ஞாயிறு, 26 மே, 2024

ஸ்மிருதி இரானி : ஒடிசாவை கொள்ளையடிக்கும் தமிழக கான்ட்ராக்டர்கள்1

 மின்னம்பலம் :- Aara :  ஒடிசாவை கொள்ளையடிக்கும் தமிழக கான்ட்ராக்டர்கள்: மீண்டும் சர்ச்சையைக் கிளப்பிய ஸ்மிருதி இரானி
ஒடிசா மாநிலத்தில் தமிழ்நாட்டையும் தமிழர்களையும் குறிவைத்து ஏற்கனவே பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பேசி… அதற்கு தமிழகத்தில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் மீண்டும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஒடிசாவில் தமிழ்நாட்டை தொடர்புபடுத்தி கடுமையாக பேசியிருக்கிறார்.
ஒடிசாவில் நேற்று (மே 25) பாஜக தேசியத் துணைத் தலைவரும் மக்களவை வேட்பாளருமான பைஜயந்த் பாண்டா போட்டியிடும் கேந்திரபராவில் உள்ள ஆல் என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஸ்மிருதி இரானி பேசினார்.



ஒடிய மொழியில் தனது உரையைத் தொடங்கிய ஸ்மிருதி இரானி,

“பிரதமர் நரேந்திர மோடி ஒடிசாவில் உள்ள விவசாயிகள் மற்றும் சமூகத்தின் பிற பிரிவினருக்காக பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் சலுகைகளை விரிவுபடுத்தி நிதி ஒதுக்கினார். ஆனால் இங்குள்ள ரிமோட் கன்ட்ரோல் அரசாங்கத்தின் தமிழ்நாடு அதிகாரி அவற்றை அபகரித்து, ஏழைகளுக்கான சலுகைகளை பறிக்கிறார். பிரதமர் மோடி தான் வீடுகள் கட்ட பணம் அனுப்புகிறார். ஆனால் இந்த ரிமோட் கன்ட்ரோல் அரசாங்கத்தால் தமிழகத்தில் உள்ளவர்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்படுகின்றன.

நரேந்திர மோடி அரசாங்கம் அனுப்பிய பணத்தை தமிழ் தேகேதர்கள் (கான்ட்ராக்டர்கள்) கொள்ளையடித்தனர். ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகத்திற்காக அனுப்பப்பட்ட நிதி தமிழக கான்ட்ராக்டர்களால் சூறையாடப்படுகிறது.

பூரி ஜெகநாதர் கோவிலின் ரத்னா பந்தர் சாவி எப்படி காணாமல் போனது, தமிழகத்தை சேர்ந்த ஒப்பந்ததாரர் ஏன் அதை மறைத்து வைத்துள்ளார் என்பதை ஒடிசா மக்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள்?

பாஜகவுக்கு மக்கள் வாக்களித்தால், ரத்னா பந்தரின் சாவியைத் திருடி, ஜெகநாதரை அவமதித்தது யார் என்ற உண்மை வெளிவரும்” என்று ஸ்மிருதி இரானி நேற்று பேசியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் இருந்து எதிர்ப்பும் கண்டனமும் வெளிவந்த பிறகும் கூட பாஜகவினரின் இந்த பேச்சு தொடர்வது குறிப்பிடத் தக்கது.

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் வலதுகரமாக இருக்கும் அவரது முன்னாள் செயலாளரான தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி  வி.கே. பாண்டியனை குறிவைத்துதான் இவ்வளவு பிரச்சாரங்களும் நடைபெற்று வருகின்றன.
–வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக