ஞாயிறு, 12 மே, 2024

உக்கிரேன் ரஷ்ய போரில் 300ற்கும் மேற்பட்ட இலங்கையர்கள்! காமினி வலேபொட எம்பி

 hirunews.lk : இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக ரஸ்யாவுக்கு அனுப்பப்பட்டவர்களில் 300ற்கும் அதிகமானோர் போரில் ஈடுபட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் 200ற்கும் அதிகமானோர் தற்போது முகாம்களில் பயிற்சி பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஸ்ய – யுக்ரைன் மோதலுக்காக இலங்கையிலிருந்து 800ற்கும் அதிகமானோர் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகள் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்துள்ளார்.

ரஸ்ய - யுக்ரைன் மோதலில் பங்கேற்பதற்காக இலங்கையிலிருந்து வெளியேறிய 14 ஓய்வு பெற்ற இராணுவ உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக 8 பேர் உயிரிழந்ததாக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரி ஒருவர் எமது செய்திச்சேவைக்கு தெரிவித்திருந்தார்.

இதேவேளை, லத்வியாவின் எல்லை வழியாக ஏதிலிகளை சட்டவிரோதமாக அழைத்துச் செல்ல முயன்ற ஐந்து இலங்கையர்கள் கடந்த 8ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளதாக அந்தநாட்டு எல்லைப் பாதுகாப்புப் படையினர் அறிவித்துள்ளனர்.

சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றிச் சென்ற வாகனங்களில் ஒன்றின் முன்பக்கத்திலும் சாரதி ஆசனத்திலும் இருந்த இரண்டு இலங்கையர்களுக்கு செல்லுபடியாகும் லித்விய வதிவிட விசா இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், பின்னால் இருந்த ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த ஆறு பேரிடம் உரிய ஆவணங்கள் இல்லை எனவும் எல்லை கண்காணிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த குழுவுடன் சட்டவிரோதமாக எல்லைக்குள் பிரவேசித்தவர்களுக்கு உதவியாக வந்த மற்றுமொரு வாகனத்தில் இருந்து மூன்று இலங்கையர்களும் கைது செய்யப்பட்டதாக எல்லைப் பாதுகாப்புப் படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

லித்வியாவுக்கு சட்டவிரோதமாக ஏதிலிகளை அழைத்துச் செல்ல முயற்சித்த குற்றச்சாட்டில் இந்த ஐந்து இலங்கையர்களுக்கும் எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்படுமாயின் ஐந்து இலங்கையர்களுக்கும் இரண்டு முதல் எட்டு ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் எனவும் லித்விய எல்லைக் காவலர்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக