சனி, 6 ஜூலை, 2024

மாயாவதி : ஆம்ஸ்ட்ராங்கின் கொலை.. குற்றவாளிகளை அரசு உடனே தண்டிக்க வேண்டும் - BSP தலைவர்

 tamil.asianetnews.com -  Ansgar R :  BSP Leader Mayawati : பகுஜன் சமாஜ் கட்சியின், தமிழக மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் கொடூர கொலை சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார் அக்கட்சியின் தலைவர் மாயாவதி.
இன்று மாலை பெரம்பூரில் தனது வீட்டு வாசலில் நின்று, தனது சகாக்களோடு பேசிக்கொண்டிருந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள், ஆறு பேர் கொண்ட மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவருடைய உடல் வைக்கப்பட்டுள்ள சென்னை அரசு மருத்துவமனை முன்பாக அவரது ஆதரவாளர்கள் கடும் போராட்டத்தில் இறங்கியுள்ளது பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.



தமிழக அரசியல் தலைவர்கள் அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமி, ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அதே நேரம், திமுக அரசை சாடியும் பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி வெளியிட்டுள்ள பதிவில் இந்த கொடூர கொலைகள் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளையும் தமிழக அரசு உடனடியாக தண்டிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

அதேபோல விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் வெளியிட்டுள்ள பதிவில் ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலைக்கு காரணமாக இருக்கும் குற்றவாளிகளை குண்டர்த்தடுப்பு காவலில் சிறைப்படுத்த வேண்டும் என்று அவர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் அன்பு சகோதரர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் புரட்சியாளர் அம்பேத்கரின் கொள்கை வழியில் கடந்த பல ஆண்டுகளாக தீவிரமாக பணியாற்றி வந்தவர்.

தமிழகத்தில் பௌத்தத்தை பரப்புவதில் அதிக முனைப்புடன் அவர் செயல்பட்டவர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு தனது ஆறுதல்களை அவர் தெரிவித்திருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக