வியாழன், 29 ஆகஸ்ட், 2024

ஜெகத்ரட்சகனுக்கு ரூ.908 கோடி அபராதம் - ரூ. 89.19 கோடி சொத்துகளும் அமலாக்கத்துறை முடக்கம்

 zeenews.india.com  - Sudharsan :  : அந்நிய செலவாணி முறைக்கேடு வழக்கில் அரக்கோணம் எம்.பி., ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு 908 கோடி ரூபாய் அபராதம் விதிப்பதாக அமலாக்கத்துறை இன்று அறிவித்துள்ளது.
மேலும், ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான 89.19 கோடி ரூபாய் சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளது.
அதாவது, அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் (FEMA) 37A பிரிவின்கீழ் சொத்துக்கள் முடக்கப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
சொத்துக்கள் முடக்கம்
ஜெகத்ரட்சகன் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு ரூ.908 கோடி அபராதம் கடந்த ஆக. 26ஆம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பின் முடிவில் விதிக்கப்பட்டது. இதுகுறித்த அறிவிப்பு ஒன்றில்,"அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டம் (FEMA) விதிகளை மீறியதாகக் கூறப்படும் குற்றத்திற்காக 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தொழிலதிபர் ஜெகத்ரட்சகனுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டது" என அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது.



இதுகுறித்த தொடர் விசாரணையில், ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான ரூ.89.19 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இருப்பினும், சொத்துகளை முடக்கிய உத்தரவு 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரத்து செய்யப்பட்டது. மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்தது. அங்கு மேல்முறையீடு தற்போது நிலுவையில் இருக்கிறது.

மேலும் படிக்க | கிசுகிசு : காட்பாடியார் கடுப்புக்கு காரணம் இதுதானாம் - துமு வேண்டும் என கறார்..!

அமலாக்கத்துறையின் மற்றொரு புகார்

இவை மட்டுமின்றி, 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் (FEMA) 16ஆவது பிரிவின்கீழ், வெளிநாட்டு நிறுவனங்களில் முறையற்ற முதலீடுகள் செய்ததாக அமலாகத்துறை ஒரு புதிய புகாரைப் பதிவு செய்தது.

2017ஆம் ஆண்டு சிங்கப்பூரில் உள்ள ஒரு ஷெல் நிறுவனத்தில் ரூ.42 கோடி முதலீடு செய்ததாக அமலாக்கத்துறை புகார் எழுப்பியது. மேலும், சிங்கப்பூரில் வெளிநாட்டு பங்குகளை வாங்கியது மற்றும் அதைத் தொடர்ந்து குடும்ப உறுப்பினர்களுக்கு மாற்றியது ஆகியவை ஜெகத்ரட்சகனுக்கு எதிரான அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகளில் முக்கியமான ஒன்றாகும். இதுமட்டுமின்றி ஜெகத்ரட்சகன் சுமார் 9 கோடி ரூபாய் இலங்கை நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதாகவும் அமலாக்கத்துறை கூறியுள்ளது.

யார் இந்த ஜெகத்ரட்சகன்?

76 வயதான ஜெகத்ரட்சகன் தற்போது திமுக சார்பில் அரக்கோணம் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இவர் 2009ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டுவரை காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மத்திய இணையமைச்சராக இருந்தார். இவர் சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் Accord குழுமத்தின் நிறுவனர் ஆவார். பாரத் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமும் (BIHER) இவருடையதுதான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக