திங்கள், 15 ஏப்ரல், 2024

கார்த்தி சிதம்பரம் ; மதுரை மீனாட்சி அம்மன் - ராமேஸ்வரம் கோயில்களை அயோத்தி ராமர் கோயில் ட்ரஸ்ட் கையகப்படுத்த திட்டம்!

 tamil.samayam.com -  ஜே. ஜாக்சன் சிங்  :  மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கும், ராமஸ்வேரம் கோயிலுக்கும் பெரிய ஆபத்து வரவுள்ளதாக சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும்,
அத்தொகுதியின் தற்போதைய எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளது பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த இரண்டு கோயில்களையும் குறிவைத்து பாஜக காய் நகர்த்தி வருவதாக அவர் பகீர் தகவலை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 4 தினங்களே உள்ளதால் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.
அந்த வகையில், சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் தனது தொகுதியில் இன்று பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறிய தகவல்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்துவதாக இருந்தன. அவர் கூறியதாவது:



ஒரு முக்கியமான விஷயத்தை சொல்றேன். தயவுசெய்து கவனமாக கேளுங்க. அயோத்தியில் ஒரு கோயிலை (ராமர் கோயில்) பாஜக கட்டி இருக்காங்க. அந்த சர்ச்சைக்குள் நான் போக விரும்பவில்லை. நம்பிக்கை உள்ளவர்கள் கோயிலுக்கு போய்ட்டு போறாங்க. அது விஷயம் கிடையாது. அந்தக் கோயிலை அரசாங்கம் கட்டவில்லை. நல்லா புரிஞ்சுக்கோங்க. ஒரு தனியார் டிரஸ்ட் (ஸ்ரீராமஜென்ம பூமி டிரஸ்ட்) மூலமாக அந்தக் கோயிலை கட்டி இருக்காங்க. நம்ம ஊர்ல இருக்குற அறநிலையத்துறை மாதிரி எல்லாம் கிடையாது. அந்த டிரஸ்ட்டிடம் இப்போது 3000 கோடி ரூபாய் பணம் இருக்கு.

இன்னொரு விஷயம் என்னவென்றால், அந்த டிரஸ்ட் வெளிநாடுகளில் இருந்தும் பணம் வாங்கலாம் என்றும், அப்படி பணம் வாங்கினால் அதற்கு வரி கிடையாது எனவும் விதிமுறையை வைத்திருக்கிறார்கள். அதனால் அந்த டிரஸ்ட்டுக்கு அமெரிக்கா, பிரிட்டன் என எல்லா நாட்டிலும் இருக்கும் மார்வாடிகளும் பணம் அனுப்புறாங்க. இன்னும் கொஞ்சம் நாளில் அந்த டிரஸ்ட்டில் 11000 கோடி ரூபாய் பணம் இருக்கும்.

இந்தத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்து விட்டார்கள் என்றால், அந்தக் கோயிலுக்கு தொடர்புடைய மற்ற மாநிலங்களில் உள்ள சில இந்து கோயில்களை அந்த டிரஸ்ட்டில் சேர்க்கப் போகிறார்கள். அப்படி தமிழ்நாட்டில் உள்ள 2 கோயில்களை அவங்க குறி வெச்சிருக்காங்க. முன்னாடியே சொல்றேன். கவனமா கேட்டுக்கோங்க. ஒன்று ராமேஸ்வரம் கோயில். இன்னொன்று மதுரை மீனாட்சி அம்மன் கோயில். இந்த 2 கோயில்களையும் இங்கிருந்து எடுத்து, அந்த டிரஸ்ட்டுக்குள் சேர்க்கப் போகிறார்கள்.

அப்படி அந்த டிரஸ்ட்டுக்குள் சேர்த்ததற்கு பிறகு என்ன நடக்கும் தெரியுமா? இந்தக் கோயில்களை எப்படி நடத்த வேண்டும் என்பதை அந்த டிரஸ்ட்டு தான் முடிவெடுக்கும் என்று சொல்வார்கள். அப்புறம், அந்தக் கோயில்களில் எப்படி வழிபாடு நடத்த வேண்டும் என்பதையும் நாங்கள்தான் முடிவெடுப்போம் என்று சொல்வார்கள். அதன் பிறகு, யார் கோயிலுக்குள் வரலாம், யார் கோயிலுக்குள் வரக்கூடாது என்று சொல்வார்கள்.

பின்னர், கோயிலை சுற்றி யார் யார் கடை வைக்கலாம், கோயிலை சுற்றி எந்த ஜாதிகாரர்கள் தங்கலாம் என்று அவர்கள் சொல்வார்கள். அப்படி நடந்தால், அம்பேத்கர், காந்தி, தந்தை பெரியார், காமராஜர், அண்ணா ஆகியோர் போராடியது எல்லாம் வீணாகிவிடும். மீண்டும் அந்த காலத்தில் மனு சாஸ்திரத்தில் என்னென்ன சொன்னார்களோ அது நடைமுறைக்கு வந்துவிடும். தமிழ்நாட்டில் நடைபெற்ற சமூக நீதி எல்லாம் பின்னுக்குள் தள்ளப்படும். இது நிச்சயம் நடக்கும். நீங்கள் நினைப்பதை விட அவர்கள் ரொம்ப டேஞ்சரானவர்கள். இப்படி நடப்பதும் நடக்காததும் உங்கள் கையில்தான் இருக்கிறது. இவ்வாறு கார்த்தி சிதம்பரம் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக