சனி, 27 ஜூலை, 2024

தன்னுயிரை கொடுத்து குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய டிரைவர்:சேமலையப்பன் குடும்பத்திற்கு ஐந்து இலட்சம்! (கள்ளச்சாராயம் குடித்து செத்தவர்களுக்கு 10 இலட்ச்சம்)

மின்னம்பலம் - Selvam :   பள்ளிக் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றி தன்னுயிர் நீத்த ஓட்டுநர் சேமலையப்பனின் பெற்றோர் மற்றும் மகன்களிடம் ரூ.5 லட்சத்திற்கான காசோலையினை  தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இன்று (ஜூலை 26) வழங்கினார்.
திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் காங்கேயம், சத்யா நகரைச் சேர்ந்த சேமலையப்பன் (வயது 49) வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த ஜூலை 24-ஆம் தேதி மாலை பள்ளி முடிந்தவுடன் பள்ளிக் குழந்தைகளை அழைத்துக் கொண்டு கோவை திருச்சி நெடுஞ்சாலை வெள்ளக்கோவில் பழைய காவலர் குடியிருப்பு அருகே பள்ளி வாகனத்தை ஓட்டிக்கொண்டு வந்து கொண்டிருந்தபோது சேமலையப்பனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.



உடனடியாக தான் ஒட்டிவந்த பள்ளி வாகனத்தில் இருந்த பள்ளிக் குழந்தைகளுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாத வகையில் பத்திரமாக நிறுத்திய பின்னர் சேமலையப்பன் உயிரிழந்தார்.

இறக்கும் தருவாயிலும் இளம் பிஞ்சுகளின் உயிர்காத்த சேமலையப்பன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின், அவரது மனிதநேயமிக்க செயலால் புகழுருவில் என்றும் மக்கள் மனதில் வாழ்வார் என்று புகழாரம் சூட்டினார்.

மேலும், மறைந்த சேமலையப்பன் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

முதல்வரின் அறிவிப்பின்படி, அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இன்று சேமலையப்பன் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, அவரது பெற்றோர் மற்றும் மகன்களிடம் ரூ.5 லட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்.

இந்நிகழ்வின் போது, மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத் தலைவர் பத்மநாபன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) குமாரராஜா ஆகியோர் உடனிருந்தனர்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஓட்டுநர் சேமலையப்பன் இல்லத்திற்கு சென்று அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
செல்வம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக