திங்கள், 3 ஜூன், 2024

டெல்லியில் கலைஞர் - ராகுல், சோனியா புகழாரம் மலரஞ்சலி !

 மின்னம்பலம் - christopher :  கலைஞர் திருவுருவ படத்திற்கு டெல்லியில் மரியாதை : ராகுல், சோனியா புகழாரம்!
“கலைஞரின் வாழ்க்கை நாடு முழுவதும் உள்ள எண்ணற்ற மக்களிடையே முத்திரையை பதித்துள்ளது” என்று டெல்லியில் அவரது திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்திய ராகுல் காந்தி புகழாரம் சூட்டியுள்ளார்.
முன்னாள் முதல்வர் கலைஞரின் 101வது பிறந்தநாள் இன்று (ஜூன் 3) தமிழ்நாடு தாண்டி உலகம் முழுவதும்  கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்காக திமுக நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
இந்த நிலையில் கலைஞரின் 101வது பிறந்த நாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் சென்னையின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவ படத்திற்கு ஸ்டாலின் நேரில் சென்று மரியாதை செலுத்தினார்.



இதற்கிடையே டெல்லியில் அண்ணா கலைஞர் அறிவாலயத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, பி.வில்சன், கனிமொழி சோமு, சண்முகம் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

அவர்களை தொடர்ந்து  காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளார் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளார் சீதாராம் யெச்சூரி, காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா, சாமாஜ்வாதி கட்சி எம்.பி ராம்கோபால் யாதவ், உள்ளிட்டோர் கலைஞரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து ஊடகங்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி பேசுகையில், ”முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டது மிக்க மகிழ்ச்சி. பல முறை அவரை சந்தித்து, அவரோடு இணைந்து செயல்பட்டதை நினைவு கூர்கிறேன். அவரை சந்தித்து பல நேரங்களில் அவரது வார்த்தைகளை கேட்டு, ஆலோசனைளை கேட்டு அதன் மூலம் பயனடைந்துள்ளோம். இந்த நாளில் தி.மு.க.வினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி “ தமிழ் மொழியை பாதுகாத்த, கலாச்சாரத்தை உயர்த்தி பிடித்த மாபெரும் தலைவருக்கு மரியாதை செலுத்துவதில் பெருமை கொள்கிறேன் என ராகுல் புகழாரம் சூட்டினார்.

மேலும் இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ‘கலைஞர்’ மு. கருணாநிதியின் பிறந்தநாளில் அவருக்கு நெஞ்சார்ந்த அஞ்சலிகள்.

தமிழ்நாடு மற்றும் இந்திய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு தலைவர், அவரது பாரம்பரியத்தில் சமூக நீதியை மேம்படுத்துதல், பொருளாதார சமத்துவத்தை முன்னேற்றுதல் மற்றும் தமிழ் மக்களின் மொழி மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாத்தல் ஆகியவை அடங்கும்.

அவரது வாழ்க்கை நாடு முழுவதும் உள்ள எண்ணற்ற மக்களிடையே நீடித்த முத்திரையை பதித்துள்ளது” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக