சனி, 1 ஜூன், 2024

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்" வெள்ளத்துரை சஸ்பெண்ட் ரத்தான பின்னணி - முதல்வர் ஸ்டாலின் விட்ட டோஸ்.. "

S Vellathurai Police Tamil Nadu Police

tamil.oneindia.com  Mani Singh Sசென்னை: ஏடிஎஸ்பி வெள்ளத்துரை பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக இன்று அறிவிக்கப்பட்டு பின்னர் சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் உள்துறையில் உள்ள உயர் அதிகாரி ஒருவர் மீது முதல்வர் ஸ்டாலின் அதிருப்தியில் இருப்பதாகவும், அவரை கண்டித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வர் ஸ்டாலினின் கவனத்துக்கு கொண்டு செல்லாமலேயே ஏடிஎஸ்பி வெள்ளத்துரைக்கு சஸ்பெண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும்,
தன்னிச்சையாக இந்த முடிவு எடுக்கப்பட்டதால், முதல்வர் ஸ்டாலின் உள்துறை செயலகத்தில் முக்கிய பொறுப்பில் உள்ள அதிகாரி மீது அதிருப்தி அடைந்ததாகவும், உடனடியாக சஸ்பெண்டை ரத்து செய்ய சொன்னதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்: திருவண்ணாமலை மாவட்டத்தில் குற்ற ஆவண காப்பக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்தவர், எஸ். வெள்ளத்துரை. இவர், தமிழக காவல்துறையில் “என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்’ என்று அழைக்கப்பட்டவர். ரவுடிகளை ஒழிப்பதற்கு உயர் அதிகாரிகள் இவரை பயன்படுத்தி வந்தனர் என்ற பேச்சும் உண்டு. இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு ஆகும்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கட்டப் பஞ்சாயத்துகள் மற்றும் தொழிற்சாலை பகுதிகளில் தொழில் நிறுவனங்களுக்கு தொல்லை தரும் நபர்களை தடுப்பதற்கான சிறப்புப் படை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார் வெள்ளதுரை. தற்போது திருவண்ணாமலை மாவட்ட குற்ற ஆவண காப்பக ஏடிஎஸ்பி ஆக பணியாற்றி வந்தார் வெள்ளதுரை.

சஸ்பெண்ட் உத்தரவு ரத்து: வெள்ளத்துரை இன்று பணியில் இருந்து ஓய்வு பெற இருந்தார். இந்த நிலையில் அவரை நேற்று பணியிடை நீக்கம் செய்து அரசு உத்தரவிட்டது. கடந்த 2013 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் திருப்பாச்சேத்தி போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட குமார் என்ற கொக்கி குமார் என்பவர் போலீஸ் காவலின் போது மர்மமாக மரணம் அடைந்தார். இதுதொடர்பான வழக்கை சிபிசிஐடி. போலீசார் விசாரித்து வந்தனர்.

அந்த வழக்கு முடிவடையாத நிலையில் அதில் குற்றம் சாட்டப்பட்ட வெள்ளத்துரை மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில்தான் வெள்ளத்துரை மீதான சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏடிஎஸ்பி வெள்ளத்துரை பணியிடை நீக்கத்தை ரத்து செய்து உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். பணியிடை நீக்கம் உத்தரவு வெளியான சில மணி நேரங்களில் அதை ரத்து செய்து உத்தரவு தற்போது வெளியாகியுள்ளது.

பின்னணி என்ன?: சஸ்பெண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பின்னர் ஏன் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டது என்பதற்கான பின்னணி காரணம் வெளியாகியுள்ளது. ஏடிஎஸ்பி வெள்ளத்துரை விவகாரத்தை பொறுத்தவரை உள்துறையில் முக்கிய பொறுப்பில் உள்ள அதிகாரி தன்னிச்சையாக சஸ்பெண்ட் செய்ததாகவும், இது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

வெள்ளத்துரை காவல்துறையில் நேர்மையானவர் என பெயர்பெற்றவர்.. அதோடு, தனது பணிக்காலத்தில் பல ரவுடிகளின் அட்டகாசத்தையும் ஒடுக்கியவராக அறியப்பட்டவர். எனவே வெள்ளத்துரை மீதான இந்த நடவடிக்கைக்கு முதல்வர் டோஸ் விட்டதாகவும் அதன் காரணமாகே உடனடியாக உத்தரவை மாற்றி வெளியிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

கடிந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின்: ஏடிஎஸ்பி எஸ் வெள்ளத்துரை சஸ்பெண்ட் உத்தரவு நடவடிக்கை முதல்வர் மு.க ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லாமலேயே பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த முதல்வர் ஸ்டாலின் உள்துறையில் உள்ள அந்த அதிகாரியை கடிந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட போது: கடந்த 2004 ஆம் ஆண்டு சந்தன மரக்கடத்தல் மன்னன் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட போது, அந்த சிறப்பு அதிரடி படை குழுவில் எஸ். வெள்ளத்துரையும் முக்கிய இடம் பெற்றிருந்தார். அதே போல சென்னையில் பிரபல தாதா அயோத்திக்குப்பம் வீரமணி மெரினா கடற்கரை பகுதியில் என்கவுண்ட்டர் முறையில் போலீசாரால் சுட்டு வீழ்த்தப்பட்ட போது, அந்த சிறப்பு படையிலும் வெள்ளத்துரை முக்கிய பங்கு வகித்தார்

கடந்த 2013 ஆம் ஆண்டு மருதுபாண்டியர் குருபூஜையின் போது சிவகங்கை மாவட்டம் திருப்பாசேத்தியில் காவல்துறை எஸ்.ஐ ஆல்வின் சுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய ரவுடிகள் இருவர் வெள்ளதுரை டீமால் என்கவுண்டர் செய்யப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக