சனி, 29 ஜூன், 2024

சுப்புலட்சுமி ஜெகதீசன்! சங்கிகளின் கங்காணி சீமான் தமிழ்நாட்டுக்கு செய்த துரோகம்

தமிழ்க்கவி  :   சீமான்டியனின் போலி ஈழப் பாசம்!!!
2021 சட்டமன்ற தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் திமுகவின் துணை பொதுச் செயலளார் அம்மா சுப்புலட்சுமி ஜெகதீசன் போட்டியிடுகிறார்.
தேர்தலில் வென்று தமிழ்நாட்டின் முதல் பெண் சபாநாயகராக பதவியேற்பார் என்ற நிலையில் அதிமுக கூட்டணியின் பாஜக வேட்பாளரிடம் 281 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழக்கிறார்.
அம்மா சுப்புலட்சுமி ஜெகதீசன் ஈழ விடுதலைக்காக, போராளிகளுக்காக ஆதரவளித்ததற்காக ஜெயலலிதாவின் அதிமுக அரசால் தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு கொடூர அடக்குமுறைக்கு ஆளானவர் என்பது வரலாறு.
தன் பயணத்தை அதிமுகவில் ஆரம்பித்தாலும் எம்ஜிஆரை தீவிரமாக எதிர்த்து, திமுகவுடன் தொடர்ந்து சமரசமின்றி பயணம் செய்த ஒரு சமூகநீதி போராளி அம்மா சுப்புலட்சுமி.


தமிழ் நிலத்தில் பெண்களின் சுய அரசியல் உரிமைக்கான தொடர் பயணித்தின் மறுக்க இயலாத மைல்கல் அம்மா சுப்புலட்சுமி  ஜெகதீசன். திமுகவின் கட்டமைப்பில் துணைப் பொதுச் செயலாளராகவும், சமூகநீதிப் பயணத்தில் மாநில, ஒன்றிய சமூகநலத்துறை அமைச்சராகவும். உண்மையான சமூகநீதிகாத்த வீராங்கனையாகவும் கலைஞரால் போற்றப்பட்டவர்.
சென்ற சட்டமன்ற தேர்தல் தோல்வி அவரை மனரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் குழப்பங்களை உருவாக்கி இருப்பதை மறுக்க இயலாது. அந்த தோல்விக்கான காரணங்களை அலசும் போது வெற்றி வாய்ப்பை இழந்ததில் திமுகவின் நிர்வாகிகளையும், அவர்களின் செயல்பாடுகளையும் குற்றம் சாட்ட வாய்ப்பிருப்பதும், அதுவே அம்மா சுப்புலட்சுமியை தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் முடிவுகளுக்கு முக்கிய காரணியாக இருக்கிறது என்பதையும் மறுக்க இயலாது.
ஆனால் என்ன தான் நாம் கருத்தியல் அரசியல், சித்தாந்த கோட்பாடுகளை குறித்து பேசினாலும், கள அரசியலின் சூத்திரங்களை மறந்து விடுகிறோம்.  2021 மொடக்குறிச்சி தேர்தல் முடிவுகளின் வாக்குகளை ஆராயந்து பார்த்தால் மிகப்பெரிய அதிர்ச்சி நமக்கு கிடைக்கிறது.
மொடக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா வேட்பாளர் டாக்டர் சி.சரஸ்வதி  78,125 வாக்குகள் பெற்றார். இதில் 472 தபால் ஓட்டுகளாகும். தி.மு.க. வேட்பாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் 77,844 ஓட்டுகள் பெற்றார். எனவே வெறும் 281 வாக்குகளில் சுப்புலட்சுமி ஜெகதீசன் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
மொடக்குறிச்சி தொகுதியில் மற்ற வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:-
கே.பிரகாஷ் (நாம் தமிழர் கட்சி) - 12,944
ராஜேஷ்குமார் (மக்கள் நீதி மய்யம்) - 4,574
பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக அதிமுகவும், கர்நாடகா மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்திருந்த சங் பரிவார் அமைப்புகளின் நிர்வாகிகளும் தீவிரமாக களப்பணியாற்றினர் என்பதையும் நாம் இங்கு மறந்துவிடக்கூடாது. அந்த சூழலிலும் திமுகவிற்கு ஆதரவாக விழுந்த தபால் வாக்குகள் 580 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டு 281 வாக்குகளில் பாஜகவின் சரஸ்வதி வெற்றி பெறுகிறார். சீமானின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள் 12,944 என்பதையும் யாரும் மறந்து விடக்கூடாது.
இன்று அம்மா சுப்புலட்சுமி ஜெகதீசனை பெருமைகளை சொல்லி, ஈழ விடுதலைக்காக அவர் தியாகங்களை குறிப்பிட்டு சீமான் வெளியிட்ட ஒரு அறிக்கையை படித்தேன். பாவம், சீமானுக்கு சட்டமன்ற தேர்தல் முன்பு வரை அம்மா சுப்புலட்சுமியை குறித்து எதுவுமே தெரியாது போல. அதனால் தான் சட்டமன்ற தேர்தலில் அவருக்கு எதிராக தீவிர பிரச்சாரம் செய்து பாஜக வேட்பாளரின் வெற்றிக்கு பாடுபட்டிருக்கிறார். எங்கெல்லாம் பாஜக நின்றிருக்கிறதோ அங்கெல்லாம் சீமானின் திமுக எதிர்ப்பு அரசியலும், ஈழ வியாபார அரசியலை வைத்து நடக்கும் பிழைப்புவாத பொய் பிரச்சாரமும் தீவிரமாக நடைபெறும். திமுக வேட்பாளரின் வெற்றி என்பது கடும் போராட்டத்தில் வந்து நிற்கும்.
எந்த ஈழ விடுதலைக்காக தடா சட்டத்தில் சிறை சென்றாரோ அதே சுப்புலட்சுமியைத்தான் ஈழத்தை வைத்து பிச்சை எடுக்கும் நாம் தமிழர் கட்சி வாக்குளை பிரித்து தோற்கடித்து அவர் அரசியல் வாழ்வையே கேள்விக்குறியாக்கி விட்டு, இன்று நீலிக்கண்ணீர் வடிக்கிறது.
சீமான் போன்ற பாசிச அரசியலுக்கு கங்காணி வேலைபார்க்கும் அரசியல் கைக்கூலிகளிடம் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்பதே இந்த கட்டுரையின் நோக்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக