வெள்ளி, 19 ஏப்ரல், 2024

ஏழை நாட்டு குழந்தை உணவுகளில் மட்டும் அதிக Sugar சர்க்கரை: நெஸ்ட்லே மீது பகீர் புகார்

 தினமணி : இந்தியாவில், போர்ன்விட்டா மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், தற்போது, நெஸ்ட்லேவின் குழந்தைகளுக்கான உணவுகள் அபாயத்தை சந்தித்துள்ளன.
நெஸ்ட்லே நிறுவனம், ஏழை நாடுகளில் விற்பனையாகும் பால் பொருள்கள் உள்பட குழந்தைகளுக்கான உணவில்தான் அதிக சர்க்கையை சேர்ப்பதாகவும்,
அமெரிக்கா, ஐரோப்பிய, பிரிட்டன் நாடுகளில் விற்பனையாகும் உணவுகளில் இந்த அளவுக்கு சர்க்கை இருக்கவில்லை என்றும் ஆய்வறிக்கை வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
ஸ்விஸ் புலனாய்வு அமைப்பு, சர்வதேச குழந்தைகள் உணவு அமைப்பு இணைந்து நடத்திய ஆய்வறிக்கையை ஆங்கில ஊடகம் ஒன்று வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது. இந்த ஆய்வறிக்கை குறித்து நெஸ்ட்லே எதையும் சொல்லவில்லை. ஆனாவ், பொதுவான அறிக்கையில், உலகளவில் விற்பனையாகும் குழந்தைகளுக்கான உணவுப் பொருள்களில் சேர்க்கப்படும் சர்க்கரை அளவு 11 சதவீதம் அளவுக்குக் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், சுவை, தரம் பாதுகாப்பு மாறாமல், சர்க்கரை அளவு குறைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசியா, ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்க நாடுகளில் விற்பனையாகும் குழந்தைகளுக்கான உணவுப் பொருள்கள் பெல்ஜிய ஆய்வுக்கூடத்தில் ஆய்வுக்குட்படுத்தப்பட்டது.

இந்தியாவில் விற்பனையாகும் செர்லக் என்ற குழந்தை உணவுகளில் ஒரு கிண்ணத்துக்கு 3 கிராம் சர்க்கரை சேர்க்கப்பட்டிருக்கும். இதுவே தாய்லாந்து 6 கிராமாகவும், எத்தியோப்பியாவில் 5.2 கிராமாகவும், தென்னாப்ரிக்காவில் 4 கிராமாகவும் உள்ளது.

அதுவே பிரிட்டன் மற்றும் ஜெர்மனி, பிரான்ஸில் பூஜ்ஜியமாக உள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த இரட்டை நிலைப்பாட்டை இந்நிறுவனம் எப்போதும் நியாயப்படுத்த முடியாது என்று ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. குழந்தைகளுக்கு அதிகப்படியான சர்க்கரையைக் கொடுப்பது உடல் பருமன் உள்ளிட்ட பல்வேறு நோய்களை ஏற்படுத்தும் என்பது தெரிந்ததே என்பதால், இந்த விவகாரம் மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக