வெள்ளி, 5 ஜூலை, 2024

பெண்கள் குளிக்கும் இடத்தில் கமெரா பொருத்திய "சிவபூமி" அறக்கட்டளை!

May be an image of 1 person, temple and text

 Arun Ambalavanar  :   பெண்கள் குளிக்கும் இடத்தில் கமெரா பொருத்திய
சிவபூமி அறக்கட்டளை!
ஆறுதிருமுருகனின் சிவபூமி அறக்கட்டளையால் நடாத்தப்படும் சிறுமியர் இல்லத்தில் அவர்கள் குளிக்கும் இடத்தில் சட்டவிரோதமாகப் பொருத்தப்பட்டுள்ள CCTV கமெராக்கள் பற்றிய முறைப்பாடுகள் பொதுமக்களால் ஒரு மாதத்திற்கு முன்னரே செய்யப்பட்டது.
இருந்தும் எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
பின்னர் மறுபடியும் பொதுமக்கள் முறையிடவே இவ்வாரம் இவ்விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
1. துர்க்காபுரம் மகளிர் இல்லத்தில் பத்துக்கு மேற்பட்ட மூடிய குளியல் அறைகள் உள்ளபோதிலும் சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் குளியல் அறைகளில் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதோடு அவர்கள் வளவில் உள்ள திறந்த வெளி தொட்டி ஒன்றிலேயே குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். (சிவபூமி அறக்கட்டளை நிர்வாகத்தினருக்கே குறித்த மூடிய குளியல் அறைகள் அனுமதிக்கப்படுகிறது). குறித்த திறந்த வெளி குளியல் பகுதியை பார்க்கக் கூடியவாறு ஒரு சில CCTV கமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.


2. ஒரு மாதத்திற்கு முதல் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு தெல்லிப்பளை பிரதேச செயலர் Ms சிவகங்கா சுதீஸ்னர்  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. Ms. சுதீஸ்னர் சிவபூமி அமைப்பு மற்றும் துர்க்கை அம்மன் கோயில் நிகழ்வுகளுக்கு அடிக்கடி அழைக்கப்பட்டு கௌரவிக்கப்படுபவர்.  ஆறுதிருமுருகனால் நடவடிக்கை எதுவும் எடுக்கவேண்டாம் என்று அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது.  இரண்டாவது முறையாக இவ்வாரம் பொதுமக்கள் முறையிட்டபோது பிரதேச செயலக அதிகாரிகளின் ஆரம்ப விசாரணையின் போது கமெரா இருப்பது கண்டறியப்பட்டது. குறித்த கமெராவின் மூலம் பெண்கள் குளிப்பதை ஸ்மாட் போன் ஒன்றினால் அவதானிக்கக் கூடியதாக CCTV கமெரா செற்றிங் செய்யப்பட்டிருந்தது.  முறைப்பிரகாரம் இது ஒரு குற்ற விசாரணையாக உடனடியாக பொலீசாரிடம் கையளிக்கப் பட்டிருக்கவேண்டியது. எனினும் பிரதேச செயலாளர் குற்ற விசாரணையைத் தவிர்த்து இதனை ஆளுநரிடம் கொண்டு சென்றிருக்கிறார். இது ஒரு முறைகேடு மட்டுமல்ல. குறித்த பிரதேச செயலாளர் மீதே இந்நடவடிக்கை சம்பந்தமாக ஒரு விசாரணை நடத்தப்படவேண்டும்.
3. யாழில் சிவபூமி அமைப்பால் இலங்கைச் சட்டப்படி பதிவுசெய்யப்படாமல் சட்டவிரோதமாகவே சிறுவர்/மகளிர் இல்லங்கள் நடத்தப்படுகின்றன. கொழும்பிலும் மலையகப் பகுதிகளிலுமுள்ள சிவபூமி அமைப்பின் சிறுவர் இல்லங்களிலிருந்து மலையகச் சிறுமிகள் யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவரப்பட்டு சிவபூமி அமைப்பின் உப பொருளாளரின் கட்டுப்பாட்டில் இயங்கும் சுன்னாகம் திருமகள் அச்சகத்திலும் துர்க்கை அம்மன் கோயிலிலும் சட்டவிரோதமாக சம்பளம் வழங்கப்படாத வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அழகான சிறுமிகளே திருமகள் அச்சகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதாகவும் அவர்கள் மீது பாலியல் சுரண்டல்கள் செய்யப்படுவதாகவும் அல்லது செய்யப்பட அழுத்தங்கள் பியோகிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இந் நவீன காலத்திலும் சிவபூமி அமைப்பால் செய்யப்படும் இவ்வநியாயம் அப்பட்டமான சிறுவர் அடிமைத்தனமும் சிறார் பாலியல் துர்ப்பிரயோகமும்(Child Slavery and/or Child Labour exploitation and Child sexual exploitation) ஆகும்.
4. இப்போது வடமாகாண ஆளுநர் Ms. சாள்ஸ் சிவபூமி அமைப்பால் யாழில் சட்டவிரோதமாக நடாத்தப்பட்ட சிறுவர் இல்லங்களை உடனடியாக மூடுமாறும் வெளிமாவட்டங்களில் இருந்து இந்த சிறுவர் இல்லங்களுக்கு கொண்டுவரப்பட்டுள்ள சிறுமிகளை உடனே திருப்பி அனுப்புமாறும் உத்தரவிட்டுள்ளார். எனினும் இச்செய்தியை எழுதிக்கொண்டிருக்கும் இக்கணம்வரை குறித்த CCTV கமெரா விவகாரம் பற்றிய முறைப்பாடு எதுவும் பொலிசாரிடம் செய்யப்படவில்லை.
5. ஆறுதிருமுருகனின் சிவபூமி அறக்கட்டளை மீது பல கடுமையான குற்றச்சாட்டுக்கள் உள்ளன. மேலே குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்களைத் தவிர
ஆறு திருமுருகனின் உறவினர்கள், வேண்டப்பட்டவர்களுக்கு மட்டுமே அவ்வமைப்பில் வேலை வழங்கப்படுவது(Nepotism),
வெளிநாட்டு புலம்பெயர் தமிழர்களால் சிவபூமிக்கு அன்பளிப்பாக வழங்கப்படும் காணிகள், வீடுகளை தனது சகோதரர் உறவினர் பெயர்களிலேயே உறுதிகளை மாற்றி வருகிறார்,
முறையான கணக்கறிக்கைகளோ கணக்காய்வுகளோ வெளிப்படைத்தன்மையோடு பேணப்படுவதோ மேற்கொள்ளப்படுவதோ இல்லை.
முதலிய பல குற்றச்சாட்டுக்கள் உண்டு.

1 கருத்து: