நக்கீரன் : “சூரியனை ஒருபோதும் மறைக்க முடியாது” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி உயிரிழந்ததைத் தொடர்ந்து
அந்தத் தொகுதிக்குக் கடந்த 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா, பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (13.07.2024) எண்ணப்பட்டன. அதன்படி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது.
இதனையடுத்து 20 சுற்றுகள் முடிவில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1 லட்சத்து 24 ஆயிரத்து 53 வாக்குகள் பெற்று 67 ஆயிரத்து 757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதற்கிடையே விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி உறுதியான நிலையில் அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான அறிவாலயத்திற்கு வருகை தந்துள்ளார். அங்குத் திரண்டிருந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினார்.
இந்நிலையில் விக்கரவாண்டி தேர்தலில் திமுக வெற்றி பெற்றது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எத்தனை பொய்களை ஒன்றாகத் தைத்துப் போர்வை நெய்தாலும், சூரியனை ஒருபோதும் மறைக்க முடியாது என்று விக்கிரவாண்டி மக்கள் உணர்த்தியுள்ளனர். அண்ணா அறிவாலயத்தில் பொங்கும் மகிழ்ச்சி தமிழ்நாடெங்கும் எதிரொலிக்கட்டும்!” எனக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான காணொளி ஒன்றையும் அப்பதிவில் இணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
“சர்வாதிகாரத்தை ஒழிக்க மக்கள் விரும்புகின்றனர்” - ராகுல் காந்தி எம்.பி.!
தமிழகம், மேற்கு வங்கம் உட்பட நாடு முழுவதும் உள்ள 7 மாநிலங்களில் காலியாக உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதனையடுத்து இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (13.07.2024) எண்ணப்பட்டன. அதன்படி 13 தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 10 தொகுதிகளில் இந்தியா கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. அந்த வகையில் ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள டெஹ்ரா மற்றும் நலகர் ஆகிய இரு தொகுதிகளிலும், உத்தரகாண்ட் மாநிலத்தில் பத்ரிநாத் மற்றும் மங்களூர் ஆகிய இரு தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
அதே போன்று தமிழகத்தில் விக்கிரவாண்டி தொகுதியிலும், பஞ்சாப் மாநிலத்தில் ஜலந்தர் மேற்கு தொகுதியிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. மேலும் மேற்கு வங்கத்தில் உள்ள ராய்கஞ்ச், ரணகாட் தக்ஷின், பாக்தா மற்றும் மாணிக்தலா ஆகிய நான்கு தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இந்த இடைத்தேர்தல் முடிவின் படி காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலா 4 தொகுதிகளையும், ஆம் ஆத்மி, திமுக சார்பில் தலா ஒரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. அதே சமயம் பீகாரில் உள்ள ரூபவுலி தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் சங்கர் சிங் வெற்றி பெற்றுள்ளார். இமாச்சல பிரதேசத்தின் ஹமீர்பூர் உள்பட இரு தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பாஜக பின்னியிருந்த பயம், குழப்பம் என்ற வலை உடைந்துவிட்டது என்பதை 7 மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளன. விவசாயிகள், இளைஞர்கள், தொழிலாளர்கள், தொழிலதிபர்கள், ஊழியர்கள் என ஒவ்வொரு வர்க்கமும் சர்வாதிகாரத்தை முற்றிலுமாக அழித்து நீதியின் ஆட்சியை நிலைநாட்ட விரும்புகிறது. பொதுமக்கள் தங்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்காகவும், அரசியலமைப்பைப் பாதுகாப்பதற்காகவும் இந்தியா கூட்டணியுடன் முழுமையாகத் துணை நிற்கின்றனர். ஜெய் ஹிந்துஸ்தான், ஜெய் அரசியலமைப்பு” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக