திங்கள், 8 ஏப்ரல், 2024

கன்னியாகுமரி: எக்ஸ்பிரஸ் வேகத்தில் விஜய் வசந்த்... கை கொடுக்கும் தாரகை... ஏனோதானோ தளவாய்... என்ன செய்வார் பொன்னார்?

மின்னம்பலம் -vivekanandhan : 15 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட கன்னியாகுமரி மக்களவை தொகுதி எப்போதுமே உற்று கவனிக்கப்படும் ஒரு தொகுதி.
தமிழ்நாடு முழுதும் களம் திமுகவுக்கும், அதிமுகவுக்குமான போட்டியாக இருந்தாலும், கன்னியாகுமரியில் மட்டும் பெரும்பாலான நேரங்களில் போட்டி காங்கிரஸ் Vs பாஜக என்று தான் இருக்கும்.
இரண்டு தேசியக் கட்சிகளும் செல்வாக்கு செலுத்தும் தொகுதியாக கன்னியாகுமரி இருக்கிறது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சிட்டிங் எம்.பியாக இருக்கக் கூடிய விஜய் வசந்த் போட்டியிடுகிறார்.
பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் பசிலியன் நசரேத் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் மரிய ஜெனிஃபர் போட்டியிடுகிறார்.

சமூக வாரியான வாக்குகள்
கன்னியாகுமரியைப் பொறுத்தவரை இந்துக்களும்,  கிறித்தவர்களும் ஏறக்குறைய சம எண்ணிக்கையில் இருக்கிறார்கள். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் 48.65% இந்துக்கள் இருக்கிறார்கள். 46.85% கிறித்தவர்கள் இருக்கிறார்கள். இஸ்லாமியர்கள் 4.2% இருக்கிறார்கள். தமிழ்நாட்டின் மற்ற தொகுதிகளில் வெற்றி தோல்விகளை தீர்மானிப்பதில் ஜாதி எப்படி முக்கியமான காரணியாக இருக்கிறதோ அதேபோல் கன்னியாகுமரியில் மதமும் முக்கிய காரணியாக இருக்கிறது. சமூகங்களைப் பொறுத்தவரை நாடார் சமூக வாக்குகளும், மீனவ சமூக வாக்குகளும் வெற்றி தோல்வியை தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மீனவர்கள் பெரும்பாலும் கிறித்தவர்களாக இருப்பதால் பாஜக நாடார் சமூகத்தின் வாக்குகளைக் குறிவைத்தே பெரும்பாலும் வேலை செய்து வருகிறது.

கன்னியாகுமரியின் சட்டமன்றத் தொகுதிகள்

இத்தொகுதி 2008 ஆம் ஆண்டுக்கு முன்புவரை நாகர்கோவில் மக்களவைத் தொகுதியாக இருந்து பின்னர் கன்னியாகுமரி மக்களவை தொகுதியாக மாற்றம் பெற்றது. கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி என்பது கன்னியாகுமரி, நாகர்கோயில், குளச்சல், பத்மநாபபுரம், கிள்ளியூர், விளவங்கோடு ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய தொகுதியாகும். விளவங்கோடு தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ வாக இருந்த விஜயதாரணி இப்போது பாஜகவில் இணைந்து விட்டதால் விளவங்கோடு தொகுதிக்கான இடைத்தேர்தலும் தற்போது நடைபெற உள்ளது.

காங்கிரசின் கோட்டையாக இருந்தது

இந்த தொகுதி 1999க்கு முன்பு வரை காங்கிரசின் அசைக்க முடியாத எஃகு கோட்டையாக இருந்தது என்றே சொல்லலாம். தொடர்ச்சியாக 9 தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றது. மார்ஷல் நேசமணி மூன்று முறை இத்தொகுதியின் எம்.பியாக இருந்திருக்கிறார். காமராஜர் இறப்பதற்கு முன்பு 2 முறை இத்தொகுதியின் எம்.பியாக இருந்தார். என்.டென்னிஸ் இத்தொகுதியில் 6 முறை எம்.பியாக இருந்தார். 4 முறை காங்கிரஸ் சார்பாகவும், தமிழ் மாநில காங்கிரஸ் பிரிந்த பிறகு 2 முறையும் அவர் எம்.பியாக இருந்திருக்கிறார். அதன்பிறகு 1999 இல் திமுக கூட்டணியில் நின்று வெற்றி பெற்றார் பொன்.ராதாகிருஷ்ணன். இதுதான் கன்னியாகுமரியில் காங்கிரஸ் அல்லாத கட்சி வெற்றி பெற்ற முதல் தேர்தலாகும். அதன்பிறகு திமுக காங்கிரஸ் கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு முறையும், திமுக ஒரு முறையும், பாஜக 3 வது அணியாக நின்று ஒரு முறையும் கன்னியாகுமரியை வென்றிருக்கிறார்கள். 2019 ஆம் ஆண்டில் மீண்டும் காங்கிரஸ் கட்சி கன்னியாகுமரியை தனதாக்கிக் கொண்டது.

2019 மற்றும் 2021 தேர்தல்கள் ஒப்பீடு

2019 பாராளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற வசந்த்&கோ நிறுவனர் வசந்தகுமார் மரணமடைந்ததால், 2021 சட்டமன்றத் தேர்தலுடன் கன்னியாகுமரி இடைத்தேர்தலும் நடைபெற்றது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரியில் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் 2,59,933 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை வீழ்த்தினார்.

அதன் பின்னர் 2021 கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் 1,37,950 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இரண்டு ஆண்டுகளில் காங்கிரஸ் வெற்றி பெற்ற வாக்கு வித்தியாசம் குறைந்திருப்பதை கவனிக்க முடிகிறது. பாஜகவின் வாக்கு சதவீதம் 2019 இல் 35% சதவீதத்திலிருந்து 2021 இல் 40% சதவீதமாக அதிகரித்திருக்கிறது.

மேலும் அந்த நேரத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளில் திமுக-காங்கிரஸ் கூட்டணி 4 தொகுதிகளிலும், கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியில் அதிமுகவும், நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதியில் பாஜகவும் வெற்றி பெற்றது.

பொன்னாரின் பலம் என்ன?

விளவங்கோடு தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி பாஜகவில் இணைந்துவிட்டார். அவர் பாஜகவில் கன்னியாகுமரி தொகுதியை தனக்கு எதிர்பார்த்தார். எனவே இந்த முறை பொன்.ராதாகிருஷ்ணனுக்கு சீட்டு வழங்கப்படாதோ என அனுமானங்கள் இருந்த நிலையில் பொன்.ராதாகிருஷ்ணனுக்கே சீட்டை கொடுத்திருக்கிறது பாஜக. பொன்.ராதாகிருஷ்ணன் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர். 1991 இல் துவங்கி தற்போது 10 வது முறையாக தொடர்ச்சியாக கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடுகிறார். அதனால் தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் அவ்வளவு பரிச்சயம்.  மாநில பாஜக தலைவர், மத்திய இணை அமைச்சர் என்று பல முக்கிய பதவிகளை வகித்திருக்கிறார். எனவே தேசிய அளவில் பாஜகவில் செல்வாக்கு மிக்கவர்.

பொன்.ராதாகிருஷ்ணன் நாடார் வாக்குகளை குறிவைத்து தொகுதியில் சுற்றி சுழன்று வருகிறார். ஆனால் நாடார் வாக்குகளைப் பொறுத்தவரை இந்து நாடார் வாக்குகளே பாஜகவிற்கு கிடைக்கும். கிறித்தவ நாடார் வாக்குகள் பாஜகவிற்கு கிடைக்காது என்பதே பொன்.ராதாகிருஷ்ணனின் மிகப்பெரிய மைனஸ். அதேபோல் அதிமுக இந்த முறை பாஜக கூட்டணியில் இல்லாததால் அதிமுக வாக்குகள் பறிபோவதும் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பெரும் தலைவலியை உருவாக்குகிறது.

9 முறை தொகுதியில் போட்டியிட்டிருந்தாலும் 2 முறை மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறார். அதிலும் 1999 இல் திமுக கூட்டணியில் வெற்றி பெற்றார். 2014 ஆம் ஆண்டு திமுக, அதிமுக கூட்டணி இல்லாமல் மூன்றாவது அணியாக நின்று வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் காங்கிரசும் தனியாகவே போட்டியிட்டது. காங்கிரஸ், அதிமுக, திமுக என்று மூன்று கட்சிகளும் தனித்தனியாக சிறுபான்மையினர் வாக்குகளைப் பிரித்ததே அவரது வெற்றிக்கு காரணமாக அமைந்தது. அப்போது அவர் பெற்ற வாக்கு சதவீதம் என்பது 37.6% மட்டுமே. ஆனால் 2021 இடைத்தேர்தலில் 40% வாக்குகளைப் பெற்றும் அவரால் வெற்றி பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எக்ஸ்பிரஸ் வேகத்தில் விஜய் வசந்த்-  கை கொடுக்கும் தாரகை

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக களமிறங்கியிருக்கும் விஜய் வசந்த்தும் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவரே. இதன் காரணமாக பொன்.ராதாகிருஷ்ணனுக்கு செல்லும் நாடார் சமூக வாக்குகளில் விஜய் வசந்த் பிளவை ஏற்படுத்துவார். மேலும் கிறித்துவ நாடார், இதர கிறித்தவர்கள் மற்றும் இசுலாமியர்களின் வாக்குகளை பெருமளவில் விஜய் வசந்த் பெறுவார். இது அவரது மிகப்பெரிய பலமாக இருக்கிறது. இதைத் தாண்டி கன்னியாகுமரியில் காங்கிரசின் கட்டமைப்பு பலம், திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் வாக்குகளும் விஜய் வசந்திற்கு பலம் சேர்க்கிறது. ராகுல் காந்தி பாரத் ஜோடா யாத்திரையைத் துவங்கியதே குமரிதான் என்பதால் காங்கிரசுக்கு பெரும் வரவேற்பு இருக்கிறது.

ஆரம்பத்தில் அளந்து செலவு செய்த விஜய் வசந்த், போகப் போக தாராளமாக செலவு பண்ணுகிறார். இதனால் காங்கிரஸின் தேர்தல் வேலைகள் மிக வேகமாக இருக்கின்றன. அப்பா வசந்தகுமாரை விட தேர்தல் பணிகளில் தேர்ந்துவிட்டார் என்கிறார்கள் காங்கிரஸாரே.  காலை 8 மணிக்கு கிளம்பும் விஜய் வசந்த், ஓய்வுக்கெல்லாம் நேரம் ஒதுக்காமல் இரவு 10 மணி வரை சுற்றிச் சுழல்கிறார்.

விளவங்கோடு சட்டமன்ற இடைத் தேர்தலில் மீனவர் சமூகத்தைச் சேர்ந்த தாரகை கத்பர்ட் நிறுத்தப்பட்டிருப்பது அந்த சட்டமன்றத் தொகுதியில் மட்டுமல்லாமல் மக்களவைத் தொகுதி முழுவதும் காங்கிரசுக்கு மீனவர் ஓட்டுகளை உறுதி செய்துள்ளது.  இதனால் அதிமுக, நாம் தமிழர் ஆகிய மீனவர் சமூக வேட்பாளர்களை விட அதிக மீனவர் ஓட்டுகளை காங்கிரஸ் பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

விளவங்கோட்டில் போட்டியிடும் தாரகை அந்த சட்டமன்றத் தொகுதியைத் தாண்டி குமரி மக்களவையின் மற்ற சட்டமன்றத் தொகுதிகளுக்கும் விஜய் வசந்த்தோடு சேர்ந்து செல்கிறார். இது மீனவர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேகத்தைக் குறைத்த தளவாய்… கிலியில் அதிமுக

அதிமுக வேட்பாளர் பசிலியான் நசரேத் மீனவர் சமூகத்தில் முக்குவர் பிரிவைச் சேர்ந்தவர். கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை மீனவர்களுக்கு அரசியலில் உரிய பிரதிநிதித்துவம் தரப்படவில்லை என்ற வருத்தம் அவர்களிடையே தொடர்ந்து இருக்கிறது. இதையொட்டித்தான் மீனவர் வாக்குகளை குறிவைத்து அதிமுக மீனவ சமூகத்தைச் சேர்ந்த பசிலியன் நசரேத்தை களமிறக்கியிருக்கிறது.

அதிமுக வேட்பாளர் பசில்யான் நசரேத் தான் என சில மாதங்களுக்கு முன்பே குமரி அதிமுகவின் முக்கிய தலைவரான தளவாய் சுந்தரம் அறிவித்துவிட்டார்.  அப்போதே, கன்னியாகுமரியில் பிஷப்கள் தரப்பிலிருந்து பசிலியன் நசரேத்திடம் போட்டியிட வேண்டாம் என வலியுறுத்தினர்.  அப்படி போட்டியிட்டால் சிறுபான்மையினர் வாக்குகளைப் பிரித்து அது பாஜகவிற்கு சாதகமாகி விடும் என்பது அவர்களின் கருத்தாக இருந்தது. அதனால் பசிலியன் நசரேத்தும் எடப்பாடியை சென்னை சென்று சந்தித்து,  நான் போட்டியிடவில்லை என்று கூறினார். பலரும் வேட்பாளராக போட்டியிட முன்வராத நிலையில், ‘நீங்கள் போட்டியிடுங்கள். தேர்தல் முடிவு என்னவாக இருந்தாலும் உங்களுக்கு கட்சியில் உரிய பதவிகளை வழங்குவேன். வரும் சட்டமன்றத் தேர்தலிலும் உங்களுக்கு வாய்ப்பளிப்பேன்’ என்று கூறி பசிலியனையே வேட்பாளராக நிறுத்தியுள்ளார் எடப்பாடி.

ஆனால் யாரை நம்பி பசிலியான் தேர்தல் களத்தில் குதித்தாரோ, அந்த தளவாய் சுந்தரம் சமீப நாட்களாக தனது வேகத்தை திடீரென குறைத்துக் கொண்டுவிட்டார். தேர்தல் வேலைகளில் கில்லாடியானவர் தளவாய் சுந்தரம். 2019 இல் பொன்னார் அதிமுக-பாஜக கூட்டணியில் நின்றபோது அவருடன் ஓயாது சுற்றிய தளவாய் சுந்தரம், இப்போது மாலை நேர நிகழ்ச்சிகளில் மட்டும் தலைகாட்டிவிட்டு சென்றுவிடுகிறார். இது அதிமுகவினரிடையே கிலியை ஏற்படுத்தியுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் நிலை என்ன?

கன்னியாகுமரியைப் பொறுத்தவரை மலைகளை உடைக்கும் கனிம வளக் கொள்ளைக்கு எதிராக நாம் தமிழர் கட்சியினர் நடத்திய போராட்டம் அங்கு மக்களிடையே பரவலான வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இது நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதத்தில் பிரதிபலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 17,069 வாக்குகளை மட்டுமே பெற்ற நாம் தமிழர் கட்சியின் வாக்கு எண்ணிக்கை 2021 சட்டமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளும் சேர்த்து 84,086 ஆக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. இந்த முறை இன்னும் வாக்கு எண்ணிக்கையை உயர்த்திக் காட்ட வேண்டும் என்று கடும் முயற்சியில் நாம் தமிழர் கட்சியினர் வேலை செய்து வருகின்றனர்.

யாருக்கு பலம்?

மொத்தமாக பார்த்தோமென்றால் இந்த முறையும் கன்னியாகுமரியில் போட்டி என்பது காங்கிரசுக்கும் பாஜகவிற்கும் தான் என்பதே களத்தின் ரியாலிட்டியாக இருக்கிறது. அதிமுக கன்னியாகுமரியில் மூன்றாவது இடத்திற்கு செல்வதற்கான வாய்ப்புகளே அதிகம் இருக்கின்றன. மதம், சாதி இரண்டுமே கன்னியாகுமரி களத்தை தீர்மானிக்கும் முக்கிய factor களாக இருப்பதால் தமிழ்நாட்டின் மற்ற தொகுதிகளைவிட கன்னியாகுமரி தொகுதியில் பறக்கும் அனல் கூடுதலாகவே இருக்கிறது.

விவேகானந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக