ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2024

சென்னை 5 ஸ்டார் ஹோட்டல்களுக்கு பார் உரிமம் ரத்து.. அரசு அதிரடி!

 tamil.oneindia.com - Vignesh Selvaraj  : சென்னை: சென்னையில் 5 ஸ்டார் ஹோட்டல்களின் பார் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஹையத் ரீஜன்சி, தி பார்க், ரட்டா சோமர்செட், தாஜ் கிளப் ஹவுஸ், விவிஏ ஹோட்டல்ஸ் (ரேடிசன் ப்ளு) ஆகிய 5 ஹோட்டல்களின் பார் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நட்சத்திர விடுதிகள் சட்ட விதிகளை மீறியதால் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை ஆணையர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
சென்னை மாநகரில் நட்சத்திர ஹோட்டல்களில் மதுபான பார் நடத்த அரசு உரிமம் வழங்குகிறது.
அதன்படி, நட்சத்திர ஹோட்டல்களில் தங்குவோர், இந்த பார்களை பயன்படுத்தலாம்.
இந்நிலையில், நட்சத்திர விடுதிகள், விதிமுறைகளை மீறி வருவதாக புகார்கள் எழுந்தன.


இந்நிலையில், விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்பட்டு வந்த ஐந்து தனியார் நட்சத்திர ஹோட்டல்களின் மதுபானக் கூடங்கள் உரிமங்களை ரத்து செய்து உடனடியாக மூட மதுவிலக்குத்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Chennai bar star hotels

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சென்னை மாநகரில் உள்ள ரட்டா சோமர்செட், தாஜ் கிளப் ஹவுஸ், விவிஏ ஹோட்டல்ஸ் (ரேடிசன் ப்ளு) ஹையத் ரீஜன்சி. தி பார்க் (Rattha Somerset, Taj Club House, VVA Hotels (Radisson Blu), Hyatt Regency. The Park) ஆகிய 5 தனியார் நட்சத்திர ஹோட்டல்களில் F.L.3 மதுபானக் கூடங்கள் அரசு உரிமம் பெற்று இயங்கி வந்தன. அவற்றுள் சட்ட விதிகளுக்கு மாறாக வெளிநபர்களை மது அருந்த அனுமதித்தல், மதுபானங்களை விநியோகம் செய்தல் முதலிய குற்றங்களில் ஈடுபட்ட விவரங்கள் தெரியவந்தன.

ஆதலால், சென்னை மாநகரில் விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்பட்டு வந்த ஐந்து நட்சத்திர ஹோட்டல்களிலும் செயல்பட்டு வந்த மதுபானக் கூடங்களை நடத்துவதற்கு வழங்கப்பட்டிருந்த F.L.3 உரிமங்களை தற்காலிகமாக ரத்து செய்தும், அந்த மதுபானக் கூடங்களை உடனடியாக மூடவும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக