சனி, 11 மே, 2024

CM அரவிந்த் கெஜ்ரிவால் : பாஜக வென்றால்... ஸ்டாலின், மம்தா உள்ளிட்டவர்கள் சிறையில் இருப்பார்கள்! டெல்லி முதல்வர் எச்சரிக்கை

 மின்னம்பலம் - christopher  :”மீண்டும் மோடி அரசு அமைந்தால் மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின், தேஜஸ்வி யாதவ், பினராயி விஜயன், உத்தவ் தாக்கரே உள்ளிட்ட பிற எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்படுவார்கள்” என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
அவருக்கு ஜாமீன் வழங்குவதற்கு அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், உச்சநீதிமன்றம் நேற்று ஜூன் 1ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.



அதைத் தொடர்ந்து கெஜ்ரிவால் நேற்று இரவு திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார். சிறைக்கு வெளியே அவரை மனைவி சுனிதா, மகள் ஹர்ஷிதா மற்றும் ஆம் ஆத்மி எம்.பி. சந்தீப் பதக், கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்களும் திரண்டு நின்று வரவேற்றனர்.

அதன்படி, இன்று (மே 11) காலையில் அரவிந்த் கெஜ்ரிவால் தனது மனைவி சுனிதா மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோருடன் டெல்லி கன்னாட் பிளேசில் உள்ள அனுமான் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார்.

    Jai Bajrangbali 🙏

    Delhi CM @ArvindKejriwal, along with CM @BhagwantMann paid obeisance at the Hanuman Mandir, Connaught Place today and prayed for the wellbeing, progress & prosperity of the people of the country 🇮🇳#AamAadmiParty #ArvindKejriwal pic.twitter.com/2mSONguAUn

    — AAP Punjab (@AAPPunjab) May 11, 2024

இதனை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் சென்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், “நான் சிறையில் இருந்து நேராக உங்களிடம் வருகிறேன். 50 நாட்களுக்குப் பிறகு உங்களுடன் இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

இப்போதுதான் என் மனைவி மற்றும் முதல்வர் பகவந்த் மான் ஆகியோருடன் அனுமன் கோவிலுக்குச் சென்றேன். பஜ்ரங் பாலியின் ஆசீர்வாதம் எங்கள் கட்சிக்கும் எங்களுக்கும் உள்ளது. அவருடைய அருளால் நான் இன்று உங்கள் மத்தியில் இருக்கிறேன்.

எங்கள் ஆம் ஆத்மி கட்சி ஒரு சிறிய கட்சி, தற்போது இரண்டு மாநிலங்களில் உள்ளது. ஆனால், பிரதமர் எங்கள் கட்சியை நசுக்குவதற்கு ஒரே நேரத்தில் நான்கு தலைவர்களை சிறைக்கு அனுப்பினார்.

பெரிய கட்சிகளின் நான்கு முக்கிய தலைவர்கள் சிறைக்கு சென்றால், கட்சியே முடிந்துவிடும். ஆம் ஆத்மியை நசுக்க பிரதமர் நினைக்கிறார். தலைவர்களை சிறையில் அடைத்து எங்கள் கட்சியை அழிக்க முடியாது. ஆம் ஆத்மி கட்சிதான் நாட்டிற்கு எதிர்காலத்தை தரும் என்று பிரதமர் மோடியே நம்புகிறார்.

நாட்டிலேயே மிகவும் ஊழல் நிறைந்த கட்சி பாஜக. ஊழலை எதிர்த்துப் போராட நீங்கள் கற்றுக்கொள்ள விரும்பினால், என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள்.

ஒரே தேசம், ஒரே தலைவர் என்ற ஆபத்தான  கொள்கையை பிரதமர் மோடி  ஏற்கெனவே தொடங்கி விட்டார்.

ஏற்கெனவே இந்தியா கூட்டணியில் உள்ள நமது அமைச்சர்கள், ஹேமந்த் சோரன், மம்தா பானர்ஜியின் அமைச்சர்கள் சிறையில் உள்ளனர்.

இந்த நிலையில் மீண்டும் மோடி அரசு அமைந்தால் மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின், தேஜஸ்வி யாதவ். , பினராயி விஜயன், உத்தவ் தாக்கரே மற்றும் பிற எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்படுவார்கள்.

எதிர்க்கட்சி மட்டுமல்ல ஒரே தேசம், ஒரே தலைவர் என்ற ஆபத்தான  கொள்கையை பின்பற்றி வரும் மோடி, ஏற்கெனவே எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சிவராஜ் சிங் சௌஹான், வசுந்தரா ராஜே, எம்.எல்.கட்டார், ராமன் சிங் ஆகிய பாஜக தலைவர்களின் அரசியல் வாழ்க்கையை முடித்துவிட்டார்.

இந்த தேர்தலில் வெற்றி பெற்றால்,   2 மாதங்களுக்குள் யோகி ஆதித்யநாத்தை முதல்வர் பதவியில் இருந்து நீக்கி, அவர் அரசியலில் இருந்து ஒதுக்கி வைக்கப்படுவார்.  இது தான் சர்வாதிகாரம்.

இந்த சர்வாதிகாரத்தில் இருந்து நம் நாட்டைக் காப்பாற்ற நாம் ஒன்றுபட வேண்டும், நான் எனது முழு பலத்துடன் போராடுவேன். எனக்கு 140 கோடி மக்களின் ஆதரவும் தேவை” என்று கெஜ்ரிவால் பேசினார்.

தொடர்ந்து தெற்கு டெல்லியில் இன்று மாலை 4 மணிக்கும், கிழக்கு டெல்லியில் 6 மணிக்கும் நடைபெறும் வாகன பேரணியில் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான்னுடன் கலந்து கொள்கிறார்.
கிறிஸ்டோபர் ஜெமா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக