ஞாயிறு, 19 மே, 2024

இந்தியா கூட்டணி அறிவிப்பு ; எங்களின் பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்துவிட்டோம்!

 zeenews.india.com - Sudharsan G   :  PM Candidate INDIA Bloc: 18வது மக்களவை தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.
தற்போது வரை ஏப். 19, ஏப். 26, மே 7, மே 13 ஆகிய தினங்களில் முதல் நான்கு கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துவிட்டது.
ஐந்தாவது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு மே 20ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த ஐந்தாவது கட்ட தேர்தலில் மொத்தம் பீகார், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, ஒடிசா, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், ஜம்மு காஷ்மீர், லடாக் என 8 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.


மகாராஷ்டிராவின் மொத்தம் 48 மக்களவை தொகுதிகளில் ஏற்கெனவே 35 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றுவிட்டாலும் மீதம் உள்ள 13 தொகுதிகளில் வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெறுகிறது. ஐந்தாம் கட்ட தேர்தல் வேட்புமனு தாக்கல் ஏப். 26ஆம் தேதி தொடங்கிய நிலையில், தேர்தல் பரப்புரை இன்று மாலையுடன் நிறைவடைகிறது.

இந்தியா கூட்டணி தலைவர்கள் பேச்சு

அந்த வகையில், மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் ஐந்தாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த செய்தியாளர் சந்திப்பில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (SP) தலைவர் சரத் பவார், சிவசேனா கட்சியின் (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் மற்ற கூட்டணி கட்சித் தலைவர்கள் சிலரும் இடம்பெற்றிருந்தனர்.

பிரதமரின் குற்றச்சாட்டுகளும் பதிலடியும்...
இந்த செய்தியாளர் சந்திப்பில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி மீது ஆளும் பாஜகவும் குறிப்பாக பிரதமர் மோடியும் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு தலைவர்கள் விளக்கம் அளித்தனர். குறிப்பாக, இந்திய கூட்டணி பல தலைவர்கள், கொள்கைகளால் பிரிந்துகிடக்கிறது எனவும் பலரும் பிரதமர் வேட்பாளரை குறிவைத்து இருப்பதாகவும் பிரதமர் மோடி கூறியிருந்தார். அதிலும், இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் ஐந்து ஆண்டுகளில் ஐந்து பிரதமர்கள் இருப்பார்கள் எனவும் பிரதமர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

பிரதமர் வேட்பாளர்...?
அதற்கு சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே,"இந்தியா கூட்டணியில் பிரதமர் பதவிக்கு தகுதியான பல பேர் உள்ளனர். மேலும் அதில் யாரை பிரதமராக்குவது என்ற முடிவும் கூட்டணிக்குள் எடுக்கப்பட்டுவிட்டது. இருப்பினும் அதை வெளிப்படையாக அறிவிக்கப்போவதில்லை. இந்தியா கூட்டணியின் அடிப்படையான நோக்கமே நாட்டின் ஜனநாயகத்தையும், சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டும் என்பதே ஆகும்" என்றார். இருப்பினும், பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து வேறு தகவல்களை அவர் அளிக்கவில்லை.

மேலும் பிரதமரின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்த அவர்,"எங்கள் கூட்டணியில் பிரதமராவதற்கு பல தலைவர்களுக்கு தகுதியுள்ளது என்பதையாவது பிரதமர் மோடி ஒப்புக்கொண்டாரே... ஆனால் பாஜகவில்தான் அந்த பதவிக்கு வேறு எந்த முகமும் இல்லை. அவர்களிடம் இருப்பதும் ஒரு முகம்தான், அதுவும் தேறாது. எத்தனை முறை பாஜக அந்த ஒரு முகத்தை காட்டுக்கொள்ளப்போகிறது? இந்தியா கூட்டணியில் பல தலைவர்கள் இருக்கிறார்கள் என்றும் இதனால் ஐந்து ஆண்டுகளில் ஐந்து பிரதமர்கள் ஆட்சி செய்வார்கள் என்றும் கூறியிருப்பதன் மூலம் எங்களிடம் அதற்கு தகுதியான பல பேர் இருக்கிறார்கள் என்பதையும் நாங்கள்தான் ஆட்சி அமைக்கப்போகிறோம் என்பதையும் பிரதமர் மோடி ஒப்புக்கொண்டுள்ளார்" என்றார்.

ராமர் கோயில் இடிக்கப்படுமா?

மேலும் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள புதிய ராமர் கோயிலை இடித்துவிடுவோம் என பிரதமர் மோடி கூறியிருப்பது குறித்து கேட்டபோது அப்படி நாங்கள் செய்யவே மாட்டோம் என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மேலும், அவர்,"முதலில், எங்கள் தேர்தல் அறிக்கையை முஸ்லிம் லீக் அறிக்கை என்று மோடி கூறினார்; இப்போது இது ஒரு மாவோயிஸ்ட் அறிக்கை என்று கூறுகிறார். அவர் சரியாக என்ன சொல்ல விரும்புகிறார் என்பதை முதலில் அவர் தீர்மானிக்க வேண்டும்.

விவாசயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை, ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு போன்ற பாஜகவின் உறுதிமொழிகளை அவர்கள் நிறைவேற்றியிருக்கிறார்களா என்பதை அவர்கள் முதலில் நாட்டு மக்களுக்குச் சொல்ல வேண்டும். நீங்கள் மக்களை எப்போதும் முட்டாளாக்க முடியாது" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக