ஞாயிறு, 7 ஜூலை, 2024

யாழ் மெடிக்கல் மாபியாக்களுக்கு எதிராகவும் டொக்டர் அர்ச்சுனாவுக்கு ஆதரவாகவும் தென்மராட்சி மக்கள் போராட்டம்!

Thesam Jeyabalan :  யாழ் மெடிக்கல் மாபியாக்களுக்கு எதிராகவும் டொக்டர் அர்ச்சுனாவுக்கு ஆதரவாகவும் தென்மராட்சி மக்கள் போராட்டம்!
“தனியார் மருத்துவமனைகளை வளர்ப்பதற்காக அரச மருத்துவமனைகளை முடக்கும் நடவடிக்கையில் சில யாழ் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர்,
இவர்கள் சாவகச்சேரிச் சிறுமியின் உடலைக் கூட மூன்று லட்சம் பெற்று கொண்டே ஒப்படைத்துள்ளனர், பெரும்பாலும் தனியார் துறைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் அரச மருத்துவமனைகளில் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்வதில்லை” எனப்  பேராதனையில் மருத்துவராகக் கடமையாற்றி தற்போது தான் பிறந்த மண்ணுக்கு சேவையை வழங்க வந்துள்ள டொக்டர் ராமநாதன் அர்ச்சுனா தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.
இப்பதிவுகள் அவருடைய முகநூல் பதிவிலும் காணொலியாக உள்ளது. இவர் யூன் 14 அன்று பொறுப்பதிகாரியாக நியமனம் பெற்று வந்தார்.


சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையைக் கட்டியெழுப்பும் அவாவோடு வந்திருந்த டொக்டர் அர்ச்சுனா அங்கு 15 ஆண்டுகளாக இடம்பெற்று வரும் ஊழல்களையும் மோசடிகளையும் தட்டிக் கேட்டதற்காக மருத்துவ மாபியா ரவுடிகளால் தாக்கப்பட்டார். தங்களுடைய வருமானத்தில் மண் வீழ்ந்துவிட்டது என்றும் தாங்கள் அம்பலமாகப் போகின்றோம் என்றும் கொதித்து எழுந்த மருத்துவ மாபியாக் கும்பலைச் சேர்ந்த டொக்டர் மயூரன், டொக்டர் இந்திரகுமார், மருத்துவக் கல்வியில் பயிலும் தர்சன் மற்றும் டொக்டர் கமலா யோகுவின் கணவர் ஆகியோர் இணைந்து இத்தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இந்தப் பிரச்சினையில் முக்கிய பங்குவகிக்கும் டொக்டர் ஆறுமுகம் கேதீஸ்வரன் மருந்தக மோசடிகள் தொடர்பிலும் குற்றம்சாட்டப்பட்டவர் என்பது மிக முக்கியமானது. இவர் டொக்டர் அர்ச்சுனாவின் அதிரடி நேர்மையை ஏற்கனவே அறிந்திருந்ததால் அர்ச்சுனா யாழ்ப்பாணத்திற்கு வந்து கடமையாற்றுவதை  விரும்பியிருக்கவில்லை. அதனால் டொக்டர் அர்சுனா சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு வருவதை தடுப்பதற்கு பல கைங்கரியங்களை மேற்கொண்டிருந்தார். ஆனாலும் அவை பலிக்கவில்லை. மத்திய சுகாதார அமைச்சு டொக்டர் அர்ச்சுனாவை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு பதில் பொறுப்பதிகாரியாக நியமித்தது. டொக்டர் அர்சுனா நேர்மையாக மின்னல் வேகத்தில் 15 ஆண்டுகளாக முடக்கப்பட்டிருந்த சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையை 15 நாட்களில் சீரமைக்க முற்பட்டார்.

டொக்டர்கள் என்ற பெயரில் திரிந்த யாழ் மருத்துவ மாபியாக் கும்பல் கதி கலங்கியது. மக்களுடைய, தொழிலாளர்களுடைய நலன்களுக்காகப் போராட வேண்டிய தொழிற்சங்கம் மக்களுக்கு எதிராகவும் மக்கள் நலனைப் பேண வேண்டும் என்று கோரும் மருத்துவர் டொக்டர் அர்ச்சுனாவுக்கு எதிராகவும் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கினர். இது பற்றி முகநூலில் கருத்து வெளியிட்ட ரவீந்திரன் ரட்ணசிங்கம் “பணி செய்தால் தானே பணிப் புறக்கணிப்பு செய்ய வேண்டும்” என்று எழுதியுள்ளார். இந்த மருத்துவ மாபியாக் கும்பலின் விளக்கங்கள் நகைச்சுவையாகவும் நளினமாகவும் மக்களால் சமூகவலைத்தளங்களில் பகிரப்படுகின்றது. டொக்டர் அர்ச்சுனாவிற்கான ஆதரவு மக்கள் மத்தியிலும் பல்வேறு தளங்களிலும் பெருகிவருகின்றது.

இந்நிலை தொடர்பாக நிலைமையை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் தோழர் டக்ளஸ் தேவானந்தா, அவருடைய ஆலோசகர் எஸ் தவராஜா ஆகியோர் நேற்று யூலை 7 சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குச் சென்று டொக்டர் அர்ச்சுனாவின் குற்றச்சாட்டுகளைக் கேட்டறிந்தனர். இதற்கு முன்னதாக டொக்டர் அர்ச்சுனாவை தாங்கள் இடமாற்றி உள்ளதாக மருந்தக மோசடிகளில் சம்பந்தப்பட்ட வட பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் டொக்டர் அறுமுகம் கேதீஸ்வரன் கடிதம் அனுப்பி உள்ளார். ஆனால் தான் சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டபடியால் அவர்களின் முடிவின்படியே செயற்படமுடியும் என டொக்டர் அர்ச்சுனா தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

வடமாகாணத்தில் உள்ளவர்களுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என்று புலம்பும் தேசிய சோம்பேறிகளுக்கு அங்குள்ள மக்களுக்கு சேவைகளை வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் வந்தால், எப்படியாவது அவர்களை தமிழ் பிரதேசங்களைவிட்டு கலைப்பதற்கான அதிகாரம் மட்டும் எப்படியோ வந்துவிடும். தங்களுக்குள்ள அவ்வளவு அதிகாரங்களையும் பயன்படுத்தி சாதிய ஒடுக்குமுறைகளைச் செய்வது, சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவது, அர்ப்பணிப்புள்ளவர்களை தங்களுக்கு வேண்டாதவர்களை தமிழ் பிரதேசங்களைவிட்டு கலைப்பது போன்றவற்றுக்கு பொலிஸாரோடு கைகோர்த்து தங்கள் அதிகாரங்களை நிலைநாட்டுவார்கள். வட பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன்,  சுகாதார அமைச்சை மீறி வழங்கிய இடமாற்றக் கடிதம் அவ்வாறானதே.

டொக்டர் அர்ச்சுனா மருத்துவத்துறையில் உள்ள மோசடிகளை மட்டும் அம்பலப்படுத்தி உள்ளார். இதே மாதிரியான மோசடிகள் ஏனைய துறைகளிலும் பரந்துள்ளது. இலங்கையின் ஏனைய பிரதேசங்களிலும் நடைபெறுகின்றது. மேலும் அரசியல் வாதிகள் அளவுக்கு அல்லது அவர்களைக் காட்டிலும் அதிகாரிகளும் மிக மோசமான மோசடிகளிலும் சுரண்டல்களிலும் அதிகார துஸ்பிரயோகங்களிலும் ஈடுபட்டு வருகின்றன். அவர்கள் ஊதியம் பெறுவதற்கான உழைப்பை வழங்கத் தயாராகவில்லை. கிளிநொச்சி இரணைமடு குளத்தை விஸ்தரித்து அதன் நீர்க்கொள்வனவை அதிகரிக்க உலக வங்கியிடம் இருந்து 150 மில்லியன் டொலர் வேலைத் திட்டத்துக்கான நிதியை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பெற்றுக்கொடுத்திருந்தார். ஆனால் அதில் பணியாற்றிய வடமாகாணத்தைச் சேர்ந்த அரச அதிகாரிகளின் அசமந்த நடவடிக்கையால் அத்திட்டம் கைநழுவிச் சென்றதுடன் அவ்வளவு தொகையும் உலக வங்கியால் மீளப் பெறப்பட்டது.
மருத்துவ மாபியாக்களின் பிரச்சினை யுத்தம் முடிவுக்கு வந்த கையோடு ஆரம்பமாகிவிட்டது. மருத்துவத்துறையின் பல்வேறு முறைகேடுகள் பெரும்பாலும் ஒழித்து மறைக்கப்பட்ட போதும் அவ்வப்போது அவை வெளிவந்துகொண்டுதான் இருக்கின்றது.

அரச மருத்துவமனைகளைச் சீரழிப்பதன் மூலம் அரச ஆஸ்பத்திரிக்குப் போனால் இழுத்தடிப்பார்கள், ஒழுங்காகச் சிகிச்சை அளிக்கமாட்டார்கள், அங்கு தரும் மருந்துகளும் குணமாக்காது, அங்கு தேவையான உபகரணங்களும் இல்லை என்று எல்லோரும் குற்றம்சாட்டும் நிலையை அரச மருத்துவமனைகளில் பணியாற்றிக்கொண்டு தனியார் மருத்துவமனைகளை இயக்கும் உரிமையாளர்களான மருத்துவர்களும் அங்கு மருத்துவர்களாக பணியாற்றும் மருத்துவர்களும் ஏற்படுத்தி உள்ளனர். யாழில் பார்மசிகளில் மருத்துவமனைகளின் பிரச்சினைகளை ஒடுக்கப்பட்;ட சமூகத்தின் குரலாக விளங்கிய எழுத்தாளர் டானியலின் மகன் சாம் ஏற்கனவே வெளிக்கொண்டு வந்துள்ளார்.

2009 யுத்தம் முடிவுக்குப் பின் டென்மார்க்கைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் குளொபல் மெடிக்கல் எய்ட் என்ற நிறுவனம் மூன்று மில்லியன் டொலர்கள் பெறுமதியான அத்தியவசிய மருந்துப் பொருட்களை யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நோயைக் குணமாக்கும் நோக்கோடு அரச அனுமதி பெற்று, அரச சுற்று நிருபத்தோடு வடக்கு கிழக்கில் உள்ள மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்பட்டது. ஆனால் வடக்கில் இலவசமாக வழங்கப்பட வேண்டிய இந்த மருத்துகளை மருத்துவர்கள் நோயாளிகளுக்கு பரிந்துரை செய்யவும் இல்லை. வழங்கவும் இல்லை. இதற்கு இலங்கையின் மருத்துவமனையொன்றில் பணியாற்றும் மருத்துவ அதிகாரி தந்த விளக்கம் அதிர்ச்சியானது. “இலவச மருந்துப்பொருட்களை யுத்தத்தின் விலியிலிருந்த மக்களுக்கு வழங்கினால் அவர்கள் மனதார வாழ்த்துவார்கள், ஆனால் அதனை வழங்கிய மருத்துவருக்கு எவ்வித பலனும் இல்லை. ஆனால் மெடிக்கல் ரெப் கொண்டுவரும் புதுப்புது மருந்துகளை மருத்துவர் நோயாளிக்குப் பரிந்துரை செய்தால் அவருக்கு கொமிஸன் கிடைக்கும், விடுமுறையை வெளிநாட்டில் களிப்பதற்கு விமானச்சீட்டு ஹொட்டல் ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும். அதனால் குளொபல் மெடிக்கல் எய்ட் வழங்கிய மருந்துப் பொருட்கள் பாவனைக் காலம் முடியும்வரை இருப்பில் வைக்கப்பட்டு இறுதியில் காலாவதியாகி குப்பைக்குள் போடப்பட்டது. பாவம் மக்கள்” எனத் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

இலங்கையில் பல்மருத்துவராகக் கடமையாற்றி தற்போது பிரத்தானியாவில் கடமையாற்றும் மருத்துவகலாநிதி தேசம்நெற்க்குத் தெரிவிக்கையில் டொக்கடர் அர்சுனாவின் பதிவுகளைத் தொடர்ந்தும் பார்த்து வருவதாகவும் அவை நூறு சதவீதம் உண்யென்றும் அவருக்கு எதிராகக் கிளம்பியுள்ளவர்கள் உண்மையிலேயே மருத்துவ மாபியாக்களாகத்தான் இருக்க முடியும் எனவும் தெரிவித்தார். பிரித்தானியாவில் பல்மருத்துவர்கள் லட்சங்களில் சம்பாதிக்கும் போதும் 15 பவுண் 20 பவுண் மருத்துவராக உள்ள இவரிடம் நீங்கள் ஏன் இந்தக் கருத்தை வெளிப்படையாகச் சொல்லத் தயங்குகிறீர்கள் என்ற போது பிழையெனத் தெரிந்திருந்தாலும் அதனைச் சுட்டிக்காட்டும் தகுதி எனக்கில்லை. ஏனென்றால் இலவசக் கல்வியில் கற்ற நான் இப்போது பிரித்தானியாவில் வாழ்கின்றேன் அதனைச் சுட்டிக்காட்டும் தகுதி எனக்கில்லை. ஆனால் அந்தத் தகுதியும் நேர்மையும் டொக்டர் அர்ச்சுனாவிற்கு உள்ளது. அதை என்னால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை எனத் தெரிவித்தார்.


இவ்வாறான பதிவுகளை எமது வட்ஸ்அப் மருத்துவக் குழவில் பகிர்ந்தாலேயே அதனை நீக்கச்சொல்லி துசணத்தில் ஏசவார்கள் என்று தேசம்நெற்றுக்குத் தெரிவித்த அவர், மருத்துவத்துறை இலங்கையிலும் தான் பிரித்தானியாவிலும் தான் உலகம் பூராவும் தான் மருத்துவ மாபியாக்களின் கைகளுக்கு மாறிக்கொண்டுள்ளது. இதனை யாழில் தனியார் மருத்துவமனைக்கு தந்தையை அழைத்துச் சென்று சிகிச்சை பெற்றவரின் அனுபவத்தைக் கேளுங்கள்:

டொக்டர் அர்ச்சுனாவுக்கு இடமாற்றம் வழங்கி, வட மாகாணசபை சுகாதாரப் பணிப்பாளர் டொக்டர் ஆறுமுகம் கேததீஸ்வரனால் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டவர் டொக்டர் ரஜீவ். இவர் பொறுப்பதிகாரியாவதற்கான தகமையைப் பெறவில்லையென டொக்டர் அர்ச்சுனா குற்றம்சாட்டியிருந்தார். டொக்டர் அர்ச்சுனாவை மிரட்டி, அவரை அடித்து, தொழிற்சங்கப்  போராட்டத்தை நடத்தி கரணம் போட்டும் அவர் பணியவில்லை. இந்த இயலாமையின் பிரதிபலிப்பாக இறுதியில் டொக்டர் ரஜீவையும் பொறுப்பதிகாரியாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இருக்க விரும்புகிறீர்களா என்று டொக்டர் அர்சுனாவிடம் மாகாண சுகாதார அத்தியேட்சகர் கேட்டுள்ளார்.
அதற்குப் பதிலளித்துள்ள டொக்டர் அர்ச்சுனா இப்போது எல்லாமே மக்களிடம் ஒப்படைத்து விட்டேன் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்பு என்று தெரிவித்துள்ளார்.

தற்போது தென்மராட்சி மக்கள், வர்த்தக சங்கம், பொது அமைப்புகள் நலன்விரும்பிகள் அனைவரும் இணைந்து யாழில் உள்ள டொக்டர்கள் என்ற பெயரில் உலாவும் மருத்துவ மாபியாக்களுக்கு எதிராக கண்டனக் கடையடைப்புப் போராட்டத்தில் யூலை எட்டு அன்று ஈடுபடவுள்ளனர். மருத்துவ சேவை என்பது இலாபமீட்ட மட்டும் அல்ல. இந்த மருத்துவ மாபியாக்களின் மத்தியில் டொக்டர் அர்ச்சுனா மக்களின் பக்கம் நின்றதால் இன்று அவர் மக்களின் மீட்பராகி உள்ளார். தங்களை யார் நேசிக்கின்றார்களோ மக்கள் அவர்களை நிச்சயம் நேசிப்பார்கள்.

தன்னுடைய கட்டுப்பாட்டுப் பகுதியில் மக்களுக்கு சேவை வழங்கிய இராணுவ அதிகாரி மாற்றலாகிப் போன போது ஊர்மக்கள் கோலகலமாக கண்ணீரோடு பிரியாவிடையை ஏற்பாடு செய்தமை குறிப்பிடத்தக்கது. அதே போல் வடக்கின் கடல் எல்லையில் ஈழத்தமிழ் மீனவர்களுக்காக போராடி களப் பலியான கடற்படை வீரனுக்காக 3,000 மீனவர்கள் ஒரு வாரத்திற்கு முன் தன்னிச்சையாக அவருடைய மரணச் சடங்கிக்கு தென்பகுதி சென்றனர். தற்போது டொக்டர் அர்ச்சுனா ஈழத்தில் மக்களின் மனங்களில் இடம்பிடித்துள்ளார். அவருக்காகவும் வடக்கின் மாபியா கும்பலுக்கு எதிராகவும் மக்கள் போராடத்தயாராகிவிட்டார்கள்.
சாதி, மதம், இனம் என்று மக்களைக் கூறுபோட்டு குறும்தேசியவாதத்தையூட்டி பிரித்து வைத்தாலும் தங்களை நேசிப்பவர்களை மக்கள் ஒருபோதும் சாதி, மதம், இனம் பார்த்து கைவிடமாட்டார்கள். உண்மைகள் உறங்குவதில்லை. மக்களை சிறிது காலம் சில காலம் ஏமாற்றலாம். எல்லாக் காலத்திலும் எப்போதும் ஏமாற்ற முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக