புதன், 15 மே, 2024

மீண்டும் கைதாகும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி? அன்று குஷ்பு... இன்று ராதிகா

 மின்னம்பலம் - Aara : அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கும்  திமுகவைச் சேர்ந்த பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீண்டும் ஒரு  சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவியது.
தமிழ்நாடு ஆளுநர் ரவி பற்றியும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பற்றியும் மேலும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரான நடிகை குஷ்பு பற்றியும் மிக அவதூறான ஆபாசமான விமர்சனங்களை பொது மேடையில் வைத்தார் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி.
இதையடுத்து பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது காவல் துறையில் புகார் கொடுத்தார். மேலும் நடிகை குஷ்புவும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தன்னை பற்றி பேசிய தரக்குறைவான வார்த்தைகளை சுட்டிக்காட்டி தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலினுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்தார்.



இதுபற்றி ஸ்டாலின் ஏன் பேச மறுக்கிறார் என்று கேள்வி எழுப்பிய குஷ்பூ, ”இது போன்ற நான்காம் தர பேச்சாளர்களை உள்ளுக்குள் ஊக்குவித்து நான்கு சுவர்களுக்குள் அவர்களின் பேச்சை ரசிப்பவர்கள் தான் திமுகவினர்” என்று கடுமையாக குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்த 2023 ஜூன் 18 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

64 நாட்கள்  சிறையில் இருந்த அவர், அதன் பின் ஜாமினில் வெளியே வந்தார்.
சிறைக்குச் சென்ற சில நாட்களில் திமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார்.

சுமார் இரு மாத சிறைவாசத்துக்கு பின் வெளியே வந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி திமுக மேடைகளில் ஏற அனுமதிக்கப்படவில்லை. சுமார் ஐந்து மாதங்கள் இப்படியே சென்ற நிலையில்.. திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஒரு கடிதம் எழுதினார்.

அதில். “நான் திமுக மேடைகளில் பேசி தான் என் வாழ்க்கையை ஓட்டி வருகிறேன். எனக்கு வேறு எதுவும் தெரியாது. நான் செய்த செயலுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என்னை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ள வேண்டுகிறேன்’ என்று வேண்டுகோள் வைத்திருந்தார்.

இதை பரிசீலித்து கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு மீண்டும் அவர் கட்சியில் இணைக்கப்படுவதாக திமுக தலைமை அறிவித்தது.

அதன் பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் மீண்டும் பிசியானார் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி. இந்த வகையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து பேசிய ஒரு கூட்டத்தில்தான் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.

தேர்தலுக்கு முன்பு, நடிகர் சரத்குமார் தனது சமத்துவ மக்கள் கட்சி என்ற கட்சியை பாஜகவோடு ஒட்டுமொத்தமாக இணைத்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது, ‘இரவு இரண்டு மணிக்கு தூக்கத்திலிருந்து திடீரென எழுந்து எனது மனைவி ராதிகாவையும் எழுப்பி இது பற்றி ஆலோசித்தேன். பிறகு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அப்போதே போன் செய்து பேசினேன். அதற்கு பிறகு தான் இந்த முடிவெடுத்தேன்”என்று விளக்கம் அளித்து இருந்தார்.

சரத்குமாரின் இந்த விளக்கத்துக்கு ஆபாசமாக அர்த்தம் தொனிக்க பேசினார் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி. அதற்கு பார்வையாளர்கள் சிரிக்க,  அதுகுறித்து அந்த பொதுக்கூட்டத்திலேயே… ‘ஏற்கனவே நான் 64 நாள் ஜெயில்ல இருந்துட்டு வந்திருக்கேன்’ என்றும் கூறியுள்ளார்.

இந்த பேச்சின் வீடியோவை சில நாட்களாகவே சமூக தளங்களில் வேகமாக பகிர்ந்து வரும் பாஜகவினர், “பெண் காவலர்களையும் பெண்களையும் இழிவு படுத்தியதாக சவுக்கு சங்கர், பெலிக்ஸ் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்திருக்கிற திமுக அரசு இந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசிய பேச்சுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?’ என்று கேள்வி எழுப்பினார்கள்.

இந்நிலையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பற்றி தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கும் குஷ்பூ, “நாய் வாலை நிமிர்த்த முடியாது என்பார்கள். அதே போல இந்த நபர் ஒவ்வொரு முறையும் பெண்களை இழிவு படுத்திக் கொண்டே இருக்கிறார். தன்னை இந்த பூமிக்கு கொண்டு வந்த பெண்ணையும் சேர்த்தே அவர் இழிவு படுத்துகிறார். அவரது வீட்டில் இருக்கும் பெண்களின் அவல நிலையை எண்ணிப் பார்க்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

சிவாஜி கிருஷ்ணமூர்த்தியால் இந்த முறை கடுமையாக விமர்சிக்கப்பட்ட ராதிகா சரத்குமார் தனது எக்ஸ் பக்கத்தில்,

“ஏன் டா படுபாவி! ஜெயிலுக்கு போயும் நீ திருந்த மாட்டியா? உன்னை எல்லாம் இன்னும் அந்த கட்சியில் வெச்சிருக்காங்களே…அவங்களதான் குத்தம் சொல்லணும். இதுல உனக்கு அந்த சாம்ராஜ்ய சக்ரவர்த்தியோட பேரு வேற! உன்னை மாதிரி ஆட்கள் எல்லாம் கடுமையாக தண்டிக்கப்படனும்., ஷேம் திமுக என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து திமுக செய்தி தொடர்பாளர் டி. கே. எஸ்.இளங்கோவனிடம் மின்னம்பலம் கேட்டபோது,

“இதுகுறித்து துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலையிடம் தெரிவித்திருக்கிறேன். அவர் தலைமையிடம் பேசி ஒரு முடிவெடுப்பார். இது தேர்தலுக்கு முன்பு பேசிய வீடியோ என்று சொல்கிறார்கள்” என்று தெரிவித்தார்.

கடந்த 2023 ஜூன் மாதம் சர்ச்சை பேச்சுகளால் கைது செய்யப்பட்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது இப்போது பாஜகவினர் ஆன் லைனில் போலீஸிடம் புகார் அளித்து வருகிறார்கள். அதன் அடிப்படையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக