செவ்வாய், 14 மே, 2024

யார் அடுத்த பிரதமர் என்பதை ஜெகன்மோகன் ரெட்டியும், நவீன் பட்நாயக்கும் தீர்மானிக்கப் போகிறார்களா?

மின்னம்பலம் -vivekanandhan  : ஆந்திரா, ஒடிசா இந்த இரண்டு மாநிலங்களில் எந்த கட்சி வெற்றி பெறப் போகிறது என்பது நாடு முழுதும் முக்கியமாக கவனிக்கப்படுகிறது.
இந்தியாவில் மத்தியில் எந்த கூட்டணி ஆட்சி அமைக்கப் போகிறது என்பதைத் தீர்மானிப்பதில் இந்த இரண்டு மாநிலங்களின் வெற்றி யாருக்கு என்பது முக்கியமான காரணியாக இருக்கும் என்று அவதானிக்கப்படுகிறது.
ஆந்திராவிற்கும், ஒடிசாவிற்கும் இந்த தேர்தலில் உள்ள ஒற்றுமை என்னவென்றால்,
இரண்டு மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெறும் தொகுதிகள் தவிர்த்து மற்ற கட்சிகள் வெல்லும் தொகுதிகள் எந்த கூட்டணிக்கு ஆதரவாக மாறப் போகிறது என்பது தெரியாமல் இருப்பது தான்.
இரண்டு மாநிலங்களிலும் இந்தியா கூட்டணியில் இல்லாத மாநிலக் கட்சிகளே செல்வாக்கு செலுத்துகின்றன.    ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியும், ஒடிசாவில் நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம் கட்சியும் ஆளுங்கட்சிகளாக இருக்கின்றன. கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் இந்த மாநிலங்களின் பெரும்பான்மை தொகுதிகளை வென்ற கட்சிகளாக இக்கட்சிகளே இருக்கின்றன. இரண்டு கட்சிகளுக்கும் எதிர் தரப்பில் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி உள்ளது.

46 தொகுதிகள்…கவனிக்கப்படும் முடிவுகள்

ஆந்திராவில் 25 தொகுதிகள் மற்றும் ஒடிசாவில் 21 தொகுதிகள், மொத்தம் 46 தொகுதிகள் எந்த கூட்டணியின் கணக்கில் சேரப் போகின்றது என்பது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ஆட்சி அமைப்பதற்கான மெஜாரிட்டியைப் பெறுவதற்கு இரண்டு கூட்டணியாலும் முடியவில்லை என்றால், ஒடிசா மற்றும் ஆந்திர தேர்தலின் முடிவுகளே யார் ஆட்சியமைக்கப் போகிறார்கள் என்பதைத் தீர்மானிக்கக் கூடியதாக இருக்கும். இதுவே இந்த இரண்டு மாநில முடிவுகளை நாடு முழுதும் உள்ள அரசியல் ஆய்வாளர்கள் உற்றுநோக்குவதற்கான காரணம்.

கடந்த 5 ஆண்டுகளில் பாஜகவுடன் முரண்படாதவர்கள்

ஜெகன் மோகன் ரெட்டி, நவீன் பட்நாயக் இருவருமே பாஜகவுடன் பெரிதாக முரண்பட்டுக் கொள்ளாத முதல்வர்களாகவே கடந்த 5 ஆண்டுகளில் இருந்துள்ளனர். மேலும் பாராளுமன்றத்தில் பாஜக கொண்டுவந்த பல மசோதாக்களுக்கு தொடர்ச்சியாக ஆதரவளிக்கும் கட்சிகளாக இரண்டு கட்சிகளுமே இருந்து வந்திருக்கின்றன. இதன்காரணமாக இவர்கள் வெற்றி பெற்றால் அது பாஜகவின் கணக்கில் தான் சேரும் என்ற கருத்து அரசியல் விமர்சகர்கள் மத்தியில் நிலவியது.

எனவே ஆந்திராவிலும் சரி, ஒடிசாவிலும் சரி மொத்தமுள்ள 46 தொகுதிகளில் எந்த கூட்டணி வெற்றி பெற்றாலும் அவை பாஜகவின் ஆதரவு கணக்கில் தான் சேரும் என்று பேசப்பட்டது. ஆனால் கடந்த சில மாதங்களில் இரு மாநிலங்களிலும் நடைபெற்ற நிகழ்வுகள் இந்த பார்வையில் பல மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது. அந்த மாற்றங்கள் என்ன என்பதைப் பார்ப்போம்.

ஆந்திராவில் என்ன நடக்கிறது?

முதலில் ஆந்திராவின் நிலவரத்தைப் பார்ப்போம். ஆந்திராவில் இரு பெரும் கட்சிகளான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி ஆகியவற்றில் தெலுங்கு தேசம் கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டிருக்கிறது. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தனித்து களமிறங்கியது. ஆந்திராவைப் பொறுத்தவரை இந்த முறை நாடாளுமன்றத் தேர்தலும், சட்டமன்றத் தேர்தலும் ஒன்றாக நடந்திருக்கிறது.

25 நாடாளுமன்றத் தொகுதிகளும், 175 சட்டமன்றத் தொகுதிகளும் ஆந்திராவில் உள்ளன. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 25 நாடாளுமன்றத் தொகுதிகளில் 22 தொகுதிகளை ஒய்.எஸ்.ஆர். காங்கிரசும், 3 தொகுதிகளை தெலுங்கு தேசம் கட்சியும் கைப்பற்றியது.

அதேபோல் 2019 சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 151 தொகுதிகளை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கைப்பற்றியது. வெறும் 23 தொகுதிகளை மட்டுமே தெலுங்கு தேசம் கட்சி கைப்பற்றியது. பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி ஒரு தொகுதியில் மட்டும் வென்றது.

இந்த முறை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கும், தெலுங்குதேசம்-பாஜக-ஜனசேனா கூட்டணிக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவியது. மூன்றாவதாக காங்கிரஸ் தலைமையில் கம்யூனிஸ்ட்களை உள்ளடக்கிய இந்தியா கூட்டணியும் போட்டியிட்டது. ஆந்திரப் பிரதேச காங்கிரசின் தலைவராக ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஒய்.எஸ்.ஷர்மிளா போட்டியிட்டதால் ஆந்திராவின் களம் இன்னும் பரபரப்பு நிறைந்ததாகவே இருந்தது.

இந்த பரபரப்புகளையெல்லம் தாண்டி, தேர்தலில் மீண்டும் ஜெகன்மோகன் ரெட்டி அதிக தொகுதிகளைக் கைப்பற்றினால், அவர் எந்த கூட்டணிக்குப் போவார் என்பது இப்போது நாடு முழுதும் மிகப்பெரும் கேள்விக்குறியாக இருக்கிறது.

நான்கு கட்டத் தேர்தல் குறித்து ஆய்வுகளை மேற்கொண்ட அரசியல் ஆய்வாளர்கள் பெரும்பாலும் பாஜக சொல்லும் 400 தொகுதிகள் என்பதை அவர்களால் வெல்ல முடியாது என்கிறார்கள். மேலும் தனிப்பெரும்பான்மை கிடைப்பதும் சந்தேகம் தான் என்று சொல்வதுடன், பாஜக கடந்த முறை வென்றதில் அதிக தொகுதிகளை இழக்கும்பட்சத்தில் இந்தியா கூட்டணி ஆட்சியமைப்பதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன எனும் கலவையான பார்வைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் தான் தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணி இரண்டு கூட்டணிகளுக்கும் தொகுதிகளின் எண்ணிக்கையில் ஒவ்வொன்று அதிகரித்தாலுமே அது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தெலுங்கு தேசம் கட்சி பாஜகவின் கூட்டணியில் உள்ளதால் அவர்கள் வெற்றி பெறும் தொகுதிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கணக்கிற்குள் வந்துவிடும். இந்நிலையில் ஜெகன் மோகன் அதிக எண்ணிக்கையில் தொகுதிகளைக் கைப்பற்றும்பட்சத்தில் அவர் எந்த கூட்டணிக்கு ஆதரவளிப்பார் என்பது மிக முக்கியமான ஒன்றாக கவனிக்கப்படுகிறது.

பாஜக-தெலுங்கு தேசம் கூட்டணிக்குப் பிறகு நடந்த மாற்றங்கள்

ஆந்திராவில் பாஜக தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைத்த பிறகு, இரண்டு கட்சிகளும் சேர்ந்து ஜெகன் மோகன் ரெட்டியை எதிர்த்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளன.

தெலுங்கு செய்தித் தொலைக்காட்சியான என்.டி.வி தொலைக்காட்சிக்கு மோடி கொடுத்த பேட்டியில்,”ஜெகனை ஒரு பயனுள்ள கூட்டாளியாக நாங்கள் எப்போதுமே கருதியதில்லை” என்று பேசியது பல விவாதங்களுக்கு உள்ளாகியுள்ளது.

மேலும் ஆந்திராவில் பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி, ஜெகன்மோகன் ஆட்சி மணல் மாஃபியா, லேண்ட் மாஃபியாக்களின் ஆட்சியாகவும், ரவுடியிசம் மற்றும் குண்டர்களின் ஆட்சியாகவும் இருந்து வருகிறது. இது முடிவதற்கான கவுண்டவுன் தொடங்கி விட்டது என்றும் பேசினார். மேலும் ஆந்திர மக்களுக்கு வீடு தோறும் குடிநீர் குழாய்கள் அமைப்பதற்கான ஜல் ஜீவன் மிஷனை அமல்படுத்துவதற்கு ஜெகன் அரசு ஒத்துழைக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

முஸ்லீம் ஒதுக்கீடு தொடரும்…இது ஒய்.எஸ்.ஆர் மகனின் சத்தியம்

இதற்கு பதிலடியாக தேசிய ஜனநாயகக் கூட்டணி என்பது அதிகார வெறியர்களின் கூட்டம் என்று ஜெகன் மோகன் ரெட்டி கடுமையாக விமர்சித்தார். மேலும் அக்கூட்டணி வெற்றி பெற்றால் ஆந்திராவின் மக்கள் நலத் திட்டங்கள் நிறுத்தப்பட்டு விடும் என்றும் பேசினார். மேலும் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முஸ்லீம் இட ஒதுக்கீட்டை ஒழிப்போம் என்று பேசி வருவதை எதிர்த்து, ”அரசியல் நலனுக்காக இப்படிப் பேசும் கூட்டணியில் சந்திரபாபு நாயுடு எப்படி இருக்க முடியும்? இது அதர்மம் இல்லையா? என்று கேள்வி எழுப்பியதுடன், முஸ்லீம்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 4% இட ஒதுக்கீடு என்பது என்ன நடந்தாலும் தொடரும். இது ஒய்.எஸ்.ஆர் மகனின் சத்தியம்” என்றும் பிரச்சாரம் செய்துள்ளார். இதன் மூலம் பாஜகவின் ஆட்சிக்கு எதிராக இருப்பதை ஜெகன் மோகன் வெளிப்படுத்தினார்.

மேலும் அமித்ஷா பாஜக கூட்டணி ஆந்திராவில் 17 முதல் 18 தொகுதிகளைக் கைப்பற்றும் என்று பேசி வருவதால், ஒரு மாநிலக் கட்சியாக தனக்குரிய இடத்தினை தக்கவைத்துக் கொள்ள ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பாஜகவிற்கு ஆதரவளிக்காது என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.

ராகுலை விட மோடி பெட்டர்…ஜெகன் கொடுத்த பேட்டி

ஆனால் டைம்ஸ் நவ் ஊடகத்திற்கு ஜெகன் மோகன் அளித்த பேட்டியில், ராகுல் காந்தி பிரதமராக வர முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா என்று கேட்டதற்கு, “ராகுல் மற்றும் மோடி இருவரையும் வைத்து பார்த்தோமென்றால், இரண்டு பேருக்குமே வாய்ப்பு இருக்கிறது என்றே நான் சொல்வேன். ஆனால் மைனாரிட்டிகள் தொடர்பான சில விவகாரங்களை விலக்கிவிட்டு பார்த்தோமென்றால், ஒரு மனிதராக ராகுலைக் காட்டிலும் மோடி பெட்டர். ஏனென்றால் நான் ராகுல் காந்தியின் மோசமான பக்கத்தைப் பார்த்திருக்கிறேன். என் தந்தையின் மறைவிற்குப் பிறகு என் சொந்த மாநிலத்தில் என் சொந்த வழக்கில் காங்கிரஸ் கட்சி எங்கள் குடும்பத்தை எப்படி துன்புறுத்தியது என்பதை நான் பார்த்திருக்கிறேன். நானே அதற்கு சாட்சியாகவும் இருக்கிறேன். எனவே யாரோடு ஒப்பிட்டாலும் ராகுல் காந்தி பெட்டர் என்று என்னால் எப்போதும் சொல்ல முடியாது” என்று பதில் அளித்தது பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

ராகுல் காந்தியின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை அவர் வைத்து, ஒரு மனிதராக ராகுலை விட மோடி பெட்டர் என்று அவர் சொல்லியிருப்பதன் மூலம் தேர்தலுக்குப் பிறகு ஜெகன்மோகன் ரெட்டி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவளிப்பாரா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

ஒடிசா நிலவரம் என்ன?

ஒடிசா மாநிலத்தின் நிலையும் ஏறக்குறைய ஆந்திராவைப் போலவே இருக்கிறது. ஒடிசாவில் 21 நாடாளுமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. அங்கும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல் இரண்டுமே நடைபெறுகின்றன. 25 ஆண்டுகளாக ஒடிசா முதலமைச்சராக பிஜூ ஜனதா தளம் கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் இருந்துவரும் நிலையில், தற்போது பாஜக ஒடிசாவினைக் கைப்பற்ற பல திட்டங்களை வகுத்திருக்கிறது.

2014 நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத பாஜக, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் ஒடிசாவில் 8 தொகுதிகளைக் கைப்பற்றியது. எனவே இந்த முறை பிஜூ ஜனதா தளத்தினை வீழ்த்த கடுமையாக முயன்று வருகிறது பாஜக.

பாஜக-பிஜூ ஜனதா தளம் கூட்டணி முயற்சி தோல்வி

தேர்தல் தேதி அறிவிப்பிற்கு முன்பு பாஜகவிற்கும், நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளத்திற்கும் இடையில் கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஆனால் பாஜக அதிக இடங்களை எதிர்பார்த்ததால் கூட்டணிப் பேச்சுவார்த்தை முறிந்து மொத்தமுள்ள 21 தொகுதிகளிலும் இரண்டு கட்சிகளும் தனித்தனியாக களம் காண்கின்றன.

கடந்த சில வாரங்களில் நடந்த மாற்றம்

தேர்தலுக்கு முன்பு நவீன் பட்நாயக் தொடர்ச்சியாக மோடியுடன் நெருக்கம் காட்டி வந்தார். ஆனால் கடந்த சில வாரங்களின் நிகழ்வுகள் பல மாற்றங்களை ஒடிசா தேர்தலில் கொண்டு வந்திருக்கின்றன. ஒடிசாவில் பிரச்சாரம் செய்த மோடி நவீன் பட்நாயக்கை கடுமையாக விமர்சித்ததால், இரு கட்சிகளுக்கும் இடையில் கடுமையான வார்த்தைப் போர்கள் வெடித்துள்ளன.

”இத்தனை ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும் ஒடிசா முதலமைச்சரால் இந்த மாநிலத்தில் உள்ள மாவட்டங்களின் பெயர்களையோ, மாவட்டத் தலைநகரங்களின் பெயர்களையோ கையில் பேப்பரை வைத்துக்கொண்டு படிக்காமல் சொல்ல முடியாது. உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு நீங்கள் இவரையா நம்புகிறீர்கள்?” என்று நேரடித் தாக்குதலை மோடி நவீன் பட்நாயக் மீது தொடுத்துள்ளார்.

நவீன் பட்நாயக்கிற்குப் பிறகு பிஜூ ஜனதா தளத்தின் முக்கியப் புள்ளியாகப் பார்க்கப்படுபவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.கே.பாண்டியன். இவர் ஒடிசாவில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்து பின்னர் நவீன் பட்நாயக் ஆட்சியில் பல முக்கியப் பொறுப்புகளை கவனித்து வந்து, பிஜூ ஜனதா தளம் கட்சியிலேயே இணைந்து விட்டார்.

வி.கே.பாண்டியனைக் குறிவைத்து, ”ஒடிசாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரையும், எம்.எல்.ஏ-க்களையும் கட்டுப்படுத்துகிற சூப்பர் சி.எம் ஒருவர் இருக்கிறார்” என்று மோடி விமர்சித்திருக்கிறார்.

வி.கே.பாண்டியன்

மோடியின் பேச்சுகளுக்கு பதிலடி கொடுத்துள்ள ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ”பிரதமரே, உங்களுக்கு ஒடிசாவைப் பற்றி எவ்வளவு ஞாபகமிருக்கிறது? ஒடியா ஒரு செம்மொழியாக இருந்தும், அதனை நீங்கள் மறந்து விட்டீர்கள். நீங்கள் சமஸ்கிருதத்திற்கு 1000 கோடி ஒதுக்கியிருக்கிறீர்கள். ஆனால் ஓடியாவிற்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை” என்று பேசியிருக்கிறார்.

மேலும், “ஒடிசி இசையை அங்கீகரிக்க உங்களுக்கு இரண்டு முறை கடிதம் எழுதினேன். நீங்கள் இரண்டு முறையும் நிராகரித்து விட்டீர்கள். இன்னும் 10 ஆண்டுகள் ஆனாலும் ஒடிசா மக்களின் மனதை பாஜகவால் வெல்ல முடியாது” என்று நவீன் பட்நாயக் கடுமையான பாஜக எதிர்ப்பினை முன்வைத்துள்ளார்.

வி.கே.பாண்டியன் வைத்த குற்றச்சாட்டு

மேலும் பிஜூ ஜனதா தளத்தின் முக்கியத் தலைவரான வி.கே.பாண்டியன், ”தேர்தலுக்குப் பிறகு பிஜூ ஜனதா தளத்தினை உடைக்க பாஜக திட்டமிட்டிருக்கிறது” என்ற வெளிப்படையாகப் பேசியுள்ளார். மேலும் மகராஷ்டிரா, ”கர்நாடகா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கட்சிகளை உடைக்கும் யுக்தியை பாஜக செய்திருக்கிறது. ஆனால் ஒடிசா மக்கள் பாஜகவை நம்பவில்லை. அவர்கள் நவீன் மீது தான் நம்பிக்கை வைத்துள்ளனர்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பிஜூ ஜனதா தளத்தினை பாஜக தேர்தலுக்குப் பின் உடைக்க திட்டமிட்டுள்ளது என்று வெளிப்படையாக பேசியிருப்பது, மோடி-நவீன் பட்நாயக் இடையே இதற்கு முன் இருந்த உறவு இப்போது இல்லை என்பதைக் காட்டுவதாக இருக்கிறது என்கிறார்கள் ஒடிசாவின் அரசியல் விமர்சகர்கள். எனவே ஒடிசாவில் பிஜூ ஜனதா தளம் வெற்றி பெறும் தொகுதிகளின் கணக்கு தேர்தலுக்குப் பிறகு பாஜகவிற்கு ஆதரவாகப் போவதற்கே வாய்ப்புகள் அதிகம் என்று சொல்லப்பட்டு வந்த கணிப்புகளை மாற்றுவதாகவே சமீபத்திய விவகாரங்கள் அமைந்துள்ளன என்றே சொல்ல வேண்டும்.

விவேகானந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக