வியாழன், 11 ஜூலை, 2024

சுல்பிகர் அலி பூட்டோ: 'பொய் சாட்சிகளால் தூக்கிலிடப்பட்ட நிரபராதி' - பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் கூறியது என்ன?

பாகிஸ்தானின் சுல்பிகர் அலி பூட்டோ, 'பொய் சாட்சியத்தின் பேரில்' தூக்கிலிடப்பட்ட நபர்!
BBC News தமிழ்  :  "ஒருவேளை என்னை மன்னித்தால், இந்தக் கொலை தொடர்பான உண்மைகளை என்னால் வெளியே கொண்டு வர முடியும்."
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் சுல்பிகர் அலி பூட்டோவை தூக்கிலிட்டதில் முக்கியப் பங்கு வகித்த, மன்னிக்கப்பட்ட சாட்சியான மசூத் மஹ்மூத் தனது அறிக்கையில் கூறிய வார்த்தைகள் இவை.
பாகிஸ்தானின் உச்சநீதிமன்றத்தில், திங்களன்று வெளியிடப்பட்ட 'சுல்பிகர் அலி பூட்டோ- அதிபர் குறிப்பு வழக்கின்' தீர்ப்பில் 'கயமை மற்றும் பொய் சாட்சியால் பாதிக்கப்பட்டவர் சுல்பிகர் அலி பூட்டோ' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.       'நியாயமான விசாரணையின்றி ஒரு நிரபராதி தூக்கிலிடப்பட்டார்' என்றும், 'சுல்பிகர் பூட்டோவை தூக்கிலிடும் முடிவு ஜெனரல் ஜியா-உல்-ஹக்கிற்கு நேரடியாகப் பலனளித்தது' என்றும், சுல்பிகர் அலி பூட்டோ விடுவிக்கப்பட்டிருந்தால், 'அவர் ஜியா-உல்-ஹக்கிற்கு எதிராக ஒரு தேசத் துரோக வழக்கைத் தொடங்கியிருக்கலாம்' என்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு கூறியது.

இந்தத் தீர்ப்பில், ஃபெடரல் பாதுகாப்புப் படையின் (எஃப்எஸ்எஃப்- FSF) அப்போதைய தலைமை அதிகாரி மசூத் மஹ்மூத்தின் அறிக்கை மற்றும் அவரது முக்கியப் பங்கு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.

ஃபெடரல் பாதுகாப்புப் படை

சுல்பிகர் அலி பூட்டோ

பட மூலாதாரம், Getty Images

ஃபெடரல் பாதுகாப்புப் படை, அதாவது எஃப்எஸ்எஃப் என்பது சுல்பிகர் அலி பூட்டோவால் உருவாக்கப்பட்ட ஒரு துணை ராணுவப் படை.

பூட்டோ தூக்கிலிடப்பட்ட வழக்கில் வாதியாக இருந்த, அரசியல் தலைவர் அகமத் ரசா கசூரியை பூட்டோவின் உத்தரவின் பேரில் கொல்லச் சதி செய்ததாக எஃப்எஸ்எஃப் அமைப்பு மீது குற்றம் சாட்டப்பட்டது.

ஆனால் நவம்பர் 11, 1975 அன்று அகமத் ரசா கசூரியை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் அவரது தந்தை முகமது அகமத் கான் கசூரி கொல்லப்பட்டார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில், எஃப்எஸ்எஃப் தலைமை அதிகாரி மசூத் மஹ்மூத் முக்கியமானவர்.

ராணுவப் புரட்சிக்குப் பிறகு மசூத் மஹ்மூத் கைது செய்யப்பட்டார். முதலில், அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். செப்டம்பர் 7, 1977இல், லாகூர் மாவட்ட மாஜிஸ்திரேட் குற்றம் சாட்டப்பட்ட மசூத் மஹ்மூத்திடம் இருந்து ஒரு கடிதத்தைப் பெற்றார்.

ஒரு வாரத்திற்குப் பிறகு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அவரது வாக்குமூலம் 1979இல் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் சுல்பிகர் அலி பூட்டோவை தூக்கிலிடுவதற்கான அடிப்படையாக அமைந்தது.

மசூத் மஹ்மூத் தனது அறிக்கையில், சுல்பிகர் அலி பூட்டோ தன்னிடம் அகமது ரசா கசூரியை கொல்ல உத்தரவிட்டதாகவும், "எனக்கு கசூரியின் இறந்த அல்லது காயப்பட்ட உடல் வேண்டும்" என்று கூறியதாகவும் தெரிவித்தார்.

அகமத் ரசா கசூரியின் தந்தை முகமது அகமத் கான், தனது தந்தையின் சிறந்த நண்பர் என்று மசூத் மஹ்மூத் கூறினார். இருப்பினும், அவர் தனது தந்தையின் சிறந்த நண்பரின் மகனைக் கொலை செய்ய உத்தரவிட்டார்.

'மனசாட்சி கடுமையாக உறுத்தியது'

'மனசாட்சி கடுமையாக உறுத்தியது'

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சுல்பிகர் அலி பூட்டோ

ஆனால் மசூத் மஹ்மூத்துக்கு ஏன் திடீரென்று மனமாற்றம் வந்தது என்றால், அவரது கூற்றின்படி, 'இந்தக் கொடூரமான குற்றத்திற்கு உத்தரவிட்டதால், தனக்கு மனசாட்சி கடுமையாக உறுத்தியது.'

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில், "மசூத் சிறையில் இருந்தபோது அவருக்கு குற்றவுணர்வு தோன்றியது. இந்தக் குற்றம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்டது, அந்த நேரத்தில் அவரது மனசாட்சி அமைதியாக இருந்தது. ஆனால் அவர் கைது செய்யப்பட்டவுடன் அது உறுத்தியது," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

"அத்தகைய மனசாட்சி கொண்ட ஒருவர் யாரையாவது கொல்லுமாறு கட்டளையிடுவது என்பது வேறொருவரின் கட்டளையை நிறைவேற்றுவதாகும்" என்று கூறப்பட்டது.

இந்தக் கடிதம் எழுதப்பட்டு ஒரு வாரத்திற்குப் பிறகு, மசூத் மஹ்மூத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டு, அன்றே அவரது வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டது.

மசூத் மஹ்மூத் யார், பூட்டோவால் உருவாக்கப்பட்ட துணை ராணுவப் படைக்கு அவர் எப்படித் தலைவரானார் மற்றும் அவரது சாட்சியம் குறித்து உச்சநீதிமன்றம் என்ன கூறியுள்ளது என்பதைத் தெரிந்து கொள்வோம்.

மசூத் மஹ்மூத் எஃப்எஸ்எஃப் தலைமை அதிகாரி ஆனது எப்படி?

நீதிமன்றத்தின் முன் மசூத் மஹ்மூத் அளித்த பெரும்பாலான அறிக்கைகள் தேவையற்றவை என்றும், அதன் முதல் நான்கு பக்கங்களில் அவர் வகித்த பதவிகள் மற்றும் அவர் 21வது அளவை எட்டிய விதம் ஆகியவற்றை மட்டுமே குறிப்பிட்டுள்ளதாகவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

இந்த அறிக்கையில், அவர் ராயல் இந்தியன் ஏர்ஃபோர்ஸில் சில காலம் பணியாற்றியதால், போருக்காக ஒதுக்கப்பட்ட இருக்கையில் இந்திய காவல்துறையில் நியமனம் செய்யப்பட்டதாகக் கூறினார். பாகிஸ்தான் ஸ்தாபிக்கப்பட்ட பிறகு, அவர் செப்டம்பர் 18, 1948 அன்று துணைக் காவல் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்றார்.

இதற்குப் பிறகு ஏப்ரல் 12, 1974 அன்று, பிரதமர் பூட்டோ அவரை அழைத்து, அவரது 'நேர்மை, கடின உழைப்பு மற்றும் நல்ல குணத்தை' பாராட்டியதாக அவரது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம், "உங்களுக்காக எந்தக் குற்றத்தையும் செய்யத் தயாராக இருக்கும் ஒரு நபரிடம், நேர்மை மற்றும் நல்ல குணத்தையா எதிர்பார்ப்பீர்கள் என்ற கேள்வி எழுவதாகக்" கூறியது.

மசூத் மஹ்மூத் அறிக்கையில், பூட்டோ ஒரு மணிநேரம் அவரைச் சமாதானப்படுத்த முயன்றார், அதன் பிறகு அவர் ஃபெடரல் பாதுகாப்புப் படையின் (FSF) தலைமை அதிகாரி பதவிக்கு அவரை ஆதரித்தார். அந்தக் காலத்தில் படைக்குப் பயிற்சி அளித்து, அதை ஒழுங்கமைக்க மசூத் மஹ்மூத் பணியாற்றினார்.

பிரதமரின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த சயீத் அகமது கான் மற்றும் அவரது உதவியாளர் அப்துல் மஜீத் பஜ்வா ஆகியோர், பூட்டோ சொன்னதைச் செய்யாவிட்டால், "உன் மனைவியும் குழந்தைகளும் உன்னை மீண்டும் பார்க்க மாட்டார்கள்" என்று தன்னிடம் கூறியதாகவும் மசூத் கூறினார்.

இந்த வழக்கில் சயீத் அகமது கான் சாட்சியாக ஆஜர்படுத்தப்படவில்லை என்றும், அப்துல் மஜீத் பஜ்வா ஏற்கெனவே இறந்துவிட்டார் என்றும், எனவே அவர்கள் கூறியதாகக் கூறப்படும் கூற்றுகள் செவிவழிச் செய்திகளைத் தவிர வேறில்லை என்றும் உச்சநீதிமன்றம் கூறியது.

இதற்குப் பிறகு மசூத் மஹ்மூத் தனது கோழைத்தனத்திற்கான காரணத்தையும் விளக்கியதாகக் கூறிய நீதிமன்றம், "வக்கார் உங்களைத் துரத்துவதை நீங்கள் விரும்பமாட்டீர்கள் அல்லவா?" என்று பூட்டோ தன்னிடம் கூறியதாக மசூத் கூறினார்.

இங்கு வக்கார் என்ற நபரின் அடையாளம் வெளியிடப்படவில்லை மற்றும் தீர்ப்பின்படி, வக்காரும் சாட்சியாக ஆஜர்படுத்தப்படவில்லை.

கசூரியை கொல்வதற்கான உத்தரவு

முகமது அகமத் கான்

பட மூலாதாரம், AHMED RAZA KASOORI

படக்குறிப்பு, முகமது அகமத் கான், அகமத் ரசா கசூரியின் தந்தை

இதேபோல், மசூத் மஹ்மூத் எந்த ஆதாரமும் இல்லாமல் குறிப்பிட்ட மற்றொரு பெயர், குவெட்டாவில் எஃப்எஸ்எஃப்-இன் இயக்குநராக இருந்த எம்.ஆர்.வெல்ச் மற்றும் குவெட்டாவில் கசூரியை கொலை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டவர்.

மசூத் மஹ்மூத், "மியான் முகமது அப்பாஸ் (இயக்குநர்- எஃப்எஸ்எஃப்), ஹக் நவாஸ் தவானா (முன்னாள் தலைமை அதிகாரி- எஃப்எஸ்எஃப்) மூலம் அகமத் ரசா கசூரியை கொல்லுமாறு பூட்டோ உத்தரவிட்டதாக" கூறினார்.

"அகமத் ரசா கசூரியின் உடலையோ அல்லது அவரது சித்திரவதை செய்யப்பட்ட உடலையோ முழுவதும் கட்டப்பட்ட நிலையில் கொண்டு வருமாறு மியான் அப்பாஸிடம் சொல்லுங்கள் என பூட்டோ பின்னர் என்னிடம் உத்தரவிட்டதாக" கூறுகிறார் மசூத்.

விசாரணை நீதிமன்றத்தில் மியான் முகமது அப்பாஸ் தனது அறிக்கையைத் திரும்பப் பெற்றதாகவும், முன்னாள் எஃப்எஸ்எஃப் தலைமை அதிகாரி ஹக் நவாஸ் தவானா சாட்சியாக ஆஜர்படுத்தப்படவில்லை என்றும் நீதிமன்றம் தீர்ப்பில் எழுதியது.

பூட்டோ நீண்டகாலமாக கசூரியை கொல்ல விரும்பியதாகவும், இது தொடர்பாக அவர் ஏற்கெனவே மியான் அப்பாஸுக்கு உத்தரவு பிறப்பித்ததாகவும், ஆனால் அவர் அந்த உத்தரவுகளைப் பின்பற்றவில்லை என்றும் மசூத் மஹ்மூத் கூறினார்.

இருப்பினும், மசூத் மஹ்மூத்திடம் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவு வழங்கப்பட்டபோது, ​​அகமத் ரசா கசூரிக்கு பதிலாக அவரது தந்தை முகமது அகமது கான் கொல்லப்பட்டார்.

"மசூத் மஹ்மூத் தன்னை கடவுள் நம்பிக்கை கொண்டவராகவும், ஒருவரைக் கொல்ல உத்தரவு பிறப்பிப்பது கடவுளின் ஆணைகளுக்கு எதிரானது என்பதை அறிந்தவராகவும் காட்டிக்கொண்டார். ஆனால், பூட்டோ அவருக்குக் கொலை செய்வதற்கான உத்தரவை அளித்தார். 'இதனால் கடவுளின் கட்டளையை மீறி, விலைமதிப்பற்ற மனித உயிரைப் பறிப்பதில் நான் முக்கியப் பங்காற்றினேன், கடவுளே என்னை மன்னியுங்கள்' என மசூத் தெரிவித்துள்ளார்", என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பு கூறியது.

“கடவுளின் கட்டளையை மறுத்ததற்கு மசூத் மஹ்மூத் கூறிய காரணம், அவர் திருமணமானவர். 'ஒருவேளை குடும்பம் இல்லாமல் இருந்திருந்தால், என் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் அந்த உத்தரவை நான் பின்பற்றியிருக்க மாட்டேன், வெளியேறியிருப்பேன்' என்றார்" என அந்தத் தீர்ப்பு கூறுகிறது.

மசூத் மஹ்மூத்தின் நற்பெயர் குறித்து நீதிமன்றம் கூறியது என்ன?

மசூத் மஹ்மூத்

பட மூலாதாரம், Social media

உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் மசூத் மஹ்மூத்தின் நற்பெயர் குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளது.

நீதிமன்றத் தீர்ப்பின்படி, "அக்கால நீதிமன்றங்களால் மசூத் மஹ்மூத்தின் நற்பெயரில் எந்தச் சந்தேகமும் தெரிவிக்கப்படவில்லை."

மசூத் மஹ்மூத் தனது மனசாட்சியைப் பற்றிப் பலமுறை பேசியதாகவும், "அவரது மனசாட்சி அவரை மிகவும் குற்றவாளியாகக் கருதியது" என்றும், "இந்தச் செயல் (கொலை) எனது மனசாட்சிக்கு எதிரானது" என்றும் அவர் தெரிவித்ததாக நீதிமன்றம் கூறியது.

ஆனால் அவர் சிறையில் சிறிது காலம் கழிக்க வேண்டியிருந்த போதுதான் அவரது மனசாட்சி விழித்துக்கொண்டது. அந்த மனசாட்சி முதலில் தனக்காக மன்னிப்பு கேட்டு இந்த குற்றவுணர்வில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டது.

இந்தச் சூழ்நிலையில் தனக்கான பாதுகாப்பும் வசதியும், தனது மனசாட்சியைவிட அவருக்கு முக்கியமாகத் தோன்றியுள்ளது. அப்படியிருக்க அவர் உண்மையைச் சொல்கிறாரா அல்லது சந்தர்ப்பவாதியா என்ற கேள்வி எழுவதாகவும் நீதிமன்றம் கூறுகிறது.

சுல்பிகர் அலி பூட்டோ

பட மூலாதாரம், Social media

மசூத் மஹ்மூத் தொடர்பான விவாதத்தை முடித்துக்கொண்ட நீதிமன்றம், "அவர் தனது அறிக்கையில் வியத்தகு முறையில் தனது மதம் (இஸ்லாம்) குறித்த கருத்துகளை முன்வைத்தார், ஆனால் 'ஒரு நபரைக் கொல்வது என்பது முழு மனிதகுலத்தையும் கொல்வது' என்ற இஸ்லாத்தின் அடிப்படைக் கட்டளையை அவர் மறந்துவிட்டார்" எனக் கூறியது.

நீதிமன்றத் தீர்ப்பின்படி, மசூத் மஹ்மூத் மற்றும் மியான் முகமது அப்பாஸ் ஆகியோரது சாட்சியங்களின் அடிப்படையில் அரசுத் தரப்பு தனது முழு வழக்கையும் கட்டமைத்தது. ஆனால் மியான் முகமது அப்பாஸ் தனது சாட்சியத்தை வாபஸ் பெற்று, அதற்கு அப்படியே எதிரான ஓர் அறிக்கையை அளித்தார்.

இந்தக் காலத்தில் ஹக் நவாஸ் தவானாவும், அப்துல் ஹமீத் பஜ்வாவும் இறந்துவிட்டனர். எம்.ஆர்.வெல்ச் மற்றும் சயீத் அகமது கான் ஆகியோரை மன்னிப்பு கோரும் சாட்சிகளாக ஆக்காமல் அரசுத் தரப்பு சாட்சிகளாக ஆஜர்படுத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக