையூரிலும் 1985-90-ம் ஆண்டுகளில் ஈரோடு கொடுமணலிலும் 1962-63-ல் குளித்தலை அருகே திருக்காம்புலியூரிலும் 2015-16-ல் நாகை அம்பல் பகுதியிலும் நடந்த அகழாய்வுகளில் இதுபோன்று ஸ்வஸ்திக் குறியீடு பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளன. தொன்மையான இந்தக் குறியீடுகள் கி.பி. 3-ம் நூற்றாண்டில் புழக்கத்தில் இருந்துள்ளன. என்றனர்.

“வடலூர், “அய்யன் ஏரி” பகுதியில் வாழ்ந்த பெருங்கற்காலத்து மக்கள், இதன் மேற்குப் பகுதி நிலப்பரப்பை இடுகாட்டுப் பகுதியாக பயன்படுத்தி இருக்கிறார்கள். அங்கு, ராமலிங்கம் என்பவரது நிலத்தில் கடந்த 1983-ல் செங்கல் சூளைக்கு மண் எடுக்கப்பட்டது. அப்போது அங்கிருந்து நான்கு அடி ஆழத்தில் முதுமக்கள் தாழிகள் வெளிப்பட்டன. அவற்றுள், கருப்பு - சிவப்பு நிறத்தில் சிறியவகை மட்கலன்கள், வழுவழுப்பான கருப்பு நிற மட்கலன்கள், இரும்புப் பொருட்கள் உள்ளிட்டவை இருந்தன.

இந்தத் தகவல்கள், வடலூர் பகுதியில் பெருங்கற்காலத்து மக்கள் வாழ்ந்ததை உறுதிப்படுத்துகின்றன” என்று சொல்லும் சிவராமகிருஷ்ணன், ஆரம்பத்தில், தமிழ் மொழியானது குறியீடுகளாக வடிவம் பெற்று, பிறகு படிப்படியாக பரிணாமம் அடைந்து வரி வடிவமானது. பெருங்கற்காலத்து மக்கள் வாழ்ந்த பகுதிகளில் நடத்தப்படும் பெரும்பாலான ஆகழாய்வுகளில், கீழ் மண்ணடுக்கில் குறியீடுகள் கொண்ட பானை ஓடுகளும் அதற்கு மேல் உள்ள அடுக்கில் தமிழ் பிராமி எழுத்துக்கள் கொண்ட பானை ஓடுகளும் கிடைத்துவருகின்றன. வடலூர் பகுதியில் வாழ்ந்த பெருங்கற்காலத்து மக்கள் தங்களது எண்ணங்களை வெளிப்படுத்த குறியீடுகளைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதற்கு அய்யன் ஏரியில் நமக்குக் கிடைத்திருக்கும் தடயங்களே சான்று” என்கிறார்.

ஆக, தமிழகத்தில் நடத்தப்பட்ட அகழ்வாய்வுகளில் பல இடங்களில்  என்ற வரிவடிவ எழுத்து (கூட்டெழுத்து) கிடைத்திருப்பது, இது தமிழரின் எழுத்து என்ற முந்தைய ஆய்வு முடிவுகளை அய்யத்திற்கு இடமின்றி உறுதி செய்கிறது.

தமிழரின் இந்தக் கூட்டெழுத்தைத்தான் () ஹிட்லர் தனது அடையாளமாகப் (முத்திரையாக) பயன்படுத்தினார்.

ஆரிய பார்ப்பனர்கள் அதை மத அடையாளமாக ஆக்கினர்.

இது மதத்தோடு சம்பந்தப்பட்டதல்ல. ஹிட்லருக்கும் உரிமையானது அல்ல. இது தமிழரின் எழுத்து; தமிழரின் சொத்து. இதைக் காத்து வைக்க வேண்டியது தமிழரின் பொறுப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக