ஞாயிறு, 28 ஜூலை, 2024

சென்னை - -14 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 8 பேர் கைது-

 மாலை மலர்  :   சென்னையில் 14 வயது சிறுமியை ஓராண்டாக சிறை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 4 வீடுகளில் சிறுமியை பூட்டி வைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். பரபரப்பான இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
சென்னை தாம்பரத்தை அடுத்த சேலையூர் அருகே உள்ள படுவஞ்சேரியில் தங்களது ஒரே மகளை அனாதையாக விட்டு விட்டு தாய்-தந்தை இருவரும் தனித்தனியாக பிரிந்து சென்று விட்டனர். இதனால் அதே பகுதியை சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணின் அரவணைப்பில் 14 வயது சிறுமி இருந்து வந்துள்ளார்.


இந்த நிலையில் சிறுமி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளுக்கும், சேலையூர் போலீசாருக்கும் தகவல் கிடைத்தது. இதையடுத்து குழந்தைகள் நல அதிகாரிகள் படுவஞ்சேரியில் உள்ள லட்சுமியின் வீட்டில் இருந்து சிறுமியை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது சிறுமி அளித்த தகவல்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.

லட்சுமியும் அவருடன் இருக்கும் சிலரும் தன்னை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் தள்ளிவிட்டதாகவும், பலர் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருப்பதாகவும் பலர் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருப்பதாகவும் திடுக்கிட வைக்கும் வகையில் வாக்குமூலம் அளித்தார்.

இதுபற்றி சேலையூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சிறுமி பாலியல் தொழிலில் ஈடுபட்டது தொடர்பாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்தன. அதன் விவரம் வருமாறு:-

14 வயது சிறுமியை சில ஆண்டுகளுக்கு முன்பே தாயும் தந்தையும் தவிக்க விட்டு விட்டு திசைமாறி சென்றுள்ளனர். இருவரும் வேறு திருமணம் செய்து கொண்டு பெற்ற மகளைப் பற்றி கவலைப்படாமல் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். இதனால் சிறுமி முழுக்க முழுக்க லட்சுமியின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்துள்ளார்.

இதையடுத்து லட்சுமி ஆதரவற்ற சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பணம் சம்பாதித்து வந்து உள்ளார். லட்சுமியுடன் சேர்ந்து அவரது சகோதரி கவிதா, மாமியார் கற்பகம், 2-வது கணவரான பிரகாஷ் ஆகியோரும் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்திருப்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் இவர்கள் 4 பேரையும் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது சேலையூர் படுவஞ்சேரியில் உள்ள சிறுமியின் தாயின் உறவினர் வீட்டில் வைத்து முதலில் சிறுமி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக அதே பகுதியில் உள்ள இன்னொரு வீடு, செங்கல்பட்டு மற்றும் சென்னை கே.கே.நகரில் உள்ள வீடு என மொத்தம் 4 வீடுகளில் வைத்து ஈவுஇரக்கமின்றி சிறுமி பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதையும் போலீசார் கண்டு பிடித்தனர்.

இதையடுத்து சிறுமியிடம் தகாத முறையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவர்கள் யார்-யார்? என்கிற விவரங்களை சேகரித்த போலீசார் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து பூசாரி மற்றும் புரோகிதரான சீனிவாசன் மற்றும் தாமோதரன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். இதன் மூலம் சிறுமி பாலில் வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களில் தாமோதரன், சீனிவாசன் மற்றும் இன்று கைதான 2 பேர் ஆகிய 4 பேரும் சிறுமி என்றும் பாராமல் அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து 3 பெண்கள் உள்பட 8 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

பள்ளிக்கரணை துணை கமிஷனர் கவுதம் கோயல் மேற்பார்வையில், சேலையூர் உதவி கமிஷனர் கிறிஸ்டின் ஜெயசீல், இன்ஸ்பெக்டர் சந்துரு, மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராக்குமதி மற்றும் போலீஸ் படையினர் இந்த வழக்கில் மேலும் யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது பற்றியும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது போன்று சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமியை போலீசார் காப்பகத்தில் வைத்து பராமரித்து வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக