வெள்ளி, 21 ஜூன், 2024

2016 பூரண மதுவிலக்கு அறிவித்தார் கலைஞர் அப்போது திருமா கலைஞரை தோற்கடிக்க சசிகலா நடராஜனின் சூட் கேஸ் அரசியலில்

 LR Jagadheesan  :   2016 தேர்தலைப்பற்றியெல்லாம் திருமா பேசலாமா?
சிலதை பற்றி சிலர் பேசாமல் இருப்பது அவர்களுக்கு ரொம்பவும் நல்லது.
2016 தேர்தல்பற்றி மநகூ என்கிற கூட்டணியில் இருந்த கட்சிகள் பேசாமல் இருப்பது அந்த கட்சிகளுக்கு நல்லது.
குறிப்பாக அந்த கட்சிகளின் தலைவர்களுக்கு. அவர்களின் மிச்சசொச்சமிருக்கும் மரியாதையை காப்பாற்றிக்கொள்ள அது உதவும்.
அயோத்திதாசரின் பேரனும் நடமாடும் நவீன அம்பேட்கரும் தமிழ்நாட்டு தலித்துகளின் விடிவெள்ளியுமான தொல் திருமாவளவன் அவர்கள்,
 2016 தேர்தலில் கலைஞர் தலைமையிலான திமுக கொடுத்த முழுமையான மதுவிலக்கை நிறைவேற்றவேண்டும் என்று கூறுகிறார். நல்லது.
அந்த 2016 தேர்தலில் தொல் திருமா எங்கே இருந்தார்?
என்ன செய்தார்?
யாரை தோற்கடிக்க யாரை ஆதரித்தார்?
அதுவும் எதற்காக?
இந்த கேள்விகளுக்கு அவர் பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறார்.



திமுகவைப்பார்த்து 2016 தேர்தல் வாக்குறுதியை நினைவூட்டும் திருமாவும் அவரது கட்சியும்,
 அதே 2016 தேர்தலில் என்ன செய்தார்கள் என்கிற யோக்கியதையை அவருக்கு யாரேனும் நினைவூட்டுவது நல்லது.
2016 தேர்தலில் நியாயமாக தோற்றிருக்கவேண்டிய ஜெயலலிதாவை காப்பாற்றுவதற்காக ஜெயலலிதாவின் உடனுறை தோழி சசிகலாவின் கணவர் நடராஜன் பணத்திலும் ஆலோசனையிலும் உருவாக்கப்பட்ட மநகூ கூட்டணியின் இலக்குகள் இரண்டு.

(சசிகலா)நடராஜனின் நோக்கம் ஜெயலலிதாவுக்கு எதிரான வாக்குகளை சிதறடித்து அதிமுக ஆட்சியை தொடரச்செய்வது.
அந்த திட்டத்தில் காசுக்காக அரசியல் அடியாட்களாகவும் அதிமுகவின் ஐந்தாம்படையாகவும் செயற்பட்ட மநகூ கட்சிகளின் தலைவர்களின் நோக்கம் எப்பாடு பட்டாவது அந்த தேர்தலில் திமுகவை தோற்கடிப்பது.

காரணம் அந்த தேர்தல் தான் கலைஞரின் கடைசி தேர்தல் என்பது உலகுக்கே தெரியும்.
அந்த தேர்தலில் திமுக வென்றிருந்தால் கலைஞர் முதல்வராகவும் மு க ஸ்டாலின் துணைமுதல்வராகவும் வந்திருப்பார்கள்.

ஆட்சியில் ஸ்டாலின் கை ஓங்கும் என்பதோடு பதவியில் இருக்கும்போதே முதுமையால் கலைஞர் இயற்கையெய்தினாலோ செயலிழந்துபோனாலோ ஸ்டாலின் முழுமையான முதல்வராக பதவியேற்று திமுக ஆட்சி தொடர்ந்திருக்கும்.

அவர் திமுகவின் தலைவராகியிர்ய்ப்பார் என்பதே அன்றைய யதார்த்த நிலை.
அப்படி நடந்து ஸ்டாலின் 2016-2021இல் முதல்வராகக்கூடாது என்கிற ஒரே ஒரு காரணத்துக்காகவே நடராஜனின் அரசியல் @அடியாட்களாக நடந்துகொண்டவர்கள் தான் மநகூவின் வைகோ, திருமா, இரண்டு இடதுகளின் அப்போதைய தலைவர்கள்.

இவர்களுக்கு ஸ்டாலின் முதல்வராக வரக்கூடாது என்கிற தனிப்பட்ட தனிமனித வன்மமே அந்த தேர்தலில் இவர்களையெல்லாம் ஒருங்கிணைத்தது; (சசிகலா)நடராஜனின்  ஐந்தாம்படைகளாக கூலிக்கு மாரடிக்க வைத்தது.

அதில் அவர்கள் அப்போது வெற்றியும் பெற்றனர்.
ஆனால் தமிழ்நாடு தான் தோற்றுப்போனது. அதுவும் மிகப்பெரிய அளவில்.
யோசித்துப்பாருங்கள்.

2016 தேர்தல் முடிவு மாறிவந்திருந்தால் ஜெயலலிதா கொடநாட்டில் ஓய்வெடுத்திருப்பார்.
அவர் உடல்நிலை ஒருவேளை மேம்பட்டிருக்கலாம். எடப்பாடி என்கிற விபத்து தமிழ்நாட்டில் ஏற்பட்டே இருக்காது.

நீட் தேர்வு முதல் உதய்மின் திட்டம்வரை எத்தனையோ தீமைகள் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

அனிதா இன்னும் உயிரோடிருந்திருக்கக்கூடும் — மருத்துவராக. 2016-2021 வரை பறிபோன மாநில உரிமைகள் நம்மிடம் எஞ்சியிருக்கும். எந்த அளவுகோளின் கீழ் பார்த்தாலும் தமிழ்நாட்டின் அரசியலிலும் நிர்வாகத்திலும் இன்று நாம் காணும் சீரழிவு முழுமையாய் தடுக்கப்படாவிட்டாலும் குறைந்தபட்சம் ஒரு பத்தாண்டுகாலம் பின் போடப்பட்டிருக்கும்.

அது நடக்காமல் போக என்ன காரணம்? வைகோ திருமா மற்றும் இடதுகளின் இரு தலைவர்களின் ஸ்டாலின் மீதான தனிப்பட்ட வன்மமும் காசுக்கு விலைபோன கேடுகெட்ட கயமையுமே காரணம். 2016 தேர்தலில் மநகூவின் மனநிலை என்பது “மகன் செத்தாலும் பரவாயில்லை மருமக தாலியருந்தாகணும்” என்பதாகவே இருந்தது.

ஆனால் இவர்களின் கயமையை காலம் தண்டித்தது. எந்த ஸ்டாலின் முதல்வராகக்கூடாது என்று இந்த நால்வரும் நடராஜனின் ஐந்தாம்படையாக செயற்பட்டார்களோ அந்த ஸ்டாலின் முதல்வரானது மட்டுமல்ல இந்த நால்வரும் தங்களின் அரசியல் மறுவாழ்வுக்காக அதே ஸ்டாலினிடம் மடிப்பிச்சை ஏந்தும் நிலைக்கு இவர்களை நடுத்தெருவில் நிறுத்தியது.

தொல்திருமாவுக்கு தமிழ்நாட்டின் சட்டமன்ற நுழைவையும் இந்தியநாடாளுமன்ற நுழைவையும் முதன்முதலில் ஏற்படுத்திக்கொடுத்தவர் கலைஞரும் அவரது திமுகவும். அதே திருமாவின் கட்சிக்கு இன்று அங்கீகாரம் பெற்றுத்தந்திருப்பவர் ஸ்டாலின்.

வைகோவுக்கு மட்டுமல்ல அவரது மகனுக்கும் இன்று அதே ஸ்டாலின் தான் பதவிப்பிச்சையை போட்டிருக்கிறார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒட்டுமொத்த இந்தியாவிலும் வென்ற நான்கு உறுப்பினர்களில் இரண்டுபேர் அதாவது சரிபாதி 50% ஸ்டாலின் தயவால் வென்றவர்கள்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டு உறுப்பினர்களுமே ஸ்டாலின் அவர்களுக்கு கொடுத்த கொடை. அதாவது 100% . ஸ்டாலினும் திமுகவும் இல்லாவிட்டால் இந்தியகம்யூனிஸ்ட் கட்சிக்கு இந்தியநாடாளுமன்றத்தில் இன்று இடமே இல்லை.

இதுதான் இதுகளின் வரலாறு. இந்த லட்சணத்தில் 2016 தேர்தலில் கலைஞர் கொடுத்த முழுமதுவிலக்கை ஸ்டாலின் நிறைவேற்றவேண்டும் என்று கோரிக்கைவிடுக்க திருமாவுக்கு கொஞ்சமாவது கூசவேண்டாமா? 2016 தேர்தலில் முழு மதுவிலக்கை கொண்டுவருவதாக சொன்ன கலைஞரை தோற்கடித்து
“மதுவிலக்கு மகான் (!!!)” விஜயகாந்தை முதல்வராக்க பல்லாக்குதூக்கிய பாதந்தாங்கிகளெல்லாம் இப்படி பேசலாமா?

உண்மையிலேயே முழு மதுவிலக்குதான் திருமாவின் நோக்கமென்றால் 2016 தேர்தலில் கலைஞர் பக்கம் தானே திருமா நின்றிருக்கவேண்டும்? ஏன் நிற்கவில்லை? எது தடுத்தது? (சசிகலா)நடராஜனின் நல்கையா? ஸ்டாலின் முதல்வராகக்கூடாது என்கிற இவரது வன்மமா? எது? இப்போது எதற்கு இந்த பூரண மதுவிலக்கு பசப்பல்?

பிகு: பூரணமதுவிலக்கெல்லாம் சாத்தியமும் இல்லை. தேவையும் இல்லை.
கலைஞர் அதை முன்வைத்தபோதும் அதில் எனக்கு நம்பிக்கையும் இல்லை உடன்பாடும் இல்லை.

அது இதுபோன்ற கள்ளச்சாராய மரணங்களையே அதிகப்படுத்தும்.
 மாறாக அரசாங்கம் டாஸ்மாக் நடத்தாமல் தனியாரிடம் கொடுப்பதே நல்லது.

அதன்மூலம் மதுவின் தரம் மேம்படும். அரசாங்கம் நடத்தும் டாஸ்மாக் மதுவின் தரம் படுகேவலமாக இருப்பது மிகப்பெரும் பொதுசுகாதார கொள்ளைநோயாக மாறிவருகிறது.

ஒட்டுமொத்த இந்தியாவிலும் கேவலமான மது தமிழ்நாட்டின் டாஸ்மாக் மதுவாகத்தான் இருக்கும்.

எனவே தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பதே சரி. மலிவுவிலை மது கோருபவர்களின் தேவைக்காக கள்ளுக்கடைகளை அனுமதிக்கலாம்.
இனியும் இதில் பாசாங்குத்தனம் தேவையில்லை. டாஸ்மாக் சரக்கைவிட கள் எந்தவிதத்திலும் தீமையானதல்ல.

மது விவகாரத்தில் அரசின் வேலை கண்காணிப்பதாக மட்டுமே இருக்கவேண்டும். அதை முறையாகவும் முழுமையாகவும் நேர்மையாகவும் செய்தாலே போதும். மாறாக மது வியாபாரத்தில் அரசே நேரடியாக இறங்கும்போது இந்த சீர்கேடுகள் தான் நடக்கும்.

இதையெல்லாம் தாண்டி முக்கியமான ஒன்றுண்டு. அத்கு ஒரு முதல்வர் தன் வேலையை ஒழுங்காக செய்யவேண்டும். குறிப்பாக தன் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையை அவர் உண்மையிலேயே கண்காணிக்கவேண்டும்.

 குறைந்தபட்சம் காவல்துறைசார்பில் முதல்வருக்கு  அனுப்பும் தினசரி அத்தியாவசிய அறிக்கைகளையாவது அவர் கூர்ந்து படிக்கவேண்டும். அதன்மீது உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக