புதன், 5 ஜூன், 2024

தமிழ்நாட்டில் காங் கூட்டணி 40...வடக்கில் பாஜக கூட்டணி 240 மட்டுமே .... : மின்னம்பலம் சொன்னதே மெய்யானது!

 மின்னம்பலம் -Kavi  :  மின்னம்பலம் கணித்தபடி தமிழ்நாட்டில் 40க்கு 40 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நமது மின்னம்பலம் கடந்த ஏப்ரல் மாதம் மக்களை நேரடியாக சந்தித்து, இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் யார் வெற்றி பெற போகிறார்கள் என்று சர்வே எடுத்தது.
இதன் முடிவில் தமிழ்நாடு புதுச்சேரியில் 40க்கு 40 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று தெரிவித்திருந்தோம்.
“அதிமுக மற்றும் பாஜக கூட்டணியால் இந்த முறை தமிழ்நாட்டில் வெற்றி எதுவும் பெற இயலாது என்பதே மின்னம்பலம் கருத்துக்கணிப்பின் முடிவாக இருக்கிறது.

இரண்டாவது இடத்தைப் பொருத்தவரை, பெரும்பான்மையான தொகுதிகளில் அதிமுக கூட்டணி இரண்டாவது இடத்தைப் பிடிக்கிறது.



வேலூர், தர்மபுரி, தேனி, ராமநாதபுரம் ஆகிய 4 தொகுதிகளில் பாஜகவின் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களும், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 2 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களும் இரண்டாம் இடம் பிடிப்பார்கள்” என்று தெரிவித்திருந்தோம்.

புதுச்சேரியை காங்கிரஸ் கட்சி மீண்டும் கைப்பற்றுகிறது. பாஜக இரண்டாம் இடம் பிடிக்கிறது என்று மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் கூறின.

அதன்படி புதுச்சேரி உட்பட 40க்கு 40 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

4 தொகுதிகளில் பாஜக கூட்டணி கட்சிகள் இரண்டாம் இடத்துக்கு வரும் என்று சொன்னது போல, வேலூரில் பாஜக சார்பில் போட்டியிட்ட புதிய நீதிக் கட்சி வேட்பாளர் ஏ.சி சண்முகம், தருமபுரியில் பாமக சார்பில் போட்டியிட்ட சவுமியா அன்புமணி, ராமநாதபுரத்தில் பாஜக கூட்டணி சுயேச்சையாக போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வம், தேனியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்  ஆகியோர் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளனர்.

மின்னம்பலம் துல்லியமாக கணித்தது போல, திருநெல்வேலியில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணனும் இரண்டாம் இடம் பிடித்துள்ளனர்.  புதுச்சேரியை காங்கிரஸ் தான் கைப்பற்றும் என்று சொன்னதுபோல காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் வெற்றி பெற்றுள்ளார்.

தேசிய அளவில் 350 – 401 இடங்கள் வரை பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று பல்வேறு ஊடகங்களும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை வெளியிட்டன.

ஆனால் தேசிய அளவில் பாஜக 240 இடங்களை தாண்டாது என்று,  நேற்று(ஜூன் 3) வெளியான டிஜிட்டல் திண்ணையில் குறிப்பிட்டிருந்தோம்.

“நாம் டெல்லி பாஜக முக்கிய நிர்வாகிகளிடம் பேசிய போது, ‘எக்சிட் போல் எங்களுக்கு வாரிக் கொட்டியிருந்தாலும் மொத்தமாக 240க்கு மேல் தாண்ட மாட்டோம் என்பதுதான் கட்சியின் தலைமைக்கு கிடைத்திருக்கும் ரிப்போர்ட். அதனால்தான் தேர்தல் கொண்டாட்டத்துக்கு கூட தயாராக இல்லை என்று வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார் வினோத் ட்வதே. எனினும் பற்றாக்குறை இடங்களை சரிசெய்து எப்படி மெஜாரிட்டி அடைவது என்ற தீவிர ஆலோசனையில் இருக்கிறோம்’ என்றனர்”. என பாஜக 240 இடங்களை தாண்டாது என்பதையும் குறிப்பிட்டிருந்தோம்.

அந்தவகையில், தற்போதைய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புபடி190 இடங்களில் வெற்றி பெற்று 240 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலையில் இருக்கிறது. தேசிய அளவிலும் மின்னம்பலம் கூறியது உறுதியாகியுள்ளது.

இந்தவகையில் தமிழ்நாட்டில் 40 இடங்களை பிடிக்கும் என்று ஏப்ரல் 17ஆம் தேதி மின்னம்பலம் வெளியிட்ட கருத்துகணிப்பும், தேசிய அளவில் பாஜக 240 இடங்களை தாண்டாது என ஜூன் 3ஆம் தேதி டிஜிட்டல் திண்ணையில் நாம் வெளியிட்ட செய்தியும் இன்று மக்கள் தீர்ப்பு மூலம் மெய்யாகியுள்ளது.
பிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக