வெள்ளி, 26 ஏப்ரல், 2024

3 இந்திய நிறுவனங்களுக்கு பொருளாதாரத் தடை; அமெரிக்கா அதிரடி அறிவிப்பு - (ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம்)

 nakkheeran.in : இந்திய நிறுவனங்களுக்கு பொருளாதாரத் தடை; அமெரிக்கா அதிரடி அறிவிப்பு
இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.
இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படையைச் சேர்ந்த மூத்த தளபதி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதனையடுத்து, இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கெனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில், தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. ஆனால், ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் சிரியா, லெபனான் எல்லைப் பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

US Action Announcement on Sanctions on Indian companies

ஈரான் தாக்குதலுக்கு எதிராகவும் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் அமெரிக்கா களமிறங்கியுள்ளது. ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்றும், மீறி நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என அமெரிக்கா, ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால், அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ஈரான் தாக்குதல் நடத்தியதற்காக அமெரிக்கா, ஈரான் மீது பொருளாதாரத் தடையை அறிவித்தது. இந்த அறிவிப்பை, அமெரிக்காவோடு பிரிட்டனும் கைகோர்த்து அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாகக் கூறி இந்தியாவைச் சேர்ந்த 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. இது குறித்து அமெரிக்காவின் கருவூலத்துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது, ‘போருக்கு ஈரான் நாட்டின் யுஏவிக்கள் எனப்படும் ஆளில்லா விமானங்களை ரகசியமாக விற்பனை செய்வதற்கும், நிதியுதவி செய்வதற்கும் இந்தியாவைச் சேர்ந்த 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் முக்கிய பங்கு வகித்துள்ளது. ஆதலால், இந்த நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கிறது’ எனத் தெரிவித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக