வெள்ளி, 26 ஏப்ரல், 2024

யாழ்ப்பாண தேசவழமைச் சட்டமும் , வெள்ளாளியமும்! அருண் சித்தார்த்

 Arun Siddharth : தேசவழமைச் சட்டமும் , வெள்ளாளியமும்!
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார் ஆகிய 5 மாவட்டங்களை உள்ளடக்கிய வடமாகாணத்துக்கு மட்டும் செல்லுபடியாகும் பிராந்தியச் சட்டமான தேசவழமைச்சட்டம் 12 வெள்ளாள முதலியார்களின் பரிந்துரையின் பேரில் இலங்கையின் அன்றைய ஆட்சியாளர்களான ஒல்லாந்தர்களினால் 1707 ஆம் ஆண்டு சட்டமாக்கப்பட்டது.
இந்தச் சட்டம் அன்று 9 சரத்துகளாக வகுக்கப்பட்டது. அதில் 8 ஆவது சரத்து அடிமைகள் பற்றிய சட்டமாக இருந்தது. அந்த 8 ஆவது சரத்து மேலும் 8 பிரிவுகளாக அடிமை என்பவர்கள் யார் யார் ? என்னென்ன சாதியினர் அடிமைகளாக வரையறுக்கப்பட்டவர்கள் ? அவர்களுடைய கடமைகள் என்ன? அவர்கள் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என உபசட்டங்களை விரிவாக வியாக்கியானம் செய்கின்றது.
அந்த 8 ஆவது பிரிவு ஆங்கிலத்தில் இவ்வாறு ஆரம்பிக்கின்றது.
The Thesawalamai or The Laws And Customs Of The Malabar Of Jaffna.
Section VIII Of The Male And Female Slaves.
1. Different classes of Slaves


2.Marriages of slaves
3.Divisions of the property of slaves dying without issue.
4.Division of property where there are children
5.Duties of slaves
6.Sale of slaves having lands.
7.Mode of emancipating slaves
8.Of succession to the property of an emancipated slave.
The Slaves Of This Country Are Divided Into Four Castes. Viz., Koviyars, Chandars, Pallars, and Nalavars.
இந்தச் சட்டத்தின் படி கோவியர் , சாண்டார், நளவர் , பள்ளர் ஆகிய 4 சாதிகளும் சட்டரீதியான அடிமைகளாக பிரகடனம் செய்யப்பட்டார்கள்.
இதந்சட்டத்தின்படி கோவியர் , சாண்டார் வெள்ளாளர்களின் வீட்டு அடிமைகளாக இருந்தனர்.
ஆனால் நளவரும், பள்ளரும் ஏனைய பஞ்சமர் சாதிகளான
அம்பட்டர் , வண்ணார் , பறையர் போன்று தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கப்பட்டு மிக மோசமாக விலங்குகளிலும் கீழாக நடத்தப்பட்டனர்.
இவர்களுக்கு கல்வி கற்கவோ, காணி வைத்திருக்கவோ அல்லது காணி ஒன்றை வாங்குவதற்கோ , கோயில் ஒன்றுக்குள் உள் நுழைவதற்கோ , பொது இடங்களை பாவிப்பதற்கோ, பகலில் வீதிகளில் நடமாடுவதற்கோ உரிமையற்றவர்களாக சட்டம் போட்டு ஒடுக்கப்பட்டனர். இவர்களுடைய பெண்கள் வெள்ளாளரின் பாலியல் அடிமைகளாக நடத்தப்பட்டனர். இவர்கள் என்ன உடுப்புப் போட வேண்டும் என்பது முதற்கொண்டு , இவர்கள் எவ்வாறு தலைமயிரை வெட்ட வேண்டும் என்பது வரை சட்டம் இருந்தது. அடிமைகள் திருமணம் செய்வதற்கு கூடச் சட்டம் இருந்தது. பிள்ளை பெறுவதற்குக் கூடச் சட்டம் இருந்தது.
ஒரு அடிமை இன்னொரு அடிமையை மட்டுமே திருமணம் செய்ய முடியும். அதுவும் அந்தப் பெண் அடிமையைத் தனது பாலியல் அடிமையாக வைத்திருக்கும் வெள்ளாள முதலியார் சம்மதக் கடிதம் வழங்க வேண்டும். அதாவது தனது பெண் அடிமை திருமணம் செய்வதற்கு தான் சம்மதிப்பதாக அவர் கடிதம் வழங்க வேண்டும்.
அடிமைகள் இருவருக்கும் பிறக்கும் குழந்தை வெள்ளாள எஜமானரின் சொத்தாகவே கருதப்படும் . அதாவது அக்குழந்தை ஆணோ பெண்ணோ அது பிறப்பிலேயே வெள்ளாள எஜமானரின் அடிமையாகவே சட்டம் வரையறுக்கின்றது.
தமக்குப் பிறக்கும் பிள்ளைக்குப் பெயர் வைப்பதற்குக் கூட அடிமைகளான பெற்றோருக்கு உரிமை கிடையாது. பிள்ளையொன்று பிறந்தவுடன் கிராம விதானைக்கு அறிவிக்க வேண்டும் . விதானையின் கந்தோரில் அடிமைச் சாதிகளின் பிள்ளைகளுக்கு வைக்கப்பட வேண்டிய பெயர்ப் பட்டியல் தாங்கிய புத்தகம் ஒன்று இருக்கும். அதில் உள்ள பெயர்களில் ஒன்றை விதானையார் சொல்லுவார். அந்தப் பெயரே அப்பிள்ளையின் பெயராகும்.
இவ்வாறு கொடுரமாக எம்மை ஒடுக்கியது சிங்களவர் அல்ல.
தமிழன் எனத் தன்னை மார் தட்டிக் கொண்ட வெள்ளாளியத் தமிழன் ஆகும்.
ஒடுக்கப்படும் மக்களே இப்போது சொல்லுங்கள் எம்மை ஒடுக்கியது சிங்களவனா? வெள்ளாளத் தமிழனா?
எம்மை அடிமைகளாக நடத்தியது சிங்களவனா? வெள்ளாளத் தமிழனா?
இனியேனும் சிந்தியுங்கள். ஒடுக்கப்படும் மக்களே! ஒன்று சேருங்கள்.
தமிழ், தமிழன் , தமிழ் தேசியம் , ஈழம் எனும் வெள்ளாளத் தமிழனின் ஒற்றையடையாளங்களை உதறித் தள்ளிவிட்டு தலித் இன மக்களாக ஒன்று சேருங்கள்.
ஒடுக்கப்படும் மக்களே ஒன்று சேருங்கள்.. எமக்கான பாதையை நாமே உருவாக்குவோம். அரசியல் அதிகாரம் பெருவோம். வெள்ளாளியத்தை வீழ்த்துவோம்.
“ வெள்ளாளிய அரசியல் கட்சிகளில் உழைக்கும் அவர்களுக்கு ஒட்டுப் போடும் ஒடுக்கப்படும் மக்களே!
இன்று அவர்கள் உங்களைத் தழுவிக் கொள்ளலாம். இன்சொல் சொல்லி மகிழ்விக்கலாம். அருகிருத்தி அமுதூட்டலாம்.
ஆனால் உங்கள் அரசியல் விருப்புகளை ஒருபோதும் வளர்க்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்களின் அரசியலில் எதிரியும் அடிமையும் மட்டுமே இருக்க முடியும்.
எதிரியாக சிங்களவர்களைக் காட்டுவார்கள். அடிமையாக உன்னை உள்ளூர வைத்திருப்பார்கள். நீ ஆற்றலற்றவனாக அடிபணிந்திருப்பதையே அவர்கள் விழைவார்கள். தென்னிலங்கை அரசியல் கூட்டு வழியாக நீ ஆற்றல் பெற அவர்கள் ஒப்பவே மாட்டார்கள். “
அவர்களின் இந்தச் சிந்தனை முறைக்கு இன்று அருண் சித்தார்த் ஆகிய நானே சிறந்த உதாரணம்.
ஐக்கிய தேசியக் கட்சியின் எனது நியமனத்தை ஒற்றைத் திரளாக அவர்கள் எதிர்ப்பதே இதற்குச் சாட்சியல்லவா???
அஅரண் சித்தார்த்
யாழ்ப்பாணம்
25/04/2024

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக