செவ்வாய், 11 ஜூன், 2024

சோனியா, மம்தா வரிசையில் கனிமொழி: திமுக நாடாளுமன்ற நிர்வாகிகள் தேர்வு பின்னணி!

உரை படமாக இருக்கக்கூடும்

மின்னம்பலம் -Aara  : திமுக நாடாளுமன்ற கட்சியின் புதிய நிர்வாகிகள் பட்டியலை ஜூன் 10ஆம் தேதி அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
இதன்படி திமுகவின் மக்களவை- மாநிலங்களவை ஆகிய இரு அவைகளையும் சேர்த்து நாடாளுமன்ற குழு தலைவராக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
திமுக மக்களவை குழு தலைவராக ஏற்கனவே பதவி வகித்த டி. ஆர். பாலு மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மக்களவை குழு துணை தலைவராக தயாநிதி மாறனும், மக்களவை குழு கொறடாவாக ஆ ராசாவும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.



இதேபோல மாநிலங்களவை திமுக தலைவராக திருச்சி சிவா, துணைத் தலைவராக தொமுச பேரவை சண்முகம், கொறடாவாக மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இரு அவைகளுக்கும் பொருளாளராக ஜெகத்ரட்சகன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

இந்த அறிவிப்பில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் திமுகவில் இதுவரை மக்களவை -மாநிலங்களவை என தனித்தனி நிர்வாகிகளே நியமிக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். ஆனால் இப்போதுதான் மக்களவை- மாநிலங்களவை இரண்டையும் சேர்த்து நாடாளுமன்ற குழுத்தலைவராக கனிமொழி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

கடந்த ஜூன் 8ஆம் தேதி திமுகவின் புதிய எம்பிக்கள் கூட்டம் அறிவாலயத்தில் நடைபெற்றது. அதற்கு முன்பே திமுக மக்களவை குழு தலைவராக கனிமொழி நியமிக்கப்படலாம் என்ற பேச்சுகள் எழுந்தன. ஆனால் தற்போது அந்த பதவியை வைத்திருக்கும் டி ஆர் பாலு அதை விட்டுக் கொடுக்கவும் மறுத்தார்.

Image

’நான் திமுகவின் பொருளாளர் பதவியில் இருக்கிறேன். பார்லிமென்ட்டில் நீண்ட அனுபவம் கொண்டவன். இந்த நிலையில் என்னை மக்களவை குழு தலைவராக தேர்வு செய்யாமல் வெறும் எம்.பி.யாக இருக்க அனுமதித்தால் எனக்கு எம்பி பதவி, பொருளாளர் பதவி இரண்டும் வேண்டாம், ராஜினாமா செய்கிறேன்” என்று முதல்வரிடம் டி. ஆர். பாலு சற்று உரிமையோடு எச்சரிக்கை விடுத்ததாகவும் அறிவாலய வட்டாரத்தில் கூறுகிறார்கள்.

அதேநேரம் இதுபோன்ற பொறுப்புகள் அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதில் கனிமொழியும் தீவிரமாகவே செயல்பட்டார்.

டி ஆர் பாலு, கனிமொழி ஆகிய இருவரும் தங்களுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததால் மற்ற கட்சிகளில் எப்படி இருக்கிறது என்று ஆலோசித்து இருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

அப்போதுதான் காங்கிரஸ் கட்சியில் மக்களவை- மாநிலங்களவை என இரண்டுக்கும் தனித்தனி நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட போதும் ஒருங்கிணைந்த நாடாளுமன்ற கட்சி தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டதையும்… அதேபோல திருணமூல் காங்கிரஸ் கட்சியில் மக்களவை -மாநிலங்களவை இரண்டுக்கும் தனித்தனி நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில்… நாடாளுமன்ற திருணமூல் காங்கிரஸ் கட்சி தலைவராக மம்தா பானர்ஜி தேர்வு செய்யப்பட்டது பற்றியும் ஸ்டாலின் ஆலோசித்திருக்கிறார்.

அதே பாணியில் திமுகவிலும் நாடாளுமன்ற திமுக கட்சி தலைவராக கனிமொழி தேர்வு செய்யப்பட்டுள்ளார். திமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிவிப்பிலேயே நாடாளுமன்ற கட்சி தலைவராக கனிமொழி என்ற அறிவிப்புக்கு கீழேதான் மக்களவை குழு தலைவர் டி.ஆர். பாலு இடம்பெற்றிருக்கிறார்.

இதுகுறித்து திமுக எம்.பி.க்கள் வட்டாரங்களில் பேசியபோது,

”கனிமொழி அப்போதைய முதல்வர் கலைஞரால்  2007 லேயே மாநிலங்களவைக்கு அனுப்பப்பட்டார்.  2007 முதல் 2019 வரை  இரு முறை மாநிலங்களவை உறுப்பினராகவும், அதன் பின் 2019-24 தூத்துக்குடி மக்களவை உறுப்பினராகவும், மீண்டும் இப்போது 2024 தேர்தலில் தூத்துக்குடி மக்களவை உறுப்பினராகவும் இருப்பவர். 17 ஆண்டுகளாக நாடாளுமன்ற அனுபவம் கொண்டவர். நாடாளுமன்றத்தில் பல்வேறு விவாதங்களில் பங்கெடுத்து திமுகவின் கொள்கைகளை முழங்கியிருக்கிறார். அதனால்தான் முதல்வர் ஸ்டாலின் கனிமொழியை நாடாளுமன்றத்தின் கர்ஜனை மொழி என்று பாராட்டினார்.

அதுமட்டுமல்ல தற்போது நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட்டதோடு தமிழ்நாட்டின் பல்வேறு தொகுதிகளுக்கும் சென்று பரப்புரை செய்தார் கனிமொழி. தேர்தல் முடிவில் தூத்துக்குடியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அனைவரையும் டெபாசிட் இழக்கச் செய்தார் கனிமொழி.

இந்த நிலையில் இந்தியா கூட்டணி டெல்லியில் ஆட்சிக்கு வர முடியாமல் போனாலும் கூட… தற்போதைய தேசிய அரசியல் சூழல் எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என்ற நிலை உள்ளது.
இந்த சூழலில் டெல்லி அரசியலில் எல்லாருக்கும் நல்லவராக இருப்பதை விட திமுகவின் செயல் திட்டங்களை,  தனது அறிவுரைப்படி கச்சிதமாக நிறைவேற்ற கனிமொழி சரியாக இருப்பார் என கருதியிருக்கிறார் ஸ்டாலின்.

Image

அதன் காரணமாகவே இந்த முக்கியமான பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் கனிமொழி” என்கிறார்கள் எம்.பி.க்கள் வட்டாரங்களில்.

மேலும், “டி. ஆர். பாலு 2029 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்துள்ளார். அப்போது ஒரு புதியவர்தானே நாடாளுமன்ற மக்களவைத் தலைவராக வந்தாக வேண்டும். அதற்கு இப்போதிலிருந்து பயிற்சி அளிப்பது போல இருக்கலாமே?  டி. ஆர். பாலுவின் அனுபவம் மதிக்கத்தக்கது தான். ஆனபோதும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு பொறுப்புகள் சென்றடைய வேண்டும் என்ற அடிப்படையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம்” என்கிறார்கள் அவர்கள்.

மேலும் மக்களவை குழு திமுக கொறடாவாக, தான் நியமிக்கப்படுவதற்கு தயாநிதி மாறன் முயற்சி செய்திருக்கிறார். ஆனால் டி.ஆர். பாலு, ’இப்போது இருக்கக்கூடிய ஆ ராசாவே கொறடாவாக தொடரலாம்’ என்று கருத்து தெரிவித்ததாகவும் அதன் அடிப்படையில் தயாநிதிமாறன் மக்களவை துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார் என்றும் அறிவாலய வட்டாரத்தில் கூறுகிறார்கள்.

திமுக நாடாளுமன்ற கட்சி தலைவர் என்ற அடிப்படையில் இனி மத்திய அரசின் நாடாளுமன்ற விவகாரங்களில் கூட்டப்படும் அனைத்து கட்சி கூட்டங்களுக்கும்… அரசியல் ரீதியாக இந்தியா கூட்டணி கட்சியின் கூட்டங்களுக்கும் கனிமொழியே திமுகவின் பிரதிநிதியாக கலந்துகொள்வார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

–வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக