திங்கள், 13 மே, 2024

ஒரே மேடையில் இந்தியா கூட்டணி தலைவர்கள்? மாற்றி யோசிக்கும் ஸ்டாலின்

 மின்னம்பலம் - Aara  :    டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தலைவரும் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் பெயிலில் வந்து பிரச்சாரம் செய்யும் காட்சிகள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
”மே 10 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறையின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்
டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால்.  அவர் நேற்று மே 11ஆம் தேதி டெல்லியில் தனது கட்சித் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.


அப்போது, ‘மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களை எல்லாம் கைது செய்ய முடியும் என்று மிரட்டுவதற்காக தான் என்னை மோடி கைது செய்தார்.

ஒருவேளை மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்து விட்டால் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களும் கைது செய்யப்படுவார்கள் என்று எச்சரித்தார். இதன்பிறகு தனது தேர்தல் பிரச்சாரப் பயணத்தை வேகமாக நடத்த திட்டமிட்டு இருக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.

தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு இந்தியா கூட்டணி தலைவர்கள் ஒன்று சேர்ந்து தேசிய அளவில் ஒரு பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஒரு பேச்சு எழுந்தது. அந்த கூட்டத்தில் ராகுல் காந்தி, ஸ்டாலின், சரத் பவார், மம்தா பானர்ஜி, பினராயி விஜயன், தேஜஸ்வி யாதவ், உத்தவ் தாக்கரே, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோரை பங்கு பெற வைக்க வேண்டும் என்ற ஒரு திட்டம் இந்தியா கூட்டணியில் இருந்தது.

ஆனால், மார்ச் 21ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட நிலையில்… நாடு முழுவதும் வெவ்வேறு கட்ட தேர்தல்கள் நடந்து கொண்டிருந்தததால், இந்தியா கூட்டணி தலைவர்கள் ஒரே மேடையில் இணைந்து பொதுக்கூட்டம் நடத்தும் திட்டம் தள்ளிப்போனது. அதன் பிறகு அரவிந்த் கெஜ்ரிவால் இல்லாமல் எப்படி நடத்துவது என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தால் ஜாமீனில் விடுதலையான நிலையில், தலைவர்களை ஒருங்கிணைத்து தேசிய அளவில் பிரம்மாண்டமான ஒரு பொதுக்கூட்டத்தை நடத்துவது என்ற விவாதம் மீண்டும் இந்தியா கூட்டணியில் எழுந்துள்ளது.

இதுகுறித்து திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ஸ்டாலினிடம் வடக்கில் இருந்து பேசியிருக்கிறார்கள். இந்த அழைப்பு குறித்து முதல்வருக்கு நெருக்கமான வட்டாரத்தில் ஆலோசனை நடந்துகொண்டிருக்கிறது.

தமிழ்நாடு தாண்டி வெளிமாநிலங்களுக்கு பிரச்சாரம் செய்வதில் ஆர்வமாக இருந்த முதலமைச்சர் ஸ்டாலின் இப்போது அது குறித்த மாற்று யோசனைகள் இருப்பதாக கூறுகிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

அவர்களிடம் இதுகுறித்து பேசியபோது, ‘இந்த மக்களவைத் தேர்தலின் ஆரம்பகட்டத்தில் வட இந்தியாவில் இருந்த நிலைமை இப்போது வெகுவாக மாறி இருக்கிறது. ஒரு சில வாரங்களுக்கு முன்பு இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்று கேட்ட அமித்ஷா தான் இன்று, ‘இந்த தேர்தல் ராகுல் காந்திக்கும் நரேந்திர மோடிக்கும் இடையே நடக்கக்கூடிய தேர்தல் என்று பேசியிருக்கிறார். ராகுல் காந்திக்கும், பிரியங்கா காந்திக்கும் சென்ற இடங்களிலெல்லாம் மக்கள் கடல் திரள்கிறது.

மேலும், அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து விடுதலை ஆன பிறகு இந்தியா கூட்டணிக்கு வட இந்தியாவில் மிகப் பெரிய எழுச்சி ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், அங்கே தலைவர்களை ஒருங்கிணைத்து பொதுக்கூட்டம் நடத்த வேண்டியதை விட கள வேலைகளை கவனிப்பதுதான் அவசரமான அவசியமாக இருக்கிறது என்று கருதுகிறார் ஸ்டாலின்.

மதம் பற்றியெல்லாம் பேசிப் பேசி அதானி, அம்பானி என்றெல்லாம் பேச ஆரம்பித்திருக்கிறார் மோடி, ஒருவேளை திமுக தரப்பில் ஸ்டாலின் அங்கே சென்று இந்தியா கூட்டணி பிரச்சாரத்தில் கலந்து கொள்வாரேயானால் மீண்டும் திமுக ஏற்கனவே பேசிய சனாதன வீடியோக்களை பாஜக டிரெண்டிங் செய்து… அங்கே இழந்துகொண்டிருக்கிற களத்தை பிடிப்பதற்கு முயற்சி செய்யும். அதற்கு வீணாக இடம் கொடுக்காமல் இந்தியா கூட்டணிக்கான எழுச்சியை களப் பணிகள் மூலம் விரைவுபடுத்தவே இப்போது கால அவகாசம் இருக்கிறது என்று கருதுகிறார் ஸ்டாலின்.

எனவே தேசிய அளவிலான தலைவர்களின் பொதுக்கூட்டம் இப்போது வரை ஆலோசனை அளவில்தான் இருக்கிறது. அது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஒருவேளை காங்கிரஸ் கட்சி, ராகுல் காந்தி, கேஜ்ரிவால் போன்றவர்கள் வற்புறுத்தினால் இறுதி கட்ட தேர்தலுக்கு முன்பாக ஒரு பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்பதற்கான வாய்ப்பு இருக்கிறது” என்ற மெசேஜ்க்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக