சனி, 4 மே, 2024

பிரஜ்வல் ரேவண்ணாவால் கட்டி வைத்து பலாத்காரம் செய்த பெண்ணை காணவில்லை . மகன் போலீசில் முறைப்பாடு

 tamil.oneindia.com  - Halley Karthik :  பிரஜ்வல் ரேவண்ணாவால் கட்டி வைத்து பலாத்காரம் செய்த பெண் திடீர் மாயம்.. மகன் போலீசில் புகார்
பெங்களூர்: பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் வீடியோ விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், அவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண் திடீர் மாயமாகியுள்ளார். இது தொடர்பாக பெண்ணின் மகன் போலீசில் புகார் அளித்துள்ளார்.
கர்நாடக மாநிலம், ஹாசன் லோக்சபா தொகுதி மஜத எம்.பியாக இருக்கும் பிரஜ்வல் ரேவண்ணா, முன்னாள் பிரதமர் எச்.டி.தேவகௌடாவின் பேரனும், முன்னாள் அமைச்சர் எச்.டி.ரேவண்ணாவின் மகனுமாவார்.


இவர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வேகமாக ஷேர் ஆன நிலையில், இது குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு அமைப்பை அம்மாநில அரசு அமைத்திருக்கிறது.

லோக்சபா தேர்தலில் பாஜகவுடன், மஜத கூட்டணியில் இருப்பதால் இந்த விவகாரத்தை காங்கிரஸ் தீவிரமாக கையில் எடுத்திருக்கிறது. கர்நாடகாவில் பல இடங்களில் மகளிர் காங்கிரஸார் பிரஜ்வாலுக்கு எதிராக தீவிரமான போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் மட்டுமல்லாது தேசிய அரசியலிலும் பாஜகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பிரஜ்வலால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண் மாயமாகியுள்ளதாக அவரது மகன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். 20 வயதான மகன் கொடுத்துள்ள புகாரில், “கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் ஹோலேநரசிபுராவில் உள்ள ரேவண்ணாவின் வீட்டில் எங்க அம்மா வேலை செய்து வந்தார். ஆனால் 3 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் வேலையிலிருந்து நின்றுவிட்டார்.

இப்படி இருக்கையில் கடந்த 5 நாட்களுக்கு முன்னர் அதாவது ஏப்.29ம் தேதி இரவு 9 மணிக்கு ரேவண்ணாவின் ஆட்கள் சிலர் எங்கள் வீடு தேடி வந்தனர். இந்த ஆட்களில் ரேவண்ணாவின் நம்பிக்கைக்குரிய ஆளான சதீஷ் பாபன்னாவும் இருந்தார். எங்களிடம், போலீஸ் விசாரணைக்காக வருவார்கள். அவர்களிடம் எதுவும் சொல்ல கூடாது என்று மிரட்டினார்கள்.

பின்னர், உங்க அம்மா மாட்டிகிட்டா எல்லோருக்கும் சிக்கல். முக்கியமாக உங்களையெல்லாம் கைது செஞ்சுடுவாங்க. ரேவண்ணா உங்க அம்மாவை கூப்பிட்டு வர சொன்னாருனு சொல்லி என் அம்மாவை கடத்தி சென்றுவிட்டார்கள். மே 1 வரை எனக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. அதன் பின்னர், என் அம்மா கயிற்றில் கட்டப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வீடியோ வெளியானது. எனது அம்மாவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. அவரை உடனே கண்டுபிடித்து கொடுங்கள்” என வலியுறுத்தியுள்ளார்.

புகாரையடுத்து கே.ஆர்.நகர் போலீசார் எச்.டி.ரேவண்ணா மற்றும் சதீஷ் பாபண்ணா ஆகியோர் மீது கடத்தல், கட்டாயப்படுத்தி அடைத்து வைத்தல் மற்றும் முதன்மை குற்றவாளிக்கு உடந்தையாக இருத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஏற்கெனவே பாலியல் விடியோ சர்ச்சை குற்றச்சாட்டு சலசலப்புகளை கிளப்பிய நிலையில், தற்போது ஆள் கடத்தல் குற்றச்சாட்டு புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக