வியாழன், 27 ஜூன், 2024

குழந்தைகளை கடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்த கும்பல்;சிக்கியது - கர்நாடகாவில்

 தினமணி  : கர்நாடகத்தில் குழந்தைகள் விற்கும் கும்பலை தனிப்படை காவல் துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் துமகுரு மாவட்டத்தில் குழுந்தை விற்பனை செய்யும் கும்பலைச் சேர்ந்த செவிலியர் கல்லூரியின் நிர்வாக இயக்குநர், செவிலியர், டாட்டூ கலைஞர், ஆட்டோரிக்‌ஷா ஓட்டுநர் உள்ளிட்ட 7 பேரை கர்நாடக காவல் துறையினர் சமீபத்தில் கைது செய்துள்ளனர்.
இந்த கும்பல் புதிதாகப் பிறந்த குழந்தைகளை சுமார் ரூ. 2 லட்சம் முதல் ரூ. 3 லட்சம் வரை பெற்று விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. மேலும், விற்கப்பட்ட 9 குழந்தைகளில் 5 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.



திருமணத்திற்குப் புறம்பான உறவுகள் மூலம் பிறந்த குழந்தைகளை, குழந்தை இல்லாத தம்பதிகளை அடையாளம் கண்டு, இந்த கும்பல் செயல்பட்டதாக காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் கருவுற்றப் பெண்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, குழந்தைகள் பிறந்தவுடன் போலி பிறப்புச் சான்றிதழ்களை உருவாக்கி, பின்னர் குழந்தைகளை விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட செவிலியர் கல்லூரியின் நிர்வாக இயக்குநர் யு டி மகேஷ், துமகுரு மாவட்டத்தில் உள்ள கூபேஹள்ளியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் (PHC) மருந்தாளுனர் மெஹபூப் ஷெரீப், அரசு செவிலியர் பூர்ணிமா, செவிலியர் சௌஜன்யா, டாட்டூ கலைஞர் கே என் ராமகிருஷ்ணப்பா, துமகுரு நகரில் வசிப்பவர் ஹனுமதராஜு, மற்றும் முபாரக் பாஷா, ஒரு குழந்தையை வாங்கிய ஆட்டோரிக்‌ஷா ஓட்டுநர் உள்பட 7 பேரை காவல் துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.

ஜூன் 9 அன்று ஒரு தம்பதியினர் காவல் துறையினரிடம், கோயிலின் அருகில் தூங்கிக் கொண்டிருந்தபோது தங்கள் 11 மாத குழந்தையை திருடிச் சென்றதாக புகார் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, குழந்தையை தேடி சென்ற தனிப்படை காவல் துறையினர் ராமகிருஷ்ணப்பா மற்றும் ஹனுமதராஜுவை கைது செய்தனர்.

விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு பல குழந்தைகளை விற்றதாகக் கூறப்படுகிறது. அவர்கள் பெரிய மோசடியின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக