புதன், 10 ஜூலை, 2024

Being There வார்த்தைகளை தாண்டிய ஒரு உலகம்! தயாரிப்பு $7 மில்லியன் - வசூல் $30.2 மில்லியன்

ராதா மனோகர் :   Being There வார்த்தைகளை தாண்டிய ஒரு உலகம்! 7 மில்லியன் டாலரில் தயாரிக்கப்பட்டு $30.2 மில்லியன் டாலரை வசூலித்தது
Peter Sellers Shirley MacLaine
Being There  இது 1979 வெளிவந்த ஆங்கில படம்.
இந்த திரைப்படம் மிகவும் சவாலான ஒரு கதையை மிகவும் நுட்பமாக கையாண்டு வெற்றி பெற்றது.
மிக சவாலான இக்கதையில் நடித்தவர்கள்,
புகழின் உச்சியில் இருந்த பீற்றர் செல்லர்ஸ், ஷேர்லி மக்கலின் மைக்கல் டக்லஸ் போன்றவர்கள்!
ஒரு பெரிய பணக்காரர் இறந்து விடுகிறார்.
அவரின் வீட்டு தோட்டத்தை கவனித்து வந்த ஒரு விதமான மனிதரின் கதைதான் இது.
அந்த தோட்டக்காரர் கார்டனர் Chauncey Gardner  என்றே தன்னை குறிப்பிடுகிறார்.

May be an image of 2 people and fur coat

வீட்டுக்காரர் இறந்ததும் வேறு ஊரில் இருந்த அவரின் வாரிசுகள் வந்து வீட்டை பொறுப்பெடுக்கும் பொழுது இந்த கார்டனருக்கு செலுத்த வேண்டிய பணம் பற்றிய பேச்சு வருகிறது.
அப்போது கார்ட்னர்  தனக்கும் இந்த வீட்டிற்கும் சம்பந்தம் இல்லை என்று கூறிவிட்டு,
.தனது ஆடைகளை மட்டும் எடுத்துகொண்டு அடுத்த நேர வாழ்வைப்பற்றி எதுவித சிந்தனையும் இன்றி வெளியேறுகிறார்.
அந்த பணக்காரரின் ஆடைகளை அணியும் உரிமையை அவர் இவருக்கு கொடுத்திருந்தார்.
அந்த வீட்டை விட்டு மிகவும் விலை உயர்ந்த கோட்சூட் அணிந்து இவர் போவதை பார்த்தால் இவர் ஒரு வெறும் மனிதர் என்று யாருக்கும் தோன்றாது.



இந்த கார்டனர் எதுவித சிந்தனைகளும் அற்ற ஒரு ஞானி போல தோன்றும் ஒரு சாதாரண மனிதராவர்.
இதுவரை வெளியுலகம் எதுவும் தெரியாமல் தன்னை பற்றியும் எதுவும் தெரியாமல் ஒரு அப்பாவி அல்லது ஒரு சித்த புருஷன் போல் வாழ்ந்தவர்.

இனி அந்த வீட்டில் தனது இருப்பு முடிந்து போய்விட்டது என்பதை ஏற்று கொண்டு வீட்டுக்கு வெளியே வந்த அவருக்கு வெளி உலகம் புதிது
புதிதாக அனுபவங்களை அல்லது படிப்பினைகளை காட்ட தொடங்கியது.

என்னதான் உலகம் அவரை நோக்கி வந்தாலும் அவரோ தனது  இருப்பில் தானாக தான் மட்டுமாகவே இருந்தார்.
 உண்மையில் பிரபஞ்சம் இழுத்த இழுப்புக்கு இழுபட்டு கொண்டிருந்தார்.

தெருவில் எந்த சிந்தனையும் இல்லாது நடந்து கொண்டிருக்கும் போது ,
ஒரு பணகாரியின் கார் வந்து அவரை மோதியது.
அவளும் அவளது கார் ஓட்டுனரும் பதற்றமடைந்த இவரை தங்கள் காரில் ஏற்றி கொண்டுபோய் மருத்துவ உதவியை அளிக்கிறார்கள்.
எல்லாவற்றையும் எந்த எதிர்பார்ப்பும் எந்த தன்முனைப்பும் அற்று எதிர்நோக்கிறார்.
ஒரு சில நாட்களின் அறிமுகத்திலேயே அவர்களின் மனதில் உயர்ந்த இடத்தை பெற்று விடுகிறார்!

பின்பு அந்த பணக்காரியின் காதலையும் பெற்றார்
ஆனால் அது அவருக்கு தெரியவே இல்லை.
மரணப்படுக்கையில் இருக்கும் வீட்டுக்காரரோ கார்டனரை தனது ஒப்புயர்வற்ற வழிகாட்டியாகவே கொண்டாட தொடங்கி விட்டார்.
கார்டனர் கேட்டால் எதுவும் செய்ய தயாராகவே இருவரும் இருந்தனர்.
கார்டனரின் மிக சாதரணமான வார்த்தைகள் அவரின் அசையாத அமைதி எல்லாம் சேர்த்து அவரை ஒரு மேதை போல காட்டியது.
இதற்கிடையில் அந்த பணக்காரி கார்ட்னரை காதலிக்கவே தொடங்கி விட்டாள்!

அமெரிக்க ஜனாதிபதி மற்றும் ஊடகங்கள் எல்லாம் கூட கார்டனரை மொய்க்க தொடங்கி விட்டது.
ஆனாலும் இத்தனைக்கும் கார்டனரோ பொய் ஒன்றும் சொல்லவில்லை நடிக்கவும் இல்லை.
மிக சாமான்ய மனிதராக ஆனால் அளவு கடந்த அமைதியும் சாந்தமும் மிக்கவராக இருந்தார்.
ஒரு நாள் அந்த பணக்காரர் இறக்கும் நேரத்தில் தனது மனைவியை கார்டனரின் கையில் ஒப்படைத்து விட்டு  இறந்து விடுகிறார்.
இதற்கும் கார்டனர் அமைதியாக நீங்கள் இப்போ இறக்க போகிறீர்கள் அதுதான் உண்மை என்று நிதானமாக கூறுகிறார். கார்டனரின் அமைதியான சுபாவம் அந்த பணக்காரருக்கு மிகபெரும் திருப்தியையும் அமைதியையும் தருகிறது.
அவரின் மனைவி கார்டரின் காதலை பெற என்னனவோ முயற்சி செய்கிறார்.
கார்டனரோ இதெற்கெல்லாம் அப்பாற்பட்டவர் போல தெரிந்தார். ஆனால்

அவரின் அண்மை அவளுக்கு ஆறுதலை கொடுக்கிறது.
அந்த பணக்காரரின் இறுதி சடங்கில் ஜனாதிபதி உட்பட பல பெரும் தலைகள் கலந்து கொண்டு பலவாறு உரை ஆற்றுகிறார்கள்.
கார்டனரோ அந்த பணக்காரரின் ஞாபகத்துக்காக அவரின் பெயர் சூட்டப்பட்ட அந்த பரந்த கார்டன் வெளியில் மெதுவாக நடந்து செல்கிறார். ஏனையோர் இறந்தவரின் மேன்மை போன்ற சமாசாரங்களை சம்பிரதயமாக பேசுகிறார்கள்...
இந்த படம் உண்மையில் எதை சொல்ல வருகிறது என்பதில் மிகபெரும் சவால் காத்திருக்கிறது.
இன்னும் சரியாக சொல்வதென்றால் இது ஒன்றையும் சொல்லவில்லை. ஆனால் வார்த்தைகளால் சொல்லி விளங்க வைக்க முடியாத ஒரு மர்ம நாடகத்தை  காட்சிகளாலும் கார்டனர் பாத்திரத்தின் மூலமாகவும் வெளிப்படுத்துகிறது.
வார்த்தைகளை தாண்டிய ஒரு உலகம்!
காணும் காட்சிகளை மீறிய ஒரு உண்மை!
மனித உணர்சிகளின் ரசனையை மீறிய ஒரு அனுபவம்!
புரிந்து புரியாமல் இருக்கின்ற இந்த பிரபஞ்சத்தின் ரகசியத்தை கொஞ்சமாவது புரிய வைக்க இந்த படம் முயற்சி செய்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம்.
எல்லாவற்றிலும் மேலாக அந்த கார்டனர் பாத்திரத்தில் பீட்டர் செல்லர்ஸ் அதுவாகவே வாழ்ந்துவிட்டார்.
இந்த படம் பார்த்து முடிந்த பின்பும் கார்டனரை நோக்கி நாம் மெதுவாக பின் தொடரும் ஒரு எண்ணம் நமக்கு வரும், அப்படி ஒரு காந்த சக்தி அந்த பாத்திரம் மேல் எல்லோருக்கும் வரும்.
மிக எளிமையிலும் எளிமையாக வாழ்வை அவர் பார்த்தார்...இல்லை இல்லை உண்மையில்  அவர்  ஒன்றையுமே பார்க்க வில்லை ஆனால் தானே அதுவாக இருந்தார்...
இந்த உலகத்தை பார்க்கும் அவர் அங்கே....தான்  Being there!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக