ஞாயிறு, 28 ஏப்ரல், 2024

மோடி : இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், ஐந்து ஆண்டுகளில் ஐந்து பிரதமர்கள்

 மாலை மலர் :  பிரதமர் மோடி இன்று மகாராஷ்டிராவின் மேற்கு பகுதியில் உள்ள கோலாபூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:-
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி முதல்வர் பதவியை சுழற்சி முறையில் வழங்க முடிவு செய்துள்ளது. துணை முதல்வராக இருக்கும் நபரிடம் 2.5 ஆண்டுகள் கழித்து முதல்வர் பதவியை வழங்க திட்டமிட்டுள்ளது. சத்தீஸ்கர் மற்றம் ராஜஸ்தானில் இதே ஏற்பாட்டை செய்திருந்தனர்.
கர்நாடகா மாநிலத்தின் மாடலான ஓபிசி இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களை சேர்த்ததை மற்ற இடங்களிலும் நீட்டிக்க காங்கிரஸ் விரும்புகிறது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி சமூக நீதியை கொலை செய்ய சபதம் செய்துள்ளது.



காங்கிரஸ் கட்சி அரசியலமைப்பை மாற்றி மதம் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கி தலித் மற்றும் ஓபிசிக்களின் இடஒதுக்கீடு பயனை பறிக்க விரும்புகிறது. காங்கிரஸ் கட்சி ராமர் கோவிலுக்கு எதிராக மட்டும் இருக்கவில்லை. கும்பாபிஷேகத்திற்கான அழைப்பையும் நிராகரித்தது.

கோலாபூர் கால்பந்து முனையம் என அறியப்படுகிறது. 2-வது கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான கொள்கைகள் மற்றும் வெறுப்பு அரசியலில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் கூட்டணி இரண்டு சுய கோல்களை (Self-Goals) அடித்துள்ளபோது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 2-0 என முன்னிலை வகிக்கிறது என்பதை என்னால் சொல்ல முடியும்.

3-வது கட்ட தேர்தலில் வாக்காளர்கள் அதுபோன்று கோல் அடிப்பார்கள் என நம்புகிறேன். அதன்மூலம் இந்தியா கூட்டணி தோற்கடிக்கப்படும். அடுத்தடுத்த கட்ட தேர்தல்களில் இந்தியா கூட்டணி தோல்வியை சந்திக்க வேண்டும்.

காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 37 திரும்ப கொண்டு வரப்படும், சிஏஏ ரத்து செய்யப்படும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மோடியின் முடிவை யாராலும் மாற்ற முடியுமா?, அப்படி செய்தால், அதன் பின் விளைவு என்ன என்பது அவர்களுக்கு தெரியுமா?.

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், ஐந்து ஆண்டுகளில் ஐந்து பிரதமர்கள் என முணுமுணுக்கப்படுகிறது. அவர்களால் மூன்று இலக்க இடங்களை பிடிக்க முடியாது அல்லது ஆட்சி அமைப்பதற்கான கதவை தட்ட முடியாது. இருந்தபோதிலும் அவர்கள் வாய்ப்பு பெற்றால் ஒவ்வொரு வருடத்திற்கும் ஒவ்வொரு பிரதமர் என்ற திட்டத்தை வைத்துள்ளது.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக