வியாழன், 1 ஆகஸ்ட், 2024

10 லட்சம் இல்லை! கோடி ரூபாய் கொடுத்தாலும் ராகுல் தைத்த ஷூவை தரமாட்டேன்! காலணி தைக்கும் தொழிலாளி

 tamil.oneindia.com -  Vishnupriya R :  லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூரில் காங்கிரஸ் எம்பியும் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தைத்த காலணிகளை ரூ 10 லட்சம் கொடுப்பதாக கூறியும் அதை கொடுக்க அந்த தொழிலாளி மறுத்துவிட்டார்.
உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூரில் ஒரு அவதூறு வழக்கில் ஆஜராக ராகுல் காந்தி கடந்த ஜூலை 26 ஆம் தேதி சென்றிருந்தார். அப்போது சாலையோரத்தில் ராம்சேட் என்ற ஒரு காலணிகளை தைக்கும் பணியை செய்து கொண்டிருந்தார். மிகவும் சேதமடைந்த ஒரு சிறிய கொட்டகைக்குள் உட்கார்ந்தபடி அவர் செருப்பு தைத்துக் கொண்டிருந்தார்.



அப்போது அவ்வழியாக சென்ற ராகுல், அந்த தொழிலாளியின் நிலையை பார்த்து காரை நிறுத்துமாறு சொன்னார். அங்கு அந்த தொழிலாளியிடம் சென்று பேசி நலம் விசாரித்தார். அப்போது அந்த தொழிலாளி ராம் சேட் கூறுகையில், நான் 40 ஆண்டுகளாக காலணிகளை தைத்து வருகிறேன்.

வாழ்க்கையில் நான் பார்க்காத கஷ்டங்களே இல்லை என ராகுலிடம் தான் படும் கஷ்டங்களை வேதனையுடன் தெரிவித்திருந்தார். இதை கேட்டதும் ராகுல் காந்தி அவருக்கு தேவையான உதவிகளை செய்ய முடிவு செய்தார். இதையடுத்து அங்கிருந்த ஒரு ஷூவை எடுத்து தனக்கு தைக்கக் கற்றுக் கொடுக்குமாறு ராகுல் கேட்டார்.

அப்போது அதிர்ச்சி அடைந்த ராம் சேட், "அய்யோ நீங்கள் இந்த வேலையை செய்யலாமா, வேண்டாம் நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார். அதற்கு ராகுலும் பெருந்தன்மையாக எந்த வேலையையும் இவர்கள்தான் செய்ய வேண்டும், அவர்கள்தான் செய்ய வேண்டும் என்றில்லை, யார் வேண்டுமானாலும் எந்த வேலையையும் செய்யலாம். எனக்கு சொல்லிக் கொடுங்கள் என்றார்.

உடனே சற்று தயக்கத்துடனே அந்த காலணியை எப்படி தைப்பது என்பதை ராகுல் காந்திக்கு, ராம் சேட் சொல்லிக் கொடுத்தார். பிறகு ராகுலும், ராம் சேட் சொல்லிக் கொடுத்தது போல் ஷூக்களை கோந்து போட்டு ஒட்டி தைத்தார். ராகுல் ஷூ தைப்பது போன்றும் ராம் சேட்டுடன் நிற்பதும் போன்று புகைப்படங்களும் வீடியோக்களும் வைரலாகின.

இதனால் ராம் சேட் பிரபலமடைந்தார். அவ்வழியாக கார்கள், பைக்குகளில் செல்வோரெல்லாம் ராம் சேட் கடையை பார்த்ததும் நிறுத்தி அவருடன் செல்பி எடுத்துக் கொள்கிறார்களாம். அது போல் மாவட்ட நிர்வாகமும் ராம் சேட் கடைக்கு வந்து ஏதாவது பிரச்சினை இருக்கிறதா, எந்த உதவி வேண்டுமானாலும் சொல்லுங்கள் என தெரிவிக்கிறார்களாம். இதுவரை மாவட்ட நிர்வாகத்தினர் யாரும் ராம் சேட்டை இப்படி அணுகியதே இல்லையாம்.

ராம் சேட் நீண்ட காலமாக மின்சாரமே இல்லாத கடையில்தான் இருந்து வருகிறார். இந்த நிலையில் அடுத்த நாளே ஒரு காங்கிரஸ் தலைவர் ராம் சேட் கடைக்கு ஒரு பெரிய தையல் மிஷினுடன் வந்திருந்தார். அவர் ராகுல் கொடுத்தனுப்பியதாக கூறி, இனி கைகளில் யாருடைய காலணிகளையும் தைக்க வேண்டாம்.

இதுகுறித்து ராம் சேட் கூறியிருப்பதாவது: ராகுல் காந்தி கொடுத்த மிஷினி எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. அவர் வந்ததும் என் வாழ்வே மாறிவிட்டது. அதிலும் ராகுல் காந்தி தைத்துக் கொடுத்த ஷூவை கேட்டு பலர் என்னை அணுகுகிறார்கள். ஒருவர் 5 லட்சம் ரூபாய் தருவதாக கூறினார். நான் கொடுக்க முடியாது என மறுத்தேன். மேலும் ஒரு 5 லட்சம் சேர்த்து மொத்தமாக ரூ 10 லட்சமாக கொடுப்பதாகவும் கூறினார்.

அப்போது நான் "நீங்கள் 10 லட்சம் இல்லை, எத்தனை கோடி கொடுத்தாலும் ராகுல் தைத்துக் கொடுத்த செருப்பை நான் கொடுக்க மாட்டேன்" என கூறிவிட்டேன். அத்துடன் ஒருவர் ஒரு பை முழுவதும் பணமாக தருகிறேன், அந்த ஷூவை மட்டும் கொடுத்துவிடுமாறு கேட்டார். அவருக்கும் நான் மறுத்துவிட்டேன்.

ராகுல் காந்தி தைத்த ஷூவை நான் யாருக்கும் கொடுக்க மாட்டேன். இன்னும் சொல்ல போனால் அந்த ஷூவின் உரிமையாளரிடம் கூட நான் கொடுக்க மாட்டேன். அவருக்கு நான் ஷூவுக்கு உண்டான விலையை கொடுத்துவிடுவேன். ராகுல் வாங்கி கொடுத்த மிஷின் மின்சாரத்தில் இயங்கக் கூடியது. ஆனால் என் கடையில் மின்சாரம் இல்லை. எனவே என் மகன் வீட்டில் மின்சார இணைப்பு உள்ளது. அங்கு அந்த மிஷினை அங்கு வைத்து தைப்பேன்.

இப்போது நானும் ராகுலும் பார்ட்னர்கள் என நகைச்சுவையாக ராம் சேட் பேசினார். இதுகுறித்து ராம் சேட்டின் மகன் ரகுராம் ஏஎன்ஐ நிறுவனத்திடம் கூறியிருப்பதாவது: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் எங்களை மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்தினார். நானும் அப்பாவை போல் செருப்புத் தைத்துக் கொண்டிருந்தேன்.

ஆனால் என்னை யாரும் மதிக்கவில்லை. இதனால் நான் அந்த வேலையை விட்டுவிட்டு தற்போது கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறேன் என்றார். 10 லட்சம் ரூபாய் கொடுத்தாலும் ராகுல் தைத்த செருப்பை கொடுக்க மாட்டேன் என ஏழ்மையிலும் ராம் சேட் கூறுவது அவரது நல்ல மனதையும் பணத்தின் மீது ஆசையின்மையையும் காட்டுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக