வெள்ளி, 26 ஜூலை, 2024

ராமேஸ்வரம் - தனுஷ்கோடி ரயில் பாதை திட்டம்... அரசு கைவிட்டதற்கு என்ன காரணம்?

 tamil.samayam.com - மகேஷ் பாபு   :  நாடாளுமன்றத்தில் கடந்த 23ஆம் தேதி மத்திய பட்ஜெட் 2024-25 தாக்கல் செய்யப்பட்டது.
இதில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டு விட்டது என்று அரசியல் கட்சிகள் பலவும் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால் எந்த ஒரு மாநிலமும் புறக்கணிக்கப்பட வில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்து வருகிறார். குறிப்பாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பேட்டியளிக்கையில், தமிழகத்தில் ரயில்வே திட்டங்கள் கிடப்பில் இருப்பதற்கு காரணம் போதிய நிலம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றார்.
தமிழ்நாடு அரசு கடிதம்
மேலும் ராமேஸ்வரம் - தனுஷ்கோடி ரயில் பாதை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பியதாக சுட்டிக் காட்டினார்.

இந்த விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாடு அரசின் பக்கம் தான் தவறு இருக்கிறதா? என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் நிலம் கையகப்படுத்துதலில் எந்தவித பிரச்சினையில் இல்லை என்று மாநில வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் பதிலறிக்கை வெளியிட்டுள்ளார்.

கைவிடப்பட்ட ரயில் திட்டம்

மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. நிலம் எடுப்பு பணிகளுக்கு இசைவு வழங்கப்படவில்லை. எனவே தான் பணிகள் முடங்கியிருக்கிறது எனக் கூறியுள்ளது. குறிப்பாக ராமேஸ்வரம் - தனுஷ்கோடி ரயில் திட்டம் கைவிடப்பட்டதற்கான காரணம் குறித்து விளக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பாதிப்பு

அதாவது, ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையிலான புதிய ரயில் தடம் அமைக்கும் திட்டம் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் 2022ஆம் ஆண்டு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சுற்றுச்சூழல் வல்லுநர் குழுவின் அறிக்கையில் இத்திட்டத்தினைச் செயல்படுத்துவது சுற்றுச்சூழல் சமநிலையை பாதிக்கும் எனக் கூறப்பட்டது. எனவே சுற்றுச்சூழல் பாதிப்பினை கருத்தில் கொண்டு புதிய ரயில்வே பாதை அமைக்க உகந்தது அல்ல என்று மேற்படி ரயில் பாதைத் திட்டத்தை கைவிடும்படி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

முகுந்தராயர் சத்திரம் -அரிச்சல் முனை சாலை

அதேசமயம் தேசிய நெடுஞ்சாலை முதன்மைப் பொறியாளரின் அறிக்கையின் அடிப்படையில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், முகுந்தராயர் சத்திரம் முதல் அரிச்சல் முனை வரையிலான 9.5 கி.மீ தொலைவிற்கு சாலை அமைக்கப்பட்டு போக்குவரத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ரயில்வே திட்டங்களின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு நில எடுப்பு பணிகளின் முன்னேற்றம் குறித்து ஒவ்வொரு மாதமும் ஆய்வு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு தனிக்கவனம் செலுத்தி உரிய காலத்திற்குள் முடிக்கும் வகையில் விரைந்து செயலாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகேஷ் பாபு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக