செவ்வாய், 4 ஜூன், 2024

தேர்தல் வெற்றி கொண்டாட்டம் - தயாராகும் காங்கிரஸ் : தயங்கும் பாஜக

Image

மின்னம்பலம் - Kavi : தேர்தல் வெற்றி கொண்டாட்டம் – தயாராகும் காங்கிரஸ் : தயங்கும் பாஜக
வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 24 மணி நேரம் கூட இல்லாத நிலையில், காங்கிரஸ் வெற்றி கொண்டாட்டத்துக்கு தயாராகி வருகிறது.
மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. 64 கோடி பேர் வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை முடிவில் வெற்றிப் பெறப்போவது பாஜக தலைமையிலான என்.டி.ஏ.கூட்டணியா? காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.



தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் பாஜக கூட்டணியே வெற்றி பெறும் என்று கூறுகின்றன.

ஆனால் கருத்து கணிப்பு முடிவுகளை விமர்சித்து வரும் காங்கிரஸ் தலைவர்கள், ஜூன் 4 வரை பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறி வருகின்றனர்.

இன்று டெல்லி திமுக அலுவலகத்தில் கலைஞர் புகைப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த போது, “கருத்து கணிப்பு முடிவுகளுக்கு முற்றிலும் நேர்மாறாக தேர்தல் முடிவுகள் வரும். பொறுத்திருந்து பாருங்கள்” என்று கூறினார்.

Image

இந்தநிலையில் காங்கிரஸ் கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகிறது. டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பெரிய பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில், இங்கு வைத்து காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் நடத்துவதற்கும், கொண்டாடுவதற்கும் செய்தியாளர்களைச் சந்திப்பதற்கும் பந்தல் அமைக்கப்பட்டு வருவதாக டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்தியப் பிரதேசத்தில் தேர்தல் வெற்றியை கொண்டாட அம்மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அவ்னீஷ் பண்டேலா, 100 கிலோ லட்டு ஆர்டர் கொடுத்திருக்கிறார்.

கடந்த இரு மக்களவைத் தேர்தலிலும் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி பெறவில்லை. என்றாலும் இந்த முறை வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையில் கொண்டாட்டத்துக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில், வெற்றி கொண்டாட்டம் குறித்து தேர்தல் முடிவுகள் வர தொடங்கிய பின்னரே முடிவெடுப்போம் என்று பாஜக பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று (ஜூன் 3) பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த வினோத் தாவ்டே,  “வெற்றி கொண்டாட்டம் குறித்து இதுவரை முடிவெடுக்கவில்லை. தேர்தல் முடிவுகள் வெளியாக தொடங்கிய பின்னரே, அதைபற்றி சிந்திப்போம்” என்று தெரிவித்தார்.

முன்னதாக பாஜக வெற்றி கொண்டாட்டம் மற்றும் பேரணிக்கு தயாராகி வருவதாக தகவல் வெளியான நிலையில், வினோத் தாவ்டே இவ்வாறு கூறியுள்ளார்.
பிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக