திங்கள், 24 ஜூன், 2024

நாடார்.. கவுண்டர்.. பிராமணர்.. பாஜகவில் சாதி பார்த்து நீக்கம் : திருச்சி சூர்யா குற்றச்சாட்டு!

 மின்னம்பலம் -  christopher :  ”எல்லோரும் இந்து என்று மேடையில் ஒப்புக்கு சொல்லிவிட்டு, சாதி லாபிகளுக்கு அடிபணிந்து சாதி படிநிலை அடிப்படையில்தான் நடவடிக்கை பாயுமா?” என்று திருச்சி சூர்யா கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை கமலாலயத்தில் கடந்த 19ஆம் தேதி  நடந்த தமிழக பாஜக மையக் குழு கூட்டத்தில் கட்சியின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச்செயலாளராக இருந்த அண்ணாமலையின் தீவிர ஆதரவாளரான திருச்சி சூர்யா பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டார்.
அதேபோல் பாஜகவின் சிந்தனையாளர் பிரிவின் மாநில பார்வையாளர் கல்யாணராமன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.



இந்த நிலையில் பாஜகவில் சாதி பார்த்து தான் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக திருச்சி சூர்யா வேதனை தெரிவித்துள்ளார்.

தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் அவர் கூறியுள்ளதாவது, “பாஜக மையக் குழுவில் கட்சி தலைமையும் தலைவர்களையும் விமர்சித்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று என்னையும் கல்யாண ராமன் அவர்களையும் நீக்கினீர்கள் நியாயம் ஏற்றுக் கொள்கிறேன்.

இதற்கெல்லாம் ஆரம்ப புள்ளியாக இருந்து கட்சியில் ரௌடிகள் இருக்கிறார்கள் என்றும், அதிமுகவுடனான கூட்டணியை கெடுத்து வெற்றியை தடுத்து விட்டார் என்றும் மாநிலத் தலைவரின் செயல்பாட்டையும் விமர்சனம் செய்த தமிழிசை மேல் நடவடிக்கை ஏன் இல்லை? நாடார் என்பதாலா?

தமிழிசை சொன்னதை உண்மை என்று இந்திய தேசிய பாஜக தலைமை கருதி இருந்தால் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதற்கு தடையாக இருந்தது எது கவுண்டர் லாபியா?

தமிழ்நாட்டில் பாஜக நாற்பது இடங்களில் தோற்றதற்கு வீட்டு வாசலில் வெடி வெடித்து கொண்டாடிய, திமுகவின் கலைஞர் 100 நிகழ்ச்சியில் மேடை ஏறி உரையாற்றிய SVe.சேகர் இன்னும் பாஜக உறுப்பினராக இருக்கிறார் ஏன் அவர் மீது நடவடிக்கை இல்லை? பிராமணர் என்பதாலா?

சாதி படிநிலை அடிப்படையில்தான் நடவடிக்கை பாயுமா? எல்லோரும் இந்து என்று மேடையில் ஒப்புக்கு சொல்லிவிட்டு, சாதி லாபிகளுக்கு அடிபணிந்து Social Engineering அப்பட்டமாக அம்பலப்பட்டிருக்கிறது.” என்று திருச்சி சூர்யா தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக