ஞாயிறு, 23 ஜூன், 2024

Dasvidaniya பார்க்க வாய்ப்பு கிடைப்பவர்கள் பாக்கியசாலிகள்.

ராதா மனோகர் :  சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான "தஸ்விதானியா"  என்ற பல் மொழி திரைப்படம் ஞாபகத்திற்கு வருகிறது. அத்திரைப்படம் பற்றி முன்பு ஒரு கட்டுரை எழுதியிருந்தேன்  அது பின்வருமாறு:  
Dasvidaniya  ஓடிக்கொண்டே இருந்தவன் திடீரென்று  ஓட்டத்தை
நிறுத்தவேண்டிய நிலைக்கு ஆளானான். அப்பொழுதுதான் அவனுக்கு உறைத்தது அடடே  இவ்வளவு  காலமாக அவன்  ஓடிகொண்டே  இருந்திருக்கிறான், வேறு என்னதான் செய்தான்? எல்லாமே செய்தான் ஆனால் அவனுக்காக அவன் எதுவுமே செய்யவில்லை.
இந்த வாழ்வு முடியப்போகிறதே என்று அவன் கவலைப்படுவது ஒரு பெரிய ஜோக்.
May be an image of 2 people and people smiling


ஏனென்றால் அவன் இதுவரை வாழவே இல்லை, வெறுமனே ஓடிகொண்டல்லவா இருந்திருக்கிறான்?
வாழ்ந்துகொண்டு இருக்கும் ஒருவன் தன்வாழ்வு முடியப்போகிறதே என்று கவலை கொண்டால் அதில் நியாயம் இருக்கும்.ஆனால் இவன்தான் வாழவே இல்லையே இல்லாத வாழ்க்கை இனி இருந்தென்ன போயென்ன?

இந்த  பிரமாண்டமான கேள்வி அவனை நோக்கி புயலாக அடித்தது,
இனி என்ன செய்யலாம் ?
வாழ்ந்து பார்க்கலாமே?
வாழ்ந்தானா?
அவனுக்கும் எத்தனையோ கனவுகள் இருந்தன. அன்றாட பிரச்சனைகளில் அவன் ஓடிகொண்டே இருந்தான், நாற்பதை கடந்தும்  தனிக்கட்டையாகவே இருந்தான்.
வயோதிப அம்மா ...வாட்டி பிழிந்து எடுக்கும் முதலாளி....வீட்டுக்கும் நாட்டுக்கும் வேலை இடத்து நண்பர்களுக்கும் எல்லோருக்குமே நல்லவன்.
அவன் இந்த வாழ்வை விரும்பி இருந்தானா இல்லையா என்ற கேள்வியும் யாரும் கேட்கவில்லை அவனும் தன்னை தானும் கேட்கவில்லை.
ஓட்டத்திற்கு ஒருநாள் காலக்கெடு விதிக்கப்பட்டது!
ஆடிப்போனவன் முகத்துக்கு நேரே ஒரு கேள்வி கணை வந்து பாய்ந்தது.
வாழ்க்கையை பற்றிய கவலை வாழ்பவர்களுக்கு அல்லவா வரவேண்டும்?
நீதானே வாழவே இல்லையே? ஓடிகொண்டல்லவா இருக்கிறாய்?
உனக்கேன் அந்த கவலை?
ஓட்டம் நிற்கவேண்டிய நேரத்தில் வாழ்ந்து பார்க்க முடியுமா?
முயற்சிதான்!
May be an image of 1 person and text
முதலில் அவன் ஞாபகத்துக்கு வந்தது அவனது சின்னஞ்ச்சிறு ஆசைகள் சிலநேரம் அவை பேராசைகள் ஆகவும் இருந்தது.
எது பேராசை? எது சிறு ஆசை?
அவனது ஆசைகளில் அர்த்தம் இருந்ததா?
அவற்றில் நீந்த அவனால் முடிந்ததா?
நீச்சலும் முடிவும் அவனுக்கு என்று பிரத்தியேகமாக கடவுள் எழுதிவிட்டான் போலும்?
ஓட்டம் நிற்குமுன் வாழ்ந்தானா?  

இதை ஒரு வெறும் திரைப்படமாக என்னால் விமர்சிக்க முடியாமல் இருக்கிறது,  இதில் வரும் நடிகர்கள் எவரையுமே வெறும் நடிகர்களாக காணவே முடியாமல் இருக்கிறது,
அத்தனை பெரும் கதையின் ஆத்மாவை மனதில் வாங்கி அப்படியே வாழ்ந்துள்ளர்கள்.
எவர் மனதை நொறுங்க வைக்கும் சோகத்தை அலட்டல் இல்லாமல் வெறும் கண்களாலும் முகபாவங்களாலும் காட்டும் விநாயக்  பதக்  பல படங்களில் வில்லனாக நடிப்பவர்.
ஆனால் இதில் பார்த்தால் இவரை கட்டிபிடித்து கொண்டு அழவேண்டும் போல் இருக்கிறது.அப்படி தத்துருபமான நடிப்பு .

இந்த கதையின்  அடி நாதமாக ஒரு பெரிய கருத்து ஓடிக்கொண்டு இருக்கிறது.

வாழ்வின் அழகை வாழ்வின்  அற்புத தன்மையை இதைவிட யாராலும் வெளிப்படுத்தி விடமுடியாதோ என்ற அளவு வெளிப்படுத்தி உள்ளது இந்த தஸ்விதானியா .
 நல்லவன் வாழவே முடியாதா என்ற கேள்வியும் அதற்கு பதிலாக அவன் தன் வாழ்வை தானே மதிக்க வேண்டும் என்ற  கருத்தை பதிலாக தருகிறது.

உனது  வாழ்வும்   விருப்பங்களும்  உனக்கே  பெரிதாக தோன்றாவிட்டால் உனக்கு யாரால்  உதவி செய்ய முடியும்?
 இந்த படம் வாழ்வின் பெருமையை அல்லது அதன் அவசியத்தை  அழுத்தம் திருத்தமாக மனதில் பதிய வைத்து விடுகிறது,
Dasvidaniya பார்க்க வாய்ப்பு கிடைப்பவர்கள்  பாக்கியசாலிகள்.
NB: வெறும் பத்து லட்சத்தில் தயாரிக்கப்பட்டு நூற்றி எழுபது லட்சம் வசூலித்த அற்புதமான திரைப்படம் இது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக