வெள்ளி, 17 மே, 2024

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தலில் கபில் சிபல் வெற்றி.. டிரெய்லர் தானாம்.. கொண்டாடும் காங்கிரஸ்

 tamil.oneindia.com - Mani Singh S  : டெல்லி: உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தலில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வெற்றி பெற்றுள்ளார்.
கபில் சிபல் 1066 வாக்குகள் பெற்று அவரைஎதிர்த்து போட்டியிட்ட மற்றொரு சீனியர் வழக்கறிஞரான பிரதீப் ராயை தோற்கடித்தார்.
லோக்சபா தேர்தல் நேரத்தில் கபில் சிபல் வெற்றி பெற்று இருப்பதை காங்கிரஸ் கட்சி கொண்டாடி வருகிறது.
உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தலில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வெற்றி பெற்றுள்ளார்.
கபில் சிபல் 1066 வாக்குகள் பெற்று அவரை எதிர்த்து போட்டியிட்ட மற்றொரு சீனியர் வழக்கறிஞரான பிரதீப் ராயை தோற்கடித்தார். பிரதீப் குமாருக்கு வெறும் 689 வாக்குகளே கிடைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



கபில் சிபல் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் தேர்தலில் வெற்றி பெறுவது இது 4-வது முறையாகும். கடந்த மே 8 ஆம் தேதி, வழக்கறிஞர் சங்க தேர்தலில் போட்டியிட போவதாக கபில் சிபல் அறிவித்து இருந்தார். அவரை எதிர்த்து தற்போது பார் அசோசியேஷன் தலைவராக இருக்கும் ஆதிஷ் அகர்வலா, பிரியா ஹிங்கோரனி உள்ளிட்டோரும் போட்டியிட்டனர்.

கபில் சிபல் உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்களில் ஒருவராக உள்ளார். ஹார்வார்டு சட்ட பள்ளியில் பட்டம் பெற்ற கபில் சிபல் இந்தியாவின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக 1989-90 களில் பதவி வகித்துள்ளார். 23 ஆண்டுகளுக்கு முன்பாக அதாவது கடந்த 2001 ஆம் ஆண்டு இதற்கு முன்பாக வழக்கறிஞர் சங்க தலைவர் பொறுப்பை வகித்தார். இந்த நிலையில், மீண்டும் தேர்தலில் போட்டியிட்ட கபில் சிபல் வெற்றி பெற்றுள்ளார்.

தேர்தல் நேரத்தில் கபில் சிபல் வழக்கறிஞர் சங்க தேர்தலில் வெற்றி பெற்று இருப்பதை காங்கிரஸ் கட்சி கொண்டாடி வருகிறது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ், லோக்சபா தேர்தலுடன் கபில் சிபல் வெற்றியை ஒப்பிட்டு பேசியுள்ளார். ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், " உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தலில் அமோக வெற்றியை கபில் சிபல் பதிவு செய்துள்ளார்.

கபில் சிபிலின் இந்த வெற்றி தாராளவாத, மதச்சார்பற்ற, ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகளுக்கு கிடைத்த பெரிய வெற்றியாகும். விரைவில் வெளியெற போகும் பிரதமரின் வார்த்தையில் சொல்வது என்றால், தேசிய அளவில் வரப்போகும் மாற்றத்திற்கான ஒரு டிரெய்லர் தான் இது" என்றர்.

நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் 7-கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 4 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ள நிலையில், இன்னும் 3 கட்ட தேர்தல்கள் நடைபெற வேண்டியுள்ளது. தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. மீண்டும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

அதேநேரத்தில் ஆட்சியை தக்க வைக்க பாஜக வியூகம் வகுத்து வருகிறது. தேர்தல் பிரசாரங்களில் அனல் பறக்க பேசும் பிரதமர் மோடி, சமீபத்தில் பாஜக பெற்ற வெற்றிகளை எல்லாம் வெறும் டிரெய்லர்தான் என்று பேசியுள்ளார். இதை மேற்கோள் காட்டி தற்போது, ஜெய்ராம் ரமேஷ் தற்போது, கபில் சிபல் வழக்கறிஞர்கள் சங்க தேர்தலில் வென்றது... லோக்சபா தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கான முன்னோட்டம் என்ற ரீதியில் பேசியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக